Mon. Nov 25th, 2024

வரலாற்று சிறப்புக் கட்டுரை பிரபல எழுத்தாளர் பாலன் நாச்சிமுத்து…

உலகின் மிகப்புகழ்பெற்ற பண்டைய நாகரிகங்களாக, மெசபடோமிய நாகரிகம், எகிப்திய நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகம், சீன நாகரிகம் ஆகிய நான்கு நாகரிகங்களைக் குறிப்பிடுவர். இங்கு அந்த நான்கும் போக ஐந்தாவதாக மேற்கத்திய நாகரிகத்தின் மூலமாக இருந்த கிரீட் தீவின் மினோன் நாகரிகம் வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது. மொத்தமாக 15க்கும் மேற்பட்ட நாகரிகங்கள் குறித்து நான் இங்கு எழுதியுள்ளேன். நாகரிகங்களுக்கிடையே இருந்த பொதுத்தன்மைகள், பொது வரலாற்று விதிகள், வரலாற்றுப் படிப்பினைகள், அதன் மொழிகள், எழுத்துகள் ஆகியன குறித்துப் பார்ப்போம்.

உலக மக்கள் அனைவரும் நாகரிக காலத்துக்கு முன் இனக்குழு கால கண ஆட்சி முறையில் வாழ்ந்து வந்தவர்கள்தான். அவர்கள் ஒரு சிறுகுடி மக்கள் சமூகமாக ஓரிடத்தில் தங்கி வாழத்தொடங்கி, தங்களுக்கான ஒரு சிறு நகரத்தையும் அதற்கான அரசையும் உருவாக்கும்பொழுதுதான் நாகரிக வாழ்க்கை தொடங்குகிறது. ஆகவே நகர அரசுதான் நாகரிகத்தின் தொடக்கம் என்பது உலக நாகரிகங்கள் அனைத்துக்கும் பொதுவிதியாகும்.

நாகரிகமும் அநாகரிகமும்: இந்திய ஆரிய இனக்குழு, அமெரிக்கச் சிவப்பிந்திய இனக்குழு, கிரேக்க, உரோம இனக்குழு சமூகங்கள் ஆகியனவற்றின் வாழ்க்கை முறை குறித்தும், அவற்றை பழந்தமிழகச் சங்ககால சமூக வாழ்க்கையோடு ஒப்பீடு செய்தும் முன்பே சொல்லப்பட்டுள்ளது. அவை இனக்குழு வாழ்க்கை குறித்தும் அதிலிருந்து நகர அரசுகள் உருவாவது குறித்துமான தரவுகளை ஓரளவு சுருக்கமாக வழங்கியுள்ளன. அவற்றில் இருந்து இனக்குழுகால அநாகரிக மக்களிடம் தனிச்சொத்தோ, குடும்பமோ, அரசோ இருக்காது என்பதும், அவர்களிடம் பொதுமகளிர் முறையோ, பரத்தமை முறையோ, கற்பு குறித்தான புனிதக்கருத்துகளோ இருக்காது என்பதும், மக்களைப் தேய(பிரதேச) அடிப்படையில் பிரிப்பது இருக்காது என்பதும் சொல்லப்பட்டுள்ளது.

இரத்த உறவுகளை அடிப்படையாகக்கொண்டே மக்களை கணம், குலங்களாகப் பிரித்து வைக்கும் காலமாக அது இருக்கும். இவை குறித்த புரிதல் பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்களிடம் இருப்பதில்லை. ஒரு சமூகம் நாகரிக நிலையில் உள்ளதா அல்லது அநாகரிக நிலையில் உள்ளதா என அறிய இவை பற்றிய புரிதல்கள் தேவையாகிறது. இந்த விடயங்களும் உலக சமூகங்கள் அனைத்துக்கும் பொதுவானதுதான்.நகர அரசுகளும் எழுத்தும்: உலக நாகரிகங்கள் அனைத்திலும் முதலில் நகர அரசுகள்தான் தோன்றின என்பதும் இந்த நகர அரசுகள் உருவான பிறகுதான் மொழிக்கு எழுத்து உருவாகியது என்பதும் உலகம் முழுவதும் ஒரு பொது விதியாக, ஒரு வரலாற்று விதியாக இருந்துள்ளது.

அரசு உருவாவது என்பதுதான் எழுத்துக்கான தேவையை உருவாக்குகிறது. அரசு உருவாகாமல் எழுத்து உருவாக முடியாது என்பது ஒரு வரலாற்று விதி. உலகின் முதல் நாகரிகமான சுமேரியாவில் கி.மு. 4500 முதல் ஊருக் முதலான நகர அரசுகள் தான் முதலில் தோன்றின. கி.மு. 2900 வரை சுமேரியா நகர அரசுகளின் நாகரிகமாகவே இருந்தது. அதன் பின்னரே அங்கு பேரரசுகள் தோன்றின. சுமேரியாவில் நகர அரசுகள் உருவானபின் கி.மு. 3500 வாக்கில் சுமேரியர்கள் மனிதவரலாற்றில் முதல்முதலாக ஒரு மொழிக்கான எழுத்தை உருவாக்கினர்.

அதன்பின் கி.மு. 3200 வாக்கில் சுமேரிய மொழிக்கான வளர்ச்சிபெற்ற கியூனிபார்ம் எழுத்துமுறை உருவானது.எகிப்தை எடுத்துக்கொண்டால் அங்கு நோம்கள் எனப்பட்ட நகர அரசுகள் கி.மு. 4000 முதல் அல்லது அதற்கு முன்பிருந்து இருந்து வந்தன. அங்கு நகர அரசுகள் இருந்ததால்தான் கி.மு. 3100இல் எகிப்து மொழிக்கான எழுத்து முறை உருவானது. இந்த நகர அரசுகளை ஒன்றிணைத்து கி.மு. 3100க்குப்பின் எகிப்து ஒரே அரசாக ஆக்கப்பட்டது. மெசபடோமியா பகுதியில் இருந்த பாபிலோனும் முதலில் நகர அரசாக இருந்த பின்னரே அது பேரரசாக ஆனது.

மெசபடோமியா பகுதியில் ஊர் என்ற நகர அரசின் அருகில் இருந்த அசுர்(Assur) என்ற நகரத்தை தலைநகராகக் கொண்டு கி.மு. 1813இல் அசிரிய என்ற அரசு உருவானது. அதுதான் பின்னர் அசீரியப் பேரரசாக உருவானது. பாரசீகர்கள் தொடக்கத்தில் அன்சான்( Anshan ) என்ற நகரத்தை ஆள்பவர்களாக இருந்தார்கள். இந்நகரத்தை கி.மு. 550 வாக்கில் ஆண்ட சைரசு-II(Cyrus-II) என்பவர்தான் பாரசீகப்பேரரசை உருவாக்கினார்.

கி.மு. 2000க்குப்பின் இன்றைய மத்திய துருக்கியில் கிட்டைட்டி (Hittites) மக்கள் குடியேறி நிறைய நகர அரசுகளை அமைத்தனர். கி.மு. 1650 வாக்கில் அட்டுசாசு(Hattusas) நகர அரசு பிற நகர அரசுகளை வென்று கிட்டைட்டிப் பேரரசை உருவாக்கியது. இவ்வாறே கிரீட் தீவின் மினோன் நாகரிகம், கிரேக்கத்தின் மைசீனிய நாகரிகம், பின்னர் கிரேக்கத்தில் தோன்றிய கிரேக்க நாகரிகம், பொனீசிய நாகரிகம் ஆகிய அனைத்துமே நகர அரசுகளின் நாகரிகமாகவே இருந்தன. உரோம் பேரரசு முதலில் நகர அரசாக உருவாகிப் பேரரசாக ஆகியது.

அமெரிக்காவில் உருவான மூன்று அரசுகளும் கூட முதலில் நகர அரசுகளை உருவாக்கி அதன் பின்னரே அவை பெரிய அரசுகளாக உருவாகின. இந்தியாவின் சிந்துவெளி நாகரிகமும் நகர அரசுகளின் நாகரிகமாகவே இருந்தது. சீனாவில் கி.மு. 2050 முதல் அல்லது அதற்கு முன்பிருந்து முதலில் நகர அரசுகள்தான் உருவாகின. இந்த அனைத்து நாகரிகங்களிலும் அரசுகள் உருவான பின்னர் எழுத்துகள் உருவாகின. கிரீட் தீவில் மினோன் எழுத்தும், கிரேக்கத்தில் முதலில் மைசீனிய எழுத்தும், பின் கிரேக்கர்களின் கிரேக்க எழுத்தும், உரோமில் இலத்தீன் எழுத்தும், சீனாவில் சீன எழுத்தும் உருவாகின.

ஆகவே முதலில் நகர அரசுகளும் அதன்பின் எழுத்தும் உருவாவது என்பது உலகப் பொதுவிதியாக இருந்துள்ளது.

சான்று நூல்கள்:1.உலக மக்களின் வரலாறு, கிரிசு ஆர்மன், விடியல் பதிப்பகம், தமிழ் மொழிபெயர்ப்பு – நிழல்வண்ணன், வசந்தகுமார்.2.The Cambridge Encyclopedia, of the World’s Ancient Languages, Edited By Roger D. Woodard 8th printing, 2015.3. The World Book Encyclopedia, USA, 1988, vol-10, page: 882, 1192 & VOL-12, pa: 66-692 etc4.Ancient Cities By Charles Grates 2nd Edition.

பண்டைய இந்திய நாகரிகம் – உஇந்தியாவின் அநாகரிக காலம் (கி.மு.1750-கி.மு.750):

பண்டைய உலக நாகரிகங்கள் – 25

கிரேக்கத்தில் கி.மு. 1500 வாக்கில் மைசீனிய நாகரிகம் உருவாகியது. மைசீனியன் நாகரிகம் கி.மு. 1200வரை இருந்தது. அதன்பின் அது அழிந்துவிட்டது. கி.மு. 1200லிருந்து கிரேக்கம் இருண்ட காலத்தில் மூழ்கியது. அதற்கு முன்பும் பின்பும் அங்கு அக்கீயர், ஐயோனியர் போன்ற பலர் குடியேறினர். கி.மு. 1100 வாக்கில் அங்கு டோரியர்கள் படையெடுத்து வந்து மீதியிருந்த அனைத்தையும் அழித்தார்கள். அதன்பின் 300 வருட காலம் மக்கள் அநாகரிக நிலையில் வாழ்ந்தார்கள். ஆகமொத்தம் 400 வருட காலம்(கி.மு.1200-800) கிரேக்கம் இருண்ட காலமாக இருந்ததாக கிரேக்க, உலக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

கி.மு. 800க்கு முன்பே ஓமரின் இலியட், ஒடிசி ஆகிய காவியங்கள் இயற்றப்பட்டன. அதே காலத்தில் கிரேக்கத்தில் வாழ்ந்த பல இனத்தவரும் ஒன்றிணைந்து கிரேக்கர்களாக ஆனார்கள். அதன்பின் கி.மு. 800வாக்கில் நகரங்கள் தோன்றிய காலமே கிரேக்க நாகரிகத்தின் தொடக்க காலமாகக் கருதப்படுகிறது. அதற்கு முற்பட்ட காலம் இருண்ட காலமாகவே கருதப்படுகிறது. இதனை இந்தியாவின் வேதகாலம் எனப்படும் காலத்தோடு ஒப்பிடுவோம். கி.மு. 1750இல் சிந்துவெளி நாகரிகம் அழிவுக்குள்ளானது. அதற்கு பின்பு இந்தியா வந்த ஆரிய இனக்குழு மக்கள் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களைத் தேடியே இங்கு வந்தனர்.

முதலில் இந்தியாவின் பஞ்சாப் பகுதியிலும், அதன் பின்னர் சிலர் மேற்கு கங்கைச்சமவெளிக்கும் இடம் பெயர்ந்தனர். அதன்பின் கிழக்கு நோக்கிய நகர்வு நடைபெற்றது. இவை அனைத்துமே மேய்ச்சல் நிலங்களுக்கான இனக்குழு கால மக்களின் நகர்வாகவே இருந்தது. இவர்களின் நகர்வு உள்ளூர் மக்களின் கிராமப் பண்பாடுகளை அழிப்பதாகவும் அவர்களை மேலாதிக்கம் செய்வதாகவும் வயல்வெளிகளை மேய்ச்சல் நிலங்களாக மாற்றுவதாகவும் தான் இருந்தது. மிக நீண்டகாலம் கழித்து, இடையே கால்நடை வளர்ப்போடு, சிறிய அளவு வேளாண்மையும், கிராமக் குடியிருப்புகளும் தோன்றின.

கி.மு. 800க்குப்பின் இரும்பு பயன்படுத்தப்பட்டு காடுகளை அழித்து பெரிய அளவிலான வேளாண்மையும், நிலையான குடியிருப்புகளும் உருவாகின. நாளடைவில் கி.மு. 750க்குப்பின் சிறு குறு நகரங்களும் வணிகமும் உருவாகின. ஆனால் கி.மு. 600வரை நாகரிகத்தை தோற்றுவிக்கும் அளவிலான பெரிய நகரங்களோ, நகர அரசுகளோ உருவாகவில்லை. ஆகவே கி.மு. 1750 முதல் கி.மு. 750வரையான வடஇந்தியாவின் ஆரிய இனக்குழுகால 1000 ஆண்டுகாலத்தை, ஒரு அநாகரிக காலகட்டமாகவே கருத முடியும். குப்தர் காலம்(கி.பி.320-467): கி.மு. 600 முதல் கி.மு. முடிய 600 ஆண்டுகள் வட இந்தியாவில் மகதப்பேரரசு இருந்தது.

இந்தக் காலகட்டத்தில்தான் அரியங்கா வம்சம், சிசுநாகர் வம்சம், நந்த வம்சம், மௌரிய வம்சம், சுங்க வம்சம், கன்வ வம்சம் ஆகிய அரச வம்சங்கள் ஆண்டன. கடைசி இரு அரச வம்சங்களும் பிராமண அரச வம்சங்கள்(கி.மு. 187 – கி.மு. 30) ஆகும். அதன் பின் கி.பி. 300 வரை வட இந்தியா சிறு சிறு இனக்குழு அரசுகளாலும் அந்நிய ஆட்சியாளர்களாலும் ஆளப்பட்டு வந்தது. கி.பி. 300க்குப் பின் வந்த குப்த வம்சம் 150 வருடங்கள்(கி.பி.320-467) இந்தியாவை ஆட்சி செய்தது. இக்காலத்தில் சமற்கிருத மொழி பல செவ்வியல் இலக்கிய நூல்களைப் படைத்திருந்தது. குப்தர்களின் காலம் குறித்து இரோமிலா தாப்பர், “குப்தர்களின் காலத்தை செவ்வியல் காலம் என்று வருணிப்பது சார்புநிலையில் மேல்வகுப்புகளைப் பொருத்தவரையில் சரியே…..

தொல்லியலிருந்து வருகின்ற எழுத்துசார்ந்த சான்று பெரும்பாலான மக்களுக்கு வாழ்க்கைப்பாணி ஒளிமயமாக இல்லை என்று காட்டுகிறது. தோண்டப்பட்ட இடங்கள் பொருள்நிறை வாழ்வில் சராசரி வாழ்க்கைத்தரம் இதற்கு(குப்தர்கள் காலத்திற்கு) முந்தைய காலத்தில் உயர்வாக இருந்தது என்பதைத்தான் காட்டுகிறது”(18). என்கிறார்.இக்காலத்தை பிராமணிய மறுமலர்ச்சிக் காலம் எனவும், அது உறுதியாகக் காலூன்றிய காலம் எனவும் கூறலாம். இக்காலகட்டத்தில் பிராமணர்களுக்கு நிலதானங்கள் நிறைய வழங்கப்பட்டன. எனினும் இக்காலத்தில் பல்வேறு அறிவியல் தொழில்நுட்பத் துறைகளிலும் கலை சார்ந்த விடயங்களிலும் வளர்ச்சி ஏற்பட்டிருந்தது.

குப்தர்கள் காலத்தின் இறுதியிலும் அதன்பின்னரும் ஊணர்கள் இந்தியாவை கி.பி. ஆறாம் நூற்றாண்டின் கடைசிவரை தொடர்ந்து தாக்கி வந்தனர். குப்தர்களுக்குப் பின் கி.பி. 606இல் அர்சன்(Harsha) ஆட்சிக்கு வந்து 41 ஆண்டுகள் சிறப்பாக ஆண்டான். இதன்பின் வட இந்தியாவில் கி.பி. 8ஆம் 9ஆம் நூற்றாண்டுகளில் இராசபுத்திர அரசுகள் உருவாகின. 11ஆம் நூற்றாண்டிலிருந்து முசுலீம் படையெடுப்புகளும் அவர்களது ஆட்சியும் நடைபெற்றது. கி.பி. 16ஆம் நூற்றாண்டிலிருந்து முகலாயர்கள் ஆட்சியும் ஐரோப்பியர் வருகையும் நடைபெற்றது.

பார்வை:18.முற்கால இந்தியா(Early India, – From The Origens to AD 1300), இரோமிலா தாப்பர், NCBH, தமிழில்: அ.முதுகுன்றன், சூலை-2016, பக்: 510.