Sun. Apr 28th, 2024

கிட்டைட்டி நாகரிகம்:காலம்:கி.மு.1800-1200.

சிறப்புக் கட்டுரை பிரபல எழுத்தாளர் பாலன் நாச்சிமுத்து

கி.மு. 2000க்கு முன் மத்திய ஆசியாவிலிருந்து வந்த இந்தோ ஆரிய இனக்குழுவின் கிட்டைட்டி (Hittites) மக்கள் இன்றைய மத்திய துருக்கியில் குடியேறி நிறைய நகர அரசுகளை அமைத்தனர். அதில் அட்டுசாசு என்ற நகர அரசு முக்கிய அரசாக இருந்தது. கி.மு. 1650 வாக்கில் அட்டுசாசு(Hattusas) நகர அரசு பிற நகர அரசுகளை வென்று ஒரு பேரரசை உருவாக்கியது. அதுதான் கிட்டைட்டி பேரரசாகும். 1595இல் அது பாபிலோனை கைப்பற்றியது. கி.மு. 1285இல் எகிப்திய பேரரசோடு, கிட்டிட்டி பேரரசு ஒரு வரலாற்றுப்புகழ் வாய்ந்த போரை நடத்தியது. அதில் எகிப்திய அரசன் இரமேசசு-II(Rameses-II) உயிரோடு தப்பிச்சென்றார். பின் இரு பேரரசுகளும் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டனர். இதன்பின் கிரேக்க நகர அரசுகள்(மைசீனிய) வளர்ச்சியடைந்து, கி.மு. 1200அளவில் அட்டுசாசுவை எரித்து அழித்தனர். அதன் பின்னரும் கிட்டைட்டி நகர அரசுகள் 500 ஆண்டுகள் இருந்தன. கி.மு. 717இல் அசிரிய அரசன் சர்கான்-II(Sargon-II) அந்நகர அரசுகளைக் கைப்பற்றிக்கொண்டான். அதன் பின் அவை வரலாற்றில் இல்லாது போயின. பைபிளில் கிட்டிட்டி அரசுகள் குறித்துப் பேசப்பட்டுள்ளது. கிட்டைட்டிகள் தான் முதன்முதலாக இரும்பை உருக்கிப் பயன்படுத்தியவர்கள்(அதியமான் என்ற பண்டைய தமிழ் அரசகுலப் பெயர் அங்கு உள்ளது. இரும்பு பயன்படுத்திய பழைய இடங்களில் இந்தத் தமிழ் அரசகுலப் பெயர் இடம்பெற்றுள்ளது. அதியமானுடைய தகடூர் பகுதியில் மிகப் பழங்காலத்தில் இரும்பு உருக்கப்பட்டதால் இப்பெயர் இடம்பெற்றுள்ளது. இவை ஆராயப்பட வேண்டியவை). அவர்கள்தான் வேகமான, மிகக்குறைந்த எடையுடைய தேர்களை கண்டுபிடித்தார்கள். அவர்களின் கண்டுபிடிப்புகள்தான் அவர்களுடைய படை வலிமைக்குக் காரணம். அவர்கள் அக்காடியன் (Akkadian) மொழியையும், கியூபிக் வடிவ எழுத்தையும் சர்வதேச தொடர்புகளுக்குப் பயன்படுத்தினார்கள். அவர்கள் தங்கள் கிட்டைட்டி மொழியை கி.மு. 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதலில் கியூனிபார்ம் எழுத்து மூலமும் பின் கிட்டைட்டி எழுத்து (Hieroglyphs) மூலமும், எழுதினார்கள். ஆகவே இந்த எழுத்து கிரேக்கத்தின் லீனியர்-பி(Linear-B) எழுத்தைவிட 200 ஆண்டுகள் முந்தைய எழுத்தாகும். கிட்டைட்டி மொழி தான் மிகப்பண்டைய இந்தோ ஐரோப்பிய மொழியாகும்.சான்று: 1. The World Book Encyclopedia, USA, 1988, vol-9, page: 255. 2.Ancient Cities – The Archaeologey of urban life in the Ancient Near East and Egypt, Greece and Rome. By Charles Gates 2nd Edition, page: 144-152. . குறிப்பு: இரோசெட்டா கல்வெட்டு(Rosetta Stone): எகிப்தில் மெம்பிசு என்ற இடத்தில் 1799இல் கண்டுபிடிக்கப்பட்டது. கி.மு. 196இல் கிரேக்க டாலமி வம்சத்தைச்சேர்ந்த எபிபேன்சு( Ptolemy V Epiphanes) என்பவனால் பண்டைய எகிப்து, கிரேக்கம்(Ancient Egyptian hieroglyphs, Demotic script, and Greek script) ஆகிய இரு மொழிகளில் வெட்டப்பட்ட கல்வெட்டாகும். இதனைக்கொண்டுதான் பண்டைய எகிப்து மொழியைப் படித்து அறிந்துகொள்ள முடிந்தது இதன்பின் பல பண்டைய எகிப்திய கிரேக்க இரு மொழி கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன

(Ref: Rosetta Stone – Ancient History of Encyclopedia written by Mark Cartwright Dt. 3.1.2014)

பண்டைய உலக நாகரிகங்கள் – 10

கிரீட், கிரேக்க, உரோம நாகரிகங்கள் – அ

கிரீட் மைசீனியன் நாகரிகம் (Crete-Mycenaean):

கிரேக்கத்துக்கும் துருக்கிக்கும் இடைப்பட்ட கடல் ஏகியன்(Aegean) கடல் ஆகும். இதனைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் தோன்றிய 4 நாகரிகங்கள் ஏகியன் நாகரிகம் (Aegean Civilisation) எனப் படுகிறது. அவை சைக்லேடிக் (Cycladic), மினோன்(Minoan), மைசீனியன்(Mycenaean), இட்ரோசான்(Trojan) ஆகியன. இதில் சைக்லேடிக் தீவுகளில் வாழ்ந்த மக்களின் நாகரிகம் அதிகம் வளர்ச்சி அடைய வில்லை. கிரீட் தீவில் தான் புகழ்பெற்ற மினோன் நாகரிகம் உருவானது. மினோன் என்ற அரசனின் பெயரில் அந்நாகரிகம் அழைக்கப் படுகிறது. .

மினோன் நாகரிக காலம் கி.மு. 2700-1200 ஆகும். கி.மு. 2700 முதலே மினோன் மக்கள் ஆலிவ் எண்ணெயை ஏற்றுமதி செய்து வந்துள்ளனர். கி.மு. 2200வாக்கில் மினோன் நகர அரசுகள் பல உருவாகி இருந்தன. சுமார் 60 நகரங்கள் அங்கு இருந்ததாகக் கருதப்படுகிறது. மினோன் நகர அரசுகள் ஏகியன் பகுதியில் இருந்த மக்களோடும், எகிப்தோடும் வணிக உறவைக் கொண்டிருந்தனர். அதன் முக்கிய நகரம் நசாசு(Knossos).

மினோன் மக்கள் கி.மு. 2000வாக்கில் தங்கள் மொழிக்கான எழுத்தை உருவாக்கினர். கணிதத்தில் டெசிமல்(Decimal) முறையைக் கண்டுபிடித்தனர். கி.மு. 1450 வாக்கில் ஏற்பட்ட தீயில் பல மினோன் நகர அரசுகள் அழிந்து போயின. இதே காலத்தில் கிரேக்கத்தில் மைசீனியன் நாகரிகம் உருவாகியிருந்தது. பின் கி.மு. 1350அளவில் மைசீனிய படையெடுப்பால் மினோன் நகரங்கள் பல மைசீனிய மக்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்தன. எனினும் மினோன் நாகரிகம் கி.மு. 1100 வரை இருந்தது. அதன் பின் அது அழிந்துவிட்டது.

கிரேக்க மைசீனியன் நாகரிகம்(கி.மு.1600-1200): கிரேக்கத்தின் மத்தியில் இருந்த மைசீனிய(Mycenae) என்ற வலிமை வாய்ந்த நகரத்தை மையமாகக் கொண்டு இந்த நாகரிகம் உருவானது. கி.மு. 2000 வாக்கில் கிரேக்கத்துக்குள் நுழைந்தவர்கள் இந்த நகரத்தை கி.மு. 1500 வாக்கில் ஒரு வலிமையான வளமை மிக்க நகராக ஆக்கினார்கள். இவர்கள் பேசிய மொழிதான் பிற்காலத்தில் கிரேக்க மொழியாக உருவானது. மினோன் எழுத்து முறையை இவர்கள் பின்பற்றினார்கள். மினோன் கட்டடக்கலையைக் தங்களின் மாதிரியாகக் கொண்டார்கள்.

கி.மு. 1300இல் மிகப்பெரிய அரண்மனைகள் மைசீனிய நகரத்தில் உருவாயின. மைசீனிய நாகரிகத்தில் டிரையன்சு(Tiryns), பைலோசு(Pylos) தீப்சு(Thebes), மிடியா(Midea), கிலா(Gla), ஆர்ச்சமெனொசு (Orchomenos), ஆர்கோசு(Argos), சுபார்ட்டா(Sparta), நிகோரியா(Nichoria), ஏதென்சு (Athens) ஆகிய பல நகரங்கள் இருந்தன. மைசீனியர்கள், எகிப்து, மெசபடோமியா( Mesopotamia),லிவன்ட்(Levant), அனடோலியா(Anatolia), சிசிலி(Sicily), சைப்ரசு( Cyprus) ஆகிய பகுதிகளோடு வணிகம் செய்தார்கள்.

மைசீனியன் நாகரிகம் கி.மு. 1200வரை இருந்தது. அதன்பின் அது அழிந்துவிட்டது. கிரேக்கத்தின் வட மேற்குப்பகுதியில் இருந்து வந்த டோரியன்(DORIANS) என்பவர்களால் இது அழிக்கப்பட்டது என கருதப்படுகிறது. அதன்பின் 400 வருடகாலம் கிரேக்கம் இருண்ட காலமாக இருந்தது.பெண்கள்: மைசீனிய நாகரிகத்தில் ஆண்களுக்குச் சமமாக பெண்கள் நடத்தப்பட்டார்கள் எனினும் மனைவியாக இருந்த பெண்களுக்கு சொத்துரிமை இருக்கவில்லை. பெண்கள் சிலர் அதிகாரத்தில் இருந்தார்கள் எனவும் அவர்களிடம் நிலங்கள் இருந்தன எனவும் அரசியல் செல்வாக்கு இருந்தது எனவும் கருதப்படுகிறது.

கிரேக்கப்பெண்களை விட இவர்கள் அதிக உரிமையை, சமத்துவத்தைப் பெற்றிருந்தார்கள் என்பது உண்மை. சுதந்திரமான பெண்களில் சிலர் வலிமை மிக்க பூசாரிகளாக இருந்துள்ளார்கள். அவர்கள் உயர் வகுப்பு ஆண்களிடம் செல்வாக்கு பெற்றவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் கோயில்களில் இருந்த செல்வங்களுக்கான பாதுகாப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இட்ரோசான் நாகரிகம்: இந்நாகரிகம் இட்ராய் நகரத்தைச்சுற்றி உருவானதாகும். இந்நகரம் துருக்கியின் வடமேற்கு மூலையில் ஈஜியன் கடலை ஒட்டி உள்ளது. கி.மு. 1200க்கு முன்பு இது கட்டப்பட்டது. இட்ராய் நகர இடத்தில் நடந்த தொல்லியல் ஆய்வில் ஒன்றன்மேல் ஒன்றாக 9 நகரங்கள் கிடைத்துள்ளன. ஓமர்(Homer) எழுதிய இலியட்(Iliad), ஒடிசி(Odyssey) காவியத்தில் அதன் 7ஆவது நகரம் சொல்லப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்நகரம் கிரேக்கத்தில் இருந்த மைசீனியர்களால் கி.மு. 1200இல் அழிக்கப்பட்டது என கருதப்படுகிறது. இந்நிகழ்வுதான் ஓமரால் காவியமாக எழுதப்பட்டது எனலாம். கி.மு. 1200க்குப்பின் இந்நாகரிகம் வீழ்ச்சியடைந்தது.

சான்று:1. கிரீசு வாழ்ந்த வரலாறு, வெ. சாமிநாத சர்மா, சந்தியா பதிப்பகம், 2003, சென்னை-83. பக்: 1 – 432.2. The World Book Encyclopedia, USA, 1988, vol-1, page: 82-84. (Aegean civilization) 3.Aegean & Minoan civilaisation –Britannica.com, Aegean civilaisation written by Emily D.Townsend Vermeule, M.Sinclair F. Hood