Tue. May 14th, 2024

பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலை அதிகரித்து வருவது தொடர்பாக, ஒவ்வொரு குடிமகனின் ஆதங்கத்தையும், வேதனையையும் நான் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

ஒருபுறம் வேலையிழப்பு, ஊதிய குறைப்பு போன்றவற்றால், நடுத்தர மக்கள் வருமான குறைவையும் சந்தித்து வருகின்றனர். இந்தநேரத்தில், பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலை கட்டுப்பாடில்லாமல் உயர்ந்து வருகிறது

இதன் காரணமாக, உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் எப்போதும் இல்லாத வகையில் விலை அதிகரித்துள்ளது.

இந்த நேரத்தில்கூட மக்களின் துயரத்திலும், வேதனையிலும் அரசு லாபம் ஈட்ட நினைப்பது, மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

பெட்ரோல் பல்வேறு பகுதிகளில் லிட்டர் 100 ரூபாயைக் கடந்துள்ளது. இந்த விலை உயர்வு, லட்சக்கணக்கான விவசாயிகளுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த கச்சா எண்ணெய் விலையில் இப்போது பாதிதான் இப்போது இருக்கிறது. இருப்பினும் மத்திய அரசு கடந்த 12 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையைத் தொடர்ந்து உயர்த்தியுள்ளது. இந்த நேரத்தில், தொடர்ந்து கடந்த கால ஆட்சியைக் குறை கூறுவது வேதனையாக இருக்கிறது.

கடந்த 2020ம் ஆண்டில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை குறைந்தது. ஆனால் அதன் பலன் மக்களுக்குக் கொடுக்கப்படவில்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களின் சுமையைக் குறைக்க வேண்டும். ஆனால், அதற்கு எதிர்மாறாக, செயல்படக்கூடாது.

ஆதலால், பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வைத் திரும்பப் பெற்று, நடுத்தர மக்களுக்கும், விவசாயிகளுக்கும், ஏழைகளுக்கும் அந்தப் பலனை வழங்கிட வேண்டும்.

இவ்வாறு சோனியா காந்தி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.