Fri. Apr 26th, 2024

வரலாற்றுச் சிறப்புக் கட்டுரை… பிரபல எழுத்தாளர் பாலன் நாச்சிமுத்து…..

1950 வாக்கிலேயே யுனெசுகோ அறிஞர்கள் ‘இனம்’ என அடையாளப்படுத்துவதற்குப் பதில் ‘தேசிய இனம்’ என்றுதான் அடையாளப்படுத்தவேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்கள். ஆனால் இந்தியாவில், தமிழகத்தில் இன்றும் பலர் மக்களை, ஆரிய இனம், திராவிட இனம் எனத் தவறாக ‘இனம்’ என்பதைக்கொண்டு அடையாளப் படுத்தி வருகிறார்கள். அதற்குப்பதில் பஞ்சாபியர்கள், வங்காளிகள், மராத்தியர்கள், தமிழர்கள், தெலுங்கர்கள் என தேசிய இன அடிப்படையில்தான் அடையாளப்படுத்த வேண்டும். எனவே இந்தியாவில் ஆரியர்களும் இல்லை, திராவிடர்களும் இல்லை. அதற்குப் பதில் இந்தியாவில் இந்தியமும் பார்ப்பனியமும்தான் உள்ளது.

இந்தியாவில் ஆரியர்களுக்குப் பதில் பஞ்சாபிகள், வங்காளிகள், மராட்டியர்கள் போன்றவர்கள்தான் இருக்கிறார்கள். அதுபோன்றே தென்னிந்தியாவில் திராவிடர்களுக்குப் பதில் தெலுங்கரும், கன்னடரும், மலையாளிகளும்தான் உள்ளனர். எனவே இந்தியாவில் ஆரியர்களோ, திராவிடர்களோ இல்லை. இங்கு அதுபோன்றே யார் தமிழர், யார் தமிழ் தேசத்தவர்? என்ற கேள்வி இருந்து வருகிறது.

தமிழைத்தாய் மொழியாகக்கொண்டவர்கள் தமிழர்கள். தமிழ் நாட்டில் இருக்கிற தமிழ்க்குடிகளான அவர்கள் இயற்கையாகவே தமிழ் தேசத்தவர்களாகவும் இருக்கிறார்கள். தமிழகத்தில் மிக நீண்ட காலமாக வாழ்ந்து வருகிற, தமிழகத்தில் சொத்துபத்துக்களை, சொந்தபந்தங்களை உடைய, இங்கேயே குடும்ப உறவுகளைக் கொண்ட, அவர்களுடைய வாழ்வியலும், வருமானமும் இன்னபிறவும் தமிழகத்தைச் சார்ந்ததாக இருக்கிற தமிழர் அல்லாத அனைவரும் தமிழ்தேசத்தவர்கள் ஆவர். சுருக்கமாகத் தமிழகத்தில் ஒருசில தலைமுறைகளாக வாழ்ந்து வருகிற, பொருளாதார அடிப்படையிலும், சமூக அடிப்படையிலும் தமிழகத்தைச் சார்ந்துள்ள அனைத்துத் தமிழர் அல்லாதவர்களும்(பிற மொழியாளர்கள்) தமிழ் தேசத்தவர்கள் ஆவர்.

ஆனால் வெளி நாட்டில் சொத்துபத்துக்களை, சொந்தபந்தங்களை உடைய, அந்த நாட்டின் குடிமகனாகி அங்கு நீண்ட காலம் வாழ்ந்து வருகிற ஒருவரை, அவருடைய வாழ்வியலும், வருமானமும் இன்னபிறவும் அந்நிய நாட்டை சார்ந்து இருக்கிற ஒருவரை அவர் தமிழர் எனினும் தமிழ் தேசத்தவராக ஏற்க இயலாது. சுருக்கமாக, ஒருசில தலைமுறைகளாக வெளிநாட்டில் வசித்துவருகிற, பொருளாதார அடிப்படையிலும், சமூக அடிப்படையிலும் தமிழகத்தைச் சார்ந்திராத ஒருவர் தமிழர் எனினும் அவர் தமிழ்தேசத்தவர் அல்ல.அவர் தமிழர் என்ற முறையில் அவருக்கு பல சலுகைகளை வழங்கலாம். ஆனால் அவரைத் தமிழ்தேசத்தவராக ஏற்க இயலாது.

தமிழ்தேசத்தவர்கள்தான் தமிழ்நாட்டின் தத்துவார்த்த அரசியல் பொருளாதாரக் கொள்கை முதலான அனைத்தையும் உருவாக்குகிற, அவை குறித்து முடிவெடுக்கிற முழு உரிமையுடையவர்கள். தமிழ் தேசத்தவர்கள் அனைவரும் அனைத்திலும் சம உரிமை உடையவர்கள். தமிழ் தேசத்தவர்கள் அனைவரும் தங்களுக்கான உரிமைகளுடன் சில கடமைகளையும் கொண்டவர்கள். தமிழ் மொழி, தமிழக வரலாறு, அதன் பண்பாடு, அதன் பண்டைய மரபுகள் முதலியனவற்றைப் போற்றிப் பாதுகாப்பவர்களாகவும் அவற்றின் மீது உண்மையான பற்று கொண்டவர்களாகவும் இருப்பது என்பது அவர்களின் அடிப்படைக் கடமையாகிறது.

பண்டைய நாகரிகங்களும் மொழியும் – (ஈ)இனக்குழுக்களும் நாகரிகங்களும்:

பண்டைய உலக நாகரிகங்கள் – 29

இன்னொரு சான்றாக எகிப்து மக்களை எடுத்துக்கொள்வோம். அவர்கள் 6000 வருட கால நாகரிகம் உடையவர்கள். கி.மு. 300 வரை அவர்கள் தங்களது எகிப்து மொழியைப் பேசினார்கள். அதன்பின் அவர்கள் கிரேக்க ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டார்கள். 300 வருடங்களுக்குப்பின் உரோம் ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டார்கள். கிரேக்க, உரோம் ஆட்சிகளில் சுமார் 1000 வருட காலமாக கிரேக்கம்தான் ஆட்சியாளர்களின் மொழியாக இருந்து வந்தது. அதனால் எகிப்து மொழி அழிந்து கொண்டிருந்தது. இந்நிலையில் முசுலீம் படையெடுப்பால் அங்கு அரேபிய மொழி கி.பி.700லிருந்து ஆட்சி மொழியானது. அவர்கள் முசுலீம்களாக ஆனார்கள்.

நாளடைவில் பழைய எகிப்து மொழி, கிரேக்க மொழி முதலியன இல்லாது போய் அரபு மொழி அந்நாட்டின், அம்மக்களின் மொழியாக ஆனது. அது இன்று எகிப்திய அரேபிய மொழியாக இருக்கிறது. ஆனால் அவர்கள் அரேபியர்கள் அல்ல. உலகில் பல நாடுகளில் அரபு மொழி சிறு சிறு வேறுபாடுகளுடன் பேசப்படுகிறது. அரபு மொழி பேசுகிற அனைவரும் அரேபியர்கள் அல்ல. ஈராக்கிலும் அரபுதான் பேசப்படுகிறது. அவர்களும் அரேபியர்கள் அல்ல. அங்கு ஆரியர்களும் கூட பெரிய அளவு குடியேறினார்கள். ஆகவே மொழி வேறு, இனம் வேறு என்பது இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதோடு இனம் என்ற சொல்லைக் கொண்டு மக்களை அடையாளப்படுத்தக்கூடாது என்பதும் வலியுறுத்தப்படுகிறது.

ஆகவே இனம் என்பதற்குப்பதில் தேசிய இனம் என்பதைப் பயன்படுத்த வேண்டும் என்பதும் சொல்லப்பட்டுள்ளது.ஒரு நாட்டு மக்களின் மொழி முழுமையாக வேறு மொழியாக மாறுவதை வரலாற்றில் பலமுறை பார்க்க முடிகிறது. மக்கள் மதம் மாறுவதால் மொழி மாறுவதில்லை. ஆனால் ஆட்சியதிகாரம் மக்களின் மொழியை மாற்றுகிறது. மதம் அதற்குத் துணையாக இருக்கிறது. இரண்டும் இணையும்பொழுது மொழி மாற்றப்படுகிறது. இதுதான் எகிப்திலும் ஈராக்கிலும் நடந்தது. வட இந்தியாவிலும் அது தான் நடந்தது.

இரோமிலா தாப்பர், “வரலாற்று அளவில் எழும் கேள்வி வட இந்தியாவில் தனித்து நின்ற வெவ்வேறு மொழிகள் வழக்கில் இருக்கும்போது இந்திய – ஆரிய மொழி எப்படி மேலாதிக்க மொழியானது”(7) எனக் கேட்கிறார். பின் அவரே, அதிகாரம், தொழில்நுட்பம், சடங்குகளின் உயர்வு .போன்றவை காரணம் எனக் கூறி, ஆரியர்கள் எப்படி மேலாதிக்கம் பெற்றார்கள் என்பது ஆராயப்பட வேண்டும் என்கிறார்(8). வடஇந்தியா மீது படையெடுத்து வந்த ஆரியர்கள் சிந்துவெளிப் பண்பாட்டையும், உள்ளூர் மக்களையும், அவர்களது கிராமப் பண்பாட்டையும் அடியோடு அழித்து ஒழித்தார்கள்.

அதன்பின் இந்தியா மிக நீண்ட காலம் இருண்ட காலமாக இருந்தது. இந்தக் காலத்தில் இந்தியாவில் குடியேற எதிர்ப்பு இல்லாததால் தொடர்ந்து அலை அலையாக வந்த ஆரியர்கள் இந்தியா முழுவதும் பரவினார்கள். மீதியிருந்த உள்ளூர் மக்கள் இவர்களுக்கு முன் வலிமையற்றவர்களாகவும், அடிமை நிலையிலும் இருந்தார்கள். பலர் மலைகளிலும், காடுகளிலும் சென்று ஒளிந்து வாழ்ந்தார்கள். பின் கங்கைப் பகுதியில் இருந்த ஒருசில வலிமையான உள்ளூர் பழங்குடி மக்களும், பழங்குடி அரசுகளும் ஆரியர்களால் வெற்றி கொள்ளப்பட்டனர். இறுதியில் ஆரியர்கள் வடஇந்தியாவின் முழு ஆட்சியாளர்களாக ஆனார்கள். அவர்களின் ஆட்சியதிகாரம் நாளடைவில், அவர்களின் மொழியை அனைவருக்குமான மொழியாக மாற்றியமைத்தது. இதற்கு அவர்களின் மதம் சார்ந்த விடயங்களும் துணை புரிந்தன.

ஆகவே உலகெங்கும் ஆட்சியதிகாரம்தான் மொழி மாறுவதற்கான மிக முக்கியக் காரணியாக உள்ளது என்பதை வடஇந்திய வரலாறும் உறுதி செய்கிறது. ஈரான் நாட்டை எடுத்துக்கொண்டால் இதற்கு மாறுபட்ட ஒரு நிலையைக் காண முடிகிறது. கி.மு. 6ஆம் நூற்றாண்டிலிருந்து அது உள்ளூர் ஆட்சியாளர்களைக் கொண்ட பாரசீக அரசால் ஆளப்பட்டது.. பாரசீகம்(Persian) அதன் ஆட்சி மொழியாக இருந்தது.(பாரசீகம் ஒரு இந்தோ ஆரிய மொழி. ஈரானிலும் கி.மு. 1500 அல்லது அதற்கு முன்பிருந்து ஆரியமொழி பேசுவோர் குடியேறினர். அங்கிருந்துதான் அவர்கள் இந்தியா வந்தனர்).

அதன்பின் கி.மு. 330-170 வரை கிரேக்க ஆட்சியாளர்களால் ஈரான் ஆளப்பட்டது. பின் கி.பி. 224 வரை பார்த்திய அரசர்களால் ஆளப்பட்டது. அப்பொழுது பார்த்திய மொழி ஆட்சி மொழியாக இருந்தது. அதன்பின் கி.பி. 224-650 வரை சசானிய அரசர்களால் ஆளப்பட்டது. இவர்கள் பாரசீக வழி வந்தவர்கள் என்பதால் பாரசீக மொழி மீண்டும் ஆட்சி மொழியாக ஆனது. கி.மு. 6ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 6ஆம் நூற்றாண்டு வரை பாரசீக மொழி ஆட்சி மொழியாகவும், மக்கள் மொழியாகவும் இருந்ததோடு ஒரு செவ்வியல் மொழியாகவும் இருந்தது. அதனால் அதன்பின் கி.பி. 700இலிருந்து ஈரான் நாடு முசுலீம் படையெடுப்புக்கு உள்ளானபோது, அங்கு ஆளுவோர் அரபு மொழி சார்ந்தவர்களாக இருந்த போதும் பாரசீக மொழிதான் ஆட்சி மொழியாக, மக்கள் மொழியாக இருந்தது. ஆகவே இன்றும் ஈரானின் ஆட்சி மொழியாக பாரசீகம்தான் உள்ளது.

ஆட்சியதிகாரமும், மதமும் சேர்ந்துகூட மொழியை இங்கு மாற்ற இயலவில்லை. அதற்கு பாரசீகம் ஒரு வளர்ந்த மொழியாக இருந்ததும், ஈரான் மக்கள் தங்கள் மொழியைக்கொண்டு தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் அளவு வளர்ச்சி அடைந்திருந்ததும் மிக முக்கியக் காரணிகள் எனலாம். முசுலீம் மக்களின் அறிவியல், தத்துவம், கலை, இலக்கியம் ஆகிய அனைத்தும் அரபு, பாரசீகம் ஆகிய இரு மொழிகளிலும்தான் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்கு படையெடுத்து வந்த முசுலீம்கள் பாரசீக மொழியைத்தான் தங்கள் ஆட்சி மொழியாகக் கொண்டிருந்தார்கள். மத்திய ஆசியாவின் முசுலீம் அரசுகள் பல பாரசீக மொழியைத்தான் ஆட்சி மொழியாகக் கொண்டிருந்தன. ஆகவே அரபு மொழி அளவு, பாரசீகமும் முசுலீம் உலகின் மொழியாக ஆகிப்போனது.

உரோம் பேரரசு தனது இலத்தீன் மொழியோடு கிரேக்க மொழியையும் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டதை இதனோடு ஒப்பிடலாம். பாரசீக மொழி சமற்கிருதத்தைப் போலவே இந்தோ ஆரிய மொழிதான்; ஆனால் அதனைப் பேசுபவர்களை ஆரியர்கள் எனக் கூற முடியாது. ஆகவே இனமும் மொழியும் ஒன்றல்ல என்பது இதன் மூலமும் உறுதி செய்யப்படுகிறது.

பார்வை:7. முற்கால இந்தியா(Early India, – From The Origens to AD 1300), இரோமிலா தாப்பர், NCBH, தமிழில்: அ.முதுகுன்றன், சூலை-2016, பக்: 2558. “ “ “ பக்: 256.சான்று நூல்கள்:1.உலக மக்களின் வரலாறு, கிரிசு ஆர்மன், விடியல் பதிப்பகம், தமிழ் மொழிபெயர்ப்பு – நிழல்வண்ணன், வசந்தகுமார்.2.The Cambridge Encyclopedia, of the World’s Ancient Languages, Edited By Roger D. Woodard 8th printing, 2015.3. The World Book Encyclopedia, USA, 1988, vol-10, page: 882, 1192 & VOL-12, pa: 66-692 etc