Mon. Apr 29th, 2024

சிறப்புக் கட்டுரை பிரபல எழுத்தாளர் பாலன் நாச்சிமுத்து

)புதிய அரச காலம்(New Kingdom): இதன் காலம் கி.மு. 1550-1070 வரை ஆகும். இக்காலகட்டத்தில் 18ஆவது முதல் 20 ஆவது அரச வம்சங்கள் ஆண்டன. இந்த 18ஆவது அரச வம்ச காலத்தில் எகிப்து மிகவும் வளமும், செல்வாக்கும் பெற்ற நாடாக இருந்தது. இக்காலத்தில் கேட்சிசுட்(Hatshepsut) என்ற புகழ்பெற்ற, திறமையான பெண் அரசி ஆண்டாள். இதன்பின் கி.மு. 1400இல் ஆட்சிக்கு வந்த துட்மோசு-III(THUTMOSE-III) என்பவன் சிரியா, பாலசுதீனம் ஆகியவற்றை வென்றான். மேலும் குசு, நுபியா ஆகியவற்றை வென்றதன் மூலம் எகிப்து மிக அதிக அளவான செல்வமும், வளமும், வலிமையும் கொண்ட நாடாக ஆகியது. 19ஆவது அரச வம்சத்தைச் சேர்ந்த இரமெசசு-II(Ramesses-II) என்பவன் ஒரு வலிமையான அரசனாக இருந்தான். கிட்டைட்டி அரசன் மீது படையெடுத்து வெற்றி பெற்றான். 20 ஆவது அரச வம்சத்தைச்சேர்ந்த இரமெசசு-III (Ramesses- III) என்பவனும் வலிமை மிக்கவனே. அவன் எகிப்தின் மீது நடந்த பல படையெடுப்புகளை வென்றான். ஆனால் இப்போர்களால் எகிப்து பலவீனமாகியது. அதன் பின் மூன்றாவது இடைக்காலம்(கி.மு. 1070-715) வருகிறது. இக்காலத்தில் 21ஆவது முதல் 24ஆவது அரச வம்சங்கள் ஆண்டன. இவை பலவீனமானவை.மிட்டணி(MITANNI) அரசு:இது வடக்கு மெசபடோமியாவில் இருந்த ஒரு அரசு. வரைபடத்தில் இது காட்டப்பட்டுள்ளது. கி.மு. 1400இல் இவர்கள் சிரியாவைக் கைப்பற்ற எகிப்தோடு போரிட்டனர். ஆனால் கிட்டைட்டி அரசைக் கண்டு பயந்து மிட்டணி இளவரசியை எகிப்து அரசனுக்கு கொடுத்து மண உறவு கொண்டனர். எனினும் கிட்டைட்டி அரசு அவர்களை கி.மு. 1370இல் வென்றது. இறுதியாக அவர்களது அரசு கி.மு. 1350இல் அசிரிய அரசோடு இணைக்கப்பட்டது. இவர்களிடமிருந்து போரில் தேரைப் பயன்படுத்தும் முறையை கிட்டிட்டி அரசர்கள் கற்றுக்கொண்டனர். இவர்கள் மொழி உறியன்(Hurrian). (The World Book Encyclopedia, USA, 1988, vol-13, page: 681).பிற்காலகட்டமும் பாரசீக, கிரேக்க ஆட்சியும்: இக்காலகட்டத்தில்(Late Period – கி.மு. 715-332) அசிரீயர்கள்( Assyrians) கி.மு. 671 இல் எகிப்தின் 25ஆவது வம்சத்தை தோற்கடித்து எகிப்தின் 26ஆவது அரச வம்சத்தைத் தொடங்கினர். இதன் முதல் அரசன் 54 வருடம் தொடர்ந்து ஆண்டு எகிப்துக்கு ஒரு நிலையான அரசை வழங்கினான். அதன்பின் கி.மு. 610-526 வரை ஆண்ட 4 அரசர்கள் பாபிலோனியர்களைத் தடுத்து நிறுத்தி எகிப்துக்கு அமைதியை வழங்கினர். ஆனால் பாரசீக அரசன் காம்பிசசு(Cambyses – கி.மு.530-522) என்பவன் எகிப்தை வென்று 27ஆவது அரச வம்சமாக எகிப்தை ஆண்டான். அதன்பின் விடுதலை அடைந்த எகிப்தை 28முதல் 30ஆவது அரச வம்சங்கள் ஆண்டன. அதன்பின் அலெக்சாண்டர் கி.மு. 332இல் அதனைக் கைப்பற்றி அலெக்சாண்ட்ரியா என்ற நகரத்தை உருவாக்கினான். அவன் இறந்த பிறகு பல்வேறு போர்களுக்குப்பின் இறுதியில் கி.மு. 305இல் கிரேக்க வீரன் டாலமி(Ptolemaic dynasty) தனது டாலமி வம்சத்தை எகிப்தில் நிறுவினான். இதன் இறுதி அரசி கிளியோபாத்ரா- VII(Cleopatra -VII ) மிகவும் புகழ் பெற்றவள். இவள் காலம் கி.மு. 51-30. உரோம் எகிப்தைக் கைப்பற்றும் வரை(கி.மு.30) கிரேக்க டாலமி வம்சம்(கி.மு.305-30) எகிப்தை ஆண்டது.டாலமி வம்ச காலத்தில் தமிழகத்தோடு மிக அதிகக் கடல் வணிகம் நடைபெற்றது. எகிப்திய உரோம் அரசின் காலம்(கி.மு.30-கி.பி.642). உரோம் கி.பி. 395இல் இரண்டாகப் பிரிந்த போது கிழக்கு உரோம் அரசின் பகுதியாக எகிப்து இருந்தது. பின் கி.பி. 642இல் நடைபெற்ற அரேபியப் படையெடுப்பால் இந்நாடு ஒரு அரபு-முசுலீம் நாடாக ஆகியது. டாலமி வம்ச காலத்திற்கு முன்வரை அங்கு பண்டைய எகிப்து மொழி பேசப்பட்டது. பின் கிரேக்க, உரோம், அரேபியா ஆட்சி காலத்தில் பேசும் மொழியில் பல மாற்றங்கள் ஏற்பட்டு, அங்கு தற்பொழுது அரேபிய மொழி பேசப்படுகிறது.நகர அரசுகளும் பேரரசுகளும்: நகர அரசுகள் கி.மு. 3100 வாக்கில் ஒன்றிணைக்கப்பட்டு முதலாம் அரச வம்சம் ஆளத்தொடங்கிய பின் எகிப்து பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்ததாகப் பலர் கருதலாம். ஆனால் நகர அரசுகளின் காலத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களே அதற்கு அடித்தளமாக இருந்தன. நகர அரசுகள் காலத்தில் உழைப்பைச் சேமிக்கும் தொழில் நுட்பமும், கருவிகளும் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வந்தன. ஆனால் அதன்பின் வந்த பேரரசுகள் அது குறித்துக் கவலைப்படவில்லை. பொதுவாக நகர அரசுகள் இல்லாத பேரரசுக் காலத்தில் நடப்பது குறித்து, “மூட நம்பிக்கைகளை ஊக்குவிப்பதன்மூலம் ஆட்சியாளர்கள் மக்கள் மீதான தங்கள் அதிகாரத்தைப் பலப்படுத்திக் கொண்டனர். சுமேரிய அரசர்கள் எகிப்திய பரோவாக்கள் தங்களுக்கு கடவுளுக்கு இணையான சக்திகள் இருப்பதாகக் கூறிக்கொண்டனர். அவர்கள் சமுதாயத்தின் படிப்பறிவு பெற்ற பூசாரிகளின் சிறுபான்மையினரிடமும், முழு நேர நிர்வாகிகளிடமும் அறிவியல் சாதனை முயற்சிகளை ஊக்குவிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் முந்தைய நகரப்புரட்சியின் போது உருவாக்கப்பட்ட அறிவு அமைப்பைப் பற்றிக்கொண்டு, அதனை ஏறத்தாழ மத அளவிளான ஆராதனையுடன் நடத்தி, பிரதிகளைப் படி எடுப்பது, நிறுவப்பட்ட கருத்துகளை எடுத்துச்செல்வது ஆகியவற்றைச் செய்தனர். ஆனால் புதிய தேடல்கள் எதிலும் முயற்சிகளைத் தொடர வில்லை. தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில் அறிவியல் வறட்டுக் கோட்பாடாகச் சீரழிந்து போனதும், வறட்டுக்கோட்பாடு மந்திர தந்திரமாக சீரழிந்ததும் தொடர்ந்தது. இது நிகழ்ந்தது வரலாற்றில் கடைசி முறையாக இருக்கவில்லை” என கார்டன் சில்டே கூறுகிறார்(1). மேலும் பேரரசுக் காலத்திய ஆளும் வர்க்கம் மனித இனத்தின் உற்பத்தி ஆற்றல்களின் வளர்ச்சியைத் தடுத்தது. தனது பேராசையால் மக்களின் வாழ்வாதாரங்களை, சமுதாயத்தின், மூலவளங்களை அளவுக்கு மீறிச் சுரண்டியது. அதன் காரணமாக தட்பவெட்ப நிலையில் ஏற்படும் சிறு மாற்றம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. எகிப்தின் பழைய முடியாட்சியின் காலத்தில் நைல் நதியின் வெள்ளப்பெருக்கு மட்டம் குறைந்தபோது நீர்ப்பாசனம் பாதிக்கப்பட்டு வறுமையும் பஞ்சமும் பலமுறை தலை விரித்தாடியது. அதனால் அரசுகள் மாறின. 1200 ஆண்டுகளுக்கு முன் ஆளும் வர்க்கங்கள் சமூக வளத்தை மிக மிக அதிகமாகச் சுரண்டியதால் அமெரிக்காவின் மாயன் நாகரிகம் அழிந்து போனது(2). வரலாற்றில் இது போன்ற பல விடயங்கள் தொடர்ந்து நடந்து வந்துள்ளன.

பார்வை:1, 2. உலக மக்களின் வரலாறு, கிரிசு ஆர்மன், விடியல் பதிப்பகம், சூலை-2017, தமிழ் மொழிபெயர்ப்பு – நிழல்வண்ணன், வசந்தகுமார், பக்:75,76.

சான்று: 1. The World Book Encyclopedia, USA, 1988, vol-6, page: 140-142. 2.Ancient Cities By Charles Gates 2nd edition, page: 78-117.3.Ancient History of Encyclopedia by Joshua T.Mark, 2.9.2009.