Fri. Apr 26th, 2024

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ளார். முதல்நாள் பயணமாக அவர், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டார்.

இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும்.

இங்கிலாந்தில் இருந்து தனி விமானம் மூலம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு போரிஸ் ஜான்சன் வந்தார். பாரம்பரிய முறைப்படி அவரை குஜராத் முதல்-மந்திரி புபேந்திர பட்டேல், மாநில ஆளுநர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றனர்.

மகாத்மாக காந்தி உருவாக்கிய சபர்மதி ஆசிரமத்திற்கு சென்ற போரிஸ் ஜான்சனுக்கு வழியெங்கும் திரண்டிருந்த மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். குஜராத் மாநிலத்திற்குரிய பாரம்பரிய நடனமாடி கலைஞர்கள் வரவேற்றனர்.

bதாடர்ந்து சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மகாத்மா காந்தி வாழ்ந்த இடம் மற்றும் அவரது படைப்புகள் உள்ளிட்டவற்றை ஆர்வமுடன் பார்வையிட்டார். அங்கு உள்ள ராட்டையை போரிஸ் ஜான்சன் சுழற்றி மகிழ்ந்தார். 

அவருக்கு சபர்மதி ஆசிரமம் சார்பில் தொடக்கத்தில் காந்தி எழுதிய புத்தகமான ‘கைடு டூ லண்டன்’ (Guide to London) என்ற புத்தகமும் காந்தியின் சீடர்களில் ஒருவரான மேடலின் சிலேடு எழுதிய ‘தி ஸ்பிரிட்ஸ் பில்கிரிமேஜ்’ (The Spirit’s Pilgrmage) என்ற புத்தகமும் பரிசாக வழங்கப்பட்டது.

ஆசிரமத்தில் இருந்து புறப்பட்ட போரிஸ் ஜான்சன், பிரபல தொழிலதிபர் அதானியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது அதானி குழுமத்தின் சார்பில் இங்கிலாந்தில் தொழில் தொடங்குவது தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

அகமதாபாத்தில் முதலீடு, வர்த்தகம் தொடர்பான விஷயங்களை போரிஸ் ஜான்சன் இன்று மேற்கொள்கிறார். முன்னதாக அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போரிஸ் ஜான்சன், இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே அறிவியல், சுகாதாரம், தொழில் நுட்பம் உள்ளிட்டவற்றில் இணைந்து செயல்படுவது தொடர்பாக உடன்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.  

அகமதாபாத் பயணத்தை முடித்துக்கொண்டு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நாளை டெல்லியில் இந்திய பிரதமர் மோடியை சந்திக்கிறார். போரிஸ் ஜான்சன் – மோடி இடையேயான சந்திப்பின்போது இருநாட்டுகளுக்கு இடையே வர்த்தகம், பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.