தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் தவறான செய்திகளை வெளியிடுவதையும், அவதூறான தலைப்புச் செய்திகளை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அண்மையில் பல்வேறு தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமற்ற, தவறான செய்திகள் வெளியிடுவதையும், சமூகத்தில் ஏற்று கொள்ள முடியாத மொழிகளை பயன்படுத்துவதையும் கண்டறிந்தது.
உக்ரைன்- ரஷ்யா விவகாரம், தில்லி வடமேற்கு பகுதியில் நிகழ்ந்த சம்பவம் ஆகியவை குறித்து நடத்தப்பட்ட விவாதம் நிகழ்ச்சி நெறிமுறை கோட்பாட்டை மீறியதாக இருந்ததாக தெரிவித்துள்ளது. வன்முறை சம்பவ காட்சிகள் ஒளிபரப்புவதன் மூலம் அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படும் என்றும் கூறியுள்ளது. இட்டுக்கட்டப்பட்ட தலைப்பு செய்திகள் சமூக விரோத செயலுக்கு வழிவகுப்பதாகவும் தெரிவித்துள்ளது. தேவையற்ற விவாத நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமைச்சகத்தின் அறிவுரைகள் www.mib.gov.in என்ற இணையத்தளத்தில் இடம் பெற்றுள்ளது.