பெட்ரோல் விலை உயர்ந்து வருவது தர்மசங்கடமாகதான் உள்ளது. நான் மத்திய அமைச்சர் மட்டுமே. என்னால் எதுவும் செய்ய முடியாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மேலும் கூறியதாவது :
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க, வரி குறைப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆலோசிக்க வேண்டும். இதன் விலையை ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வருவது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும்.
பெட்ரோல் விலை உயர்வு எனக்கும் தர்மச்சங்கடமாக உள்ளது. இது மிகவும் சிக்கலான பிரச்சினை. விலை குறைப்பு என்ற ஒரு பதிலை தவிர வேறு எதுவும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தராது. ஆனால், நான் ஒரு மத்திய அமைச்சர் மட்டுமே. என்னால், எதுவும் செய்ய முடியாது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தான் முடிவு செய்கின்றன.
இவ்விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பிரச்சினையை தீர்க்க வழி உள்ளதா என ஆலோசிக்க வேண்டும். எண்ணெய் உற்பத்தி நாடுகள், உற்பத்தி குறைய வாய்ப்பு இருப்பதாகக் கணித்துள்ளன. இது பெட்ரோல் விலையில் மேலும் அழுத்தம் கொடுக்கும்.
இவை அனைத்தும் உண்மை என்றால், எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் தான் விலையை குறைக்க வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும் அரசாங்கத்திற்கு அதன் மீது எந்த கட்டுப்பாடும் இல்லை.
இவ்வாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.