தேசத் துரோக வழக்கு சட்டப்பிரிவை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை புதிதாக வழக்குப்பதிவு செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேசத் துரோக சட்டம் செல்லுபடியாகும் என்று கேதர்நாத் சிங் வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்பு 1962 ஆம் ஆண்டில் தீர்ப்பு அளித்திருந்தது. இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்பு முன்பு இன்று மீண்டும் நடைபெற்றது.
இன்றைய விசாரணையின் போது, தேச விரோத செயல் என அடையாளம் காணக்கூடிய நடவடிக்கைக்கு எதிராக தேசத் துரோக வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க முடியாது என்று ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே பதிலளித்திருந்தது.
இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் என்று கண்டறியப்பட்ட பிறகும் தேசத் துரோக வழக்குப் பதியாமல் இருபபது சரியான அணுகுமுறை அல்ல என்றும் ஒன்றிய அரசு சுட்டிக்காட்டியிருந்தது.
தேசத் துரோக வழக்குப்பதிவு செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியுமா என்று உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு ஒன்றிய அரசு தரப்பில் இன்று பதில் அளிக்கப்பட்டது.
ஒன்றிய அரசு அளித்த விளக்கத்தில், மாநில கவால்துறையினரை தேச துரோக வழக்குப்பதிவு செய்யாமல் இருக்குமாறு உத்தரவிட முடியாது. வரும் காலத்தில் ஒரவர் தேசத் துரோக செயலில் ஈடுபட்டால் அது எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சொல்ல முடியாது. அப்படியிருக்கும்போது 124 ஏ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என்று எப்படி சொல்ல முடியும். இதைத் தவிர்த்து எந்த உத்தரவு வழங்கினாலும் அது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்றும் உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்தது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தேசத் துரோக சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்ய உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்ததையடுத்து, அதுவரையில் மக்களை பாதுகாக்க புதிதாக தேசத் துரோக வழக்குகள் பதியப்படுவதை நிறுத்தி வைக்கலாமா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், ஒன்றிய அரசு இந்த விளக்கத்தை அளித்திருந்தது.
ஒன்றிய அரசின் விளக்கத்தை நிராகரித்த உச்சநீதிமன்றம்,தேசத் துரோக வழக்குப்பதிவு செய்வதற்கு தற்காலிகமாக தடை விதித்து இன்று உத்தரவிட்டுள்ளது.