Mon. Apr 29th, 2024

சிறப்புக் கட்டுரை பிரபல எழுத்தாளர் பாலன் நாச்சிமுத்து…

பண்டைய உலக நாகரிகங்கள் –

எகிப்திய, பொனிசிய, கிட்டைட்டி நாகரிகங்கள் –

பொனீசியன் நாகரிகம்:காலம்:கி.மு.2000-332.

சிரியா, லெபனான், இசுரேல் ஆகியவற்றின் மத்தியதரைக் கடலை ஒட்டி இருந்த பழைய நகர நாகரிகங்கள் தான் பொனீசிய (Phoenicians) நாகரிகம். பொனீசியர்கள் புகழ்பெற்ற கடலோடிகளாகவும் வணிகர்களாகவும் இருந்தார்கள். கி.மு. 2500 வருடங்களுக்கு முன்பிருந்து எகிப்து இவர்களோடு வணிகம் செய்து வந்துள்ளது. கி.மு. 1500-332 வரையான காலகட்டத்தில் பொனீசிய நகரங்கள் புகழ் பெற்ற வணிக மையங்களாகவும், ஆடம்பரப் பொருட்கள், கப்பல் கட்டுதல், கண்ணாடி செய்தல் போன்றவற்றை மிகநுட்பத்தோடு உற்பத்தி செய்வதில் வல்லுநர்களை உடையதாகவும் இருந்தது. அன்று இவர்கள் கானான்(Canaan) என அழைக்கப் பட்டார்கள்.

சிடான்(Sidon), டயர்(Tyre), ஆர்வட்(Arvad), பெய்ரூட்(Beirut) போன்ற பல முக்கிய நகர அரசுகள் அங்கு இருந்தன. இதில் சிடான், டயர் ஆகிய இரண்டும் மிக வலிமையும் வளமும் மிக்க அரசுகளாக இருந்தன. அவர்களது பொனிசியன்மொழி ஒரு செமிடிக்(Semitic) மொழி. இது அராமைக்(Aramaic), இப்ரு ஆகிய மொழிகளோடு மிகவும் தொடர்புடையது. பொனீசியர்கள் கிரேக்கத்துக்கு எழுத்தைக் கொடுத்தார்கள். ஐரோப்பிய மொழிகள் அனைத்தும் அதனைத்தான் இன்றும் பயன்படுத்துகின்றன. பொனீசிய மதக்கருத்துகள் பலவற்றை பைபிள் பின்பற்றியுள்ளது. அவர்களின் புனிதக் கோயில் கெபல்/பைலோசு (Gebal/Byblos) சிடானில் உள்ளது. பொனீசியர்களை பைபிள் கடலின் அரசர்கள் எனக் கூறுகிறது.

சிடான் முதலில் மிகவும் பலம் வாய்ந்த அரசாக இருந்தது. ஆனால் நாளடைவில் டயர் வலிமை பெற்று, சிடானை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. டயர் புதிதாக உருவான இசுரேலுடன் வணிக ஒப்பந்தம் போட்டு நன்கு வளர்ந்து வந்தது. இசுரேல் தனது பூசாரிகளைக் கட்டுப்படுத்தி தனது செல்வத்தை அனைவருக்கும் திறமையாக பிரித்துக் கொடுத்ததன் மூலம் நல்லமுறையில் வளர்ந்து வந்தது. அதனால் இசுரேல், டயர் உறவு இரண்டையும் வலிமை மிக்கவர்களாக ஆக்கியது.கி.மு. 1400 முதல் 100 வருடம் பொனீசிய நகரங்கள் எகிப்தின் கீழ் இருந்தன. கி.மு. 1200 வாக்கில் இவை கிட்டைட்டி(Hittite) அரசின் கீழ் சிறிது காலம் இருந்தன.

கி.மு. 1000க்குப்பின் இவர்கள் வட ஆப்ரிக்கா, தெற்கு இசுபெயின்(Spain), மேற்குசிசிலி ஆகிய இடங்களில் காலனிகளை அமைத்தார்கள். வட ஆப்ரிக்காவின் கார்த்தேஜ் காலனியை டயர்(Tyre) நகர அரசு உருவாக்கியது. கிராம் (Hiram – கி.மு.969-936) என்ற டயரின் அரசன் இசுரேலின் மன்னன் சாலமனுடன்(Solomon) நல்ல உறவு கொண்டிருந்தான். சாலமனின் கப்பல்படையை உருவாக்குவதற்கு கிராம் உதவி செய்தான். இருவரும் இணைந்து வணிகக் கப்பல்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி, தானியங்கள், ஆலிவ்ஆயில்(Olive Oil), ஒயின்(Wine) ஆகியவற்றுக்குப் பதில் தங்கம், வெள்ளி, ஐவரி(Ivory) குரங்கு, மயில் ஆகியவற்றை இறக்குமதி செய்தனர்(II Chronicle 9:21). இவை தமிழகத்தின் கொற்கை அருகில் இருந்த உவரி(Ophir) துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன.

வீழ்ச்சி: அசிரியன்கள்(Assyrian) கி.மு. 842இல் பொனீசிய நகரங்களைக் கைப்பற்றி 200 வருடம் வைத்திருந்தார்கள். அதன்பின் சிறிது காலம் பாபிலோனியர்கள், பாரசீகர்கள் ஆகியவர்களின் கட்டுப்பாட்டில் இவை இருந்தன. பாரசீகர்கள் காலத்தில் இந்நகரங்கள் நல்ல வளர்ச்சி பெற்றன. அன்று சிடான் ஒரு மிக முக்கிய நகராக இருந்தது. கிரேக்கத்தை பாரசீகர்கள் எதிர்த்தபோது சிடானின் கடற்படைதான் அவர்களுக்குப் பெரிய உதவியாக இருந்தது. ஆனால் இவர்களது கடற்படையை கிரேக்கர்கள் கி.மு. 480இல் தோற்கடித்தார்கள். கி.மு. 332இல் அவர்களின் மீது அலெக்சாண்டர் படையெடுத்தார். சிடான் முதலிய அனைத்து நகரங்களும் அடிபணிந்தன.

அலெக்சாண்டரிடம் டயர் பணிந்து போகவில்லை. அதனால் அந்நகரத்தைப் பிடிக்க ஏழு மாதங்கள் கடுமையாகப் போராடி அதனைப் பிடித்தான். அதன் குடிமக்களில் 8000 பேர் கொல்லப்பட்டார்கள். 30,000 பேர் அடிமைகளானார்கள் என அர்ரியன்(Arrian) குறிப்பிடுகிறார்(அர்ரியன் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, உரோம் அரசின் கிரேக்க அலுவலர். அவர் அலெக்சாண்டரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்). அதில் பெரும் பணக்காரர்கள் மட்டும் அலெக்சாண்டருக்கு இலஞ்சம் கொடுத்து தப்பித்தார்கள். அதன் பின் கி.மு. 64இல் இப்பகுதிகள் உரோம் பகுதிகளாயின. கி.பி. 600க்குப்பிறகு இவை முசுலீம் படையெடுப்பாளர்களால் கைப்பற்றப்பட்டன.

சான்று:1. The World Book Encyclopedia, USA, 1988, vol-15, page: 390-393. & 2.Ancient Cities – The Archaeologey of urban life in the Ancient Near East and Egypt, Greece and Rome. By Charles Gates 2nd Edition, page: 189-202. Phonician language/Britannica.com