Fri. Nov 22nd, 2024

வரலாற்றுச் சிறப்புக் கட்டுரை… பிரபல எழுத்தாளர் பாலன் நாச்சிமுத்து…..

பழங்குடிகள் ஒரு சிறு மக்கள் சமூகமாக இணைந்து, ஒரு இடத்தில் குடியேறி தங்களுக்கான ஒரு நகர அரசை உருவாக்கும் பொழுதுதான் நாகரிகம் உருவாகுவதாகக் கொள்ளமுடியும். வட இந்தியாவில் கி.மு. 750க்குப் பின்னர்தான் சிறு சிறு பழங்குடி அரசுகள் உருவாகின்றன. அவற்றில் 16 சனபதங்கள் முக்கியமானவை எனக் கருதப்பட்டன. இந்த சனபதங்கள் என்பனவற்றில் இனக்குழு அரசுகளும், நகர அரசுகளும் இருந்தன. அவற்றுக்குள் ஏற்பட்ட போர்களில் கி.மு. 600அளவில் ஒருசில மட்டுமே எஞ்சி நின்றன. அவை லிச்சாவி, கோசலம், மகதம் போன்றன. கி.மு. 550 முதல் கி.மு. 450 வரையான காலகட்டத்தில் மகதம் பிறவற்றை வென்று பேரரசாக ஆகியது.

கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் நகரமயம் தொடங்கியது என்பதை, “வைசாலி, உச்சயினி, சிராசுவதி, இராஜ்காட், இராஜ்கார், இராசகிருகம் போன்ற இடங்களில் தோண்டிய அகழாய்வானது கி.மு. முதல் ஆயிரமாவது ஆண்டுகளின் மத்தியில்(கி.மு.500) அவை நகரமாகிக் கொண்டிருந்ததைக் காட்டுகிறது” எனக் கூறுகிறார் இரோமிலா தாப்பர்(Romila Thaper)(14). இன்னொரு சான்றாக, “கி.மு. 4ஆம் நூற்றாண்டிற்கு முன்புள்ள தட்சசீலம் ஒரு சிறு கிராமமாகவே இருந்து வந்தது” எனக் கூறுகிறார் கோசாம்பி(15).

தட்சசீலம்தான் இந்தோ ஆரியர்களின் முதல் குடியிருப்பு. ஏ.எல். பாசம்(A.L.Basham), “கி.மு. 6ஆம் நூற்றாண்டில்தான் இந்திய வரலாறு பழங்கதைகள், ஐயப்பாட்டிற்குரிய மரபுகள் ஆகியவற்றினின்றும் வெளியேறுகிறது…… இந்தியாவின் உண்மை வரலாறு தோன்றுகின்ற காலமானது அறிவுத்துறையிலும், ஆன்மீகத்துறையிலும் பெருங்கிளர்ச்சி தோன்றியவொரு காலமாகவுள்ளது” எனக் குறிப்பிடுகிறார்(16). ஆகவே அவர் உண்மை வரலாறு என்பது கி.மு. 6ஆம் நூற்றாண்டில் தொடங்கியதாகவே கருதுகிறார். ஆகவே இத்தரவுகள் வட இந்திய நாகரிகம் என்பது கி.மு. 600 க்குப்பின்னர் கங்கைப்பகுதியில் ஏற்பட்ட நகரமயமாதலைத் தொடர்ந்து உருவாகிறது எனலாம்.இந்திய ஆரிய இனக்குழுவும் நாகரிகமும்: நாகரிகங்கள் என்பன நகர அரசுகளின் உருவாக்கத்தில் இருந்துதான் தொடங்குகின்றன என்பது உலகப் பொதுவிதியாகவும் ஒரு வரலாற்று விதியாகவும் இருப்பதை நாம் முன்பே குறிப்பிட்டுள்ளோம்.

இந்தியாவின், “கி.மு. 1200 லிருந்து கி.மு. 600 வரையுள்ள காலம் வேதகாலத்தின் பொற்காலம் என்று மக்களால் கருதப்படுகிறது. இது வரலாற்று……. திறனாய்விற்கு அப்பாற்பட்ட ஓர் அழுத்தத்தை கொடுக்கிறது” எனக் கூறுகிறார் இரோமிலா தாப்பர்(17). அவர் அக்காலகட்டத்தை ஒரு நாகரிக காலமாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் சில வரலாற்று ஆசிரியர்கள் இந்தியாவின், கி.மு. 1200 முதல் கி.மு. 600 வரையான காலகட்டத்தை வேதகால நாகரிகம் எனச் சொல்லி வருகிறார்கள். வேதகாலம் இருந்ததாகச் சொல்லப்பட்ட வடஇந்தியப்பகுதிகளில் கி.மு. 600க்கு முன்னர் எந்த நகரமும், எந்த நகர அரசும் இருக்கவில்லை என்பதை அப்பகுதிகளில் நடந்த தொல்லியல் ஆய்வுகள் உறுதி செய்கின்றன. நகர அரசுகள்தான் நாகரிகத்தின் தொடக்கம் என்பது வரலாற்றுப் பொதுவிதியாக இருக்கிறது.

கி.மு. 750 வாக்கில் 16 சன பதங்கள் எனப்படும் சிறு நகர அரசுகளும், இனக்குழு அரசுகளும் இருந்ததாகக் கருதப்படுகிறது. ஆகவே கி.மு. 1750 ஆம் ஆண்டுக்குப்பின்னர் கி.மு. 750 வரை எந்த நகரமும், எந்த அரசும் வட இந்தியாவில் இருக்கவில்லை. ஆகவே கி.மு. 1750 முதல் கி.மு. 750 வரையான இந்தியாவின் 1000 வருட காலத்தை நாகரிக காலமாகக் கருத முடியாது. கி.மு. 750க்குப்பின்தான் நாகரிக காலம் தொடங்குகிறது எனலாம்.

பார்வை:14.முற்கால இந்தியா(Early India, – From The Origens to AD 1300), இரோமிலா தாப்பர், NCBH, தமிழில்: அ.முதுகுன்றன், சூலை-2016, பக்: 266.15.பண்டைய இந்தியா, டி.டி. கோசாம்பி, NCBH, செப்டம்பர்-2006, தமிழாக்கம்: ஆர். எசு. நாராயணன், பக்: 166.16.வியத்தகு இந்தியா(The Wonder That Was India), ஏ.எல். பாசம்(A.L.Basham), தமிழாக்கம்: செ.வேலாயுதபிள்ளை, மகேசுவரிபாலகிருட்டிணன், ஏப்ரல்-2015, விடியல் பதிப்பகம் பக்: 85.17.முற்கால இந்தியா(Early India, – From The Origens to AD 1300), இரோமிலா தாப்பர், NCBH, தமிழில்: அ.முதுகுன்றன், சூலை-2016, பக்: 253.

பண்டைய இந்திய நாகரிகம் -( இ)

இந்திய ஆரிய இனக்குழுவும் பூசாரி வகுப்பும்:

பண்டைய உலக நாகரிகங்கள் – 23

வெளிநாட்டு படையெடுப்பாளர்களை இந்தியாவின் பாரம்பரியமான அரசராக மாற்றுவதற்குத் தங்களின் புனிதச்சடங்குகள் தேவையானவை போன்ற கற்பிதங்களை உருவாக்கி, ஆங்காங்கு இந்தியாவில் ஊடுருவி, அரசமைத்த வெளிநாட்டு அரசுகளின் ஆதரவை, அங்கீகாரத்தை இவை பெற்றன. சான்றாக உருத்ரதாமன் போன்றவர்களைக் குறிப்பிடலாம். ஆகவே கி.மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 3ஆம் நூற்றாண்டுவரையான 500 வருட காலகட்டத்தில் வலிமை பெற்ற பூசாரி வகுப்பு தனக்குத் தேவையான நூல்களை இயற்றியதோடு, பழையவற்றைத் தனக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொண்டது.

தனது பூசாரி வகுப்பை(பிராமண வகுப்பு) அனைவருக்கும் மேலான ஒரு வலிமை மிக்க குழுவாக ஒரு உயர் சமூக நிறுவனமாக நிலைநிறுத்திக்கொண்டது. அதற்காக மதத்தின் பெயரால் வருணங்களை, சாதியக் கட்டமைப்பாக மாற்றியமைத்தது.(கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்கு முன் இந்தியாவில் சாதியக்கட்டமைப்பு இருக்கவில்லை. வருணம் எனப்படும் வகுப்புகளும், தொழில் குழுக்களும்தான் இருந்தன). இந்தக் காலகட்டத்தில்தான் பிரம்ம சூத்திரம், மீமாம்ச சூத்திரம், மனுசுமிருதி போன்ற பல பூசாரி வகுப்பு நூல்கள் அனைத்தும் இயற்றப்பட்டன என்பதோடு வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யகங்கள் போன்ற பழைய நூல்கள் மாற்றி அமைக்கப்பட்டன. கீதை போன்றவையும் உருவாகின. அனைத்தும் பூசாரி வகுப்பை சாதியம் முதலான பல்வேறு தளங்களில் மிக உயரத்தூக்கி நிறுத்துவதற்கான அடிப்படைக் கட்டுமானங்களாக உருவாக்கப்பட்டன.

சான்றாக பிராமணங்கள் குறித்து லெவி, “பிராமணங்களின் இறையியல் கருத்துகளைவிட, பண்பற்ற, பகுத்தறிவற்ற, ஆன்ம இழிநிலையை வெளிப்படுத்தும் வேறு ஒன்றைக் காண்பது அரிதினும் அரிது. பிராமணங்கள் கூறும் இறையியலில் ஒழுக்கப் பண்புக்கு இடமே இல்லை. என்கிறார்(12). இது குறித்து, பி.கே. கோசு, “இந்துவத்தில் ஏதாவது அருமை பெருமை இருக்குமானால் அவை இரிக் வேதத்தில் குறிப்பால் உணர்த்தப்பட்டன. அதேவேளையில் இந்துவத்தில் உள்ள அத்தனை இழிவுகளும் அருவருக்கத் தக்கவையும் பிராமணங்களில் வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளன”(13) என்கிறார்.

இந்த பிராமணங்கள் பூசாரி வகுப்பை கடவுளுக்கு நிகராக உயர்த்தும் பணியைச் செய்தன. கி.மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 3ஆம் நூற்றாண்டு வரை தன்னை வலிமைப்படுத்திக் கொண்ட பூசாரி வகுப்பு அடுத்து வந்த 2 நூற்றாண்டுகளில்(குப்தர் காலத்தில்), தனது மேல் நிலையை, தனது சாதியக் கட்டமைப்பை, தனது பிராமணியச் சிந்தனைகளை, இன்ன பிறவற்றை இந்திய அரசும் மக்களும் ஏற்று அங்கீகாரம் பெற வைத்தது. ஆகவே குப்தர் காலகட்டத்தை, பிராமண வகுப்பு இந்தியாவில் தன்னை உறுதியாகக் காலூன்றி நிலைநிறுத்திக்கொண்ட காலகட்டம் எனலாம். இனக்குழு காலகட்டத்தின் இறுதியில் இந்த பூசாரி வகுப்பு மேல்நிலையில் இருந்தது.(உலக நாகரிகம் முழுவதும் இனக்குழு காலத்தின் இறுதியில், நகர அரசுகளின் தொடக்கத்தில் பூசாரி வகுப்பு மேல்நிலையில்தான் இருந்துள்ளது).

ஆனால் அதன்பின் நாகரிகத்தின் தொடக்க காலமான கி.மு. 6ஆம் நூற்றாண்டில் அது தனது மேல்நிலையை இழந்து போனது. கி.மு. 6ஆம் நூற்றாண்டிலிருந்து அது அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருந்தது. (பிற இடங்களில் பூசாரி வகுப்பு அடியோடு அழித்து ஒழிக்கப்பட்டது). கி.மு. 2ஆம் நூற்றாண்டில், தான் ஆட்சியைப் பிடித்து ஆண்ட போதுகூட தனது மேல்நிலையை சமூக அளவில் அதனால் நிலைநிறுத்திக்கொள்ள இயலவில்லை. ஆனால் குப்தர் காலத்தில் அது தன்னை ஒரு மேல்நிலை சமூகமாக நிலைநிறுத்திக்கொண்டு, சாதியக் கட்டமைப்பை இந்தியா முழுவதும் கொண்டுசென்றது. இவர்களின் மொழியான சமற்கிருதம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரையிலும் இந்தியாவில் எங்கும் ஆட்சி மொழியாகவோ, மக்கள் மொழியாகவோ இருக்கவில்லை.

பாலி, பிராகிருதம், தமிழ் ஆகியன தான் இருந்தன. ஆனால் இந்த பூசாரி வகுப்பு, கி.பி. 5ஆம் நூற்றாண்டிற்குள் அம்மக்கள் மொழிகளை அகற்றிவிட்டு, இந்தியா முழுவதும் சமற்கிருத மொழியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது. இந்தப் பூசாரி வகுப்புதான் ஆரியர்களின் இனக்குழு காலத்தை, அநாகரிக காலத்தை(கி.மு.1200-750) வேதகால நாகரிகம் எனக் கூறி வருகிறது. அது ஒரு வரலாற்றுப்புரட்டு. வரலாற்றில், வேதகால நாகரிகம் என ஒன்று இல்லை. இந்த ஆரியஇனக்குழு காலகட்டத்தில் இருந்த கண ஆட்சி முறை குறித்தும், சமூக நிலை குறித்தும், அக்கால ஆண்பெண் உறவுமுறை குறித்தும் நாம் முன்பே எழுதியுள்ளோம்.

பார்வை:12, 13. பிரேம்நாத் பசாசு, இந்திய வரலாற்றில் பகவத்கீதை, தமிழில் கே.சுப்ரமணியன், விடியல் பதிப்பகம், சனவரி-2016, பக்: 85, 86.