Tue. Apr 23rd, 2024

சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக தலைவர் கே.அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நக்கீரன் இதழில் அண்மையில் வெளிடப்பட்டுள்ள ஒரு கட்டுரையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் இருந்து 3000 முதல் 5000 கோடி ரூபாய் வரை வெளிநாட்டுக்குச் சென்றிருப்பதாக ஆளுநர் ஒரு அறிக்கையை டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளாராம் என்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசுக்கு நெருக்கமான சில தொழிலதிபர்கள் மூலமும் ஹவாலா வழியாகவும் இந்த பணம் சென்றுள்ளதாகவும் அந்த அறிக்கையில் ஆளுநர் குறிப்பிட்டுள்ளாராம்.

ஜுனியர் விகடன் இதழிலும் எதற்கு கேட்டாலும் நிதியில்லை என்று தமிழக அரசு சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில், இங்கு இருந்து 5000 கோடி ரூபாய் வெளிநாட்டிற்கு சென்றுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


பிப்ரவரி மாதத்தில் முதல்வர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களுக்கு வேண்டிய ஒரு ஆடிட்டரை அழைத்துக் கொண்டு தனியாருக்கு சொந்தமான விமானத்தில் துபாய் சென்றுள்ளதற்கான விவரம் கிடைத்துள்ளது. 9 பேர் சென்றிருக்கிறார்கள். அதில் முதல் பயணி உதயநிதி ஸ்டாலின், 2வது பயணி ஆகாஷ் பாஸ்கரன், 3 வது பயணி ரித்திஷ், 4 வது பயணி சபரீசன், 5 வது பயணி கார்த்திகேயன், 6 வது பயணி ஆடிட்டர் சண்முகராஜ், 7வது பயணி விஜய், 8 வது பயணி வின்சென்ட், 9 வது பயணி அபிராம ரெட்டி ஆகியோர் பயணம் செய்துள்ளதற்கான ஆவணம் இருக்கிறது.

பிப்ரவரி 2 ஆம் தேதி சென்னையில் இருந்து துபாய்க்கு தனி விமானத்தில் சென்றிருக்கிறார்கள். அங்கு முதல்வரின் மருமகன் சபரீசன் ஒரு மீட்டிங்கில் கலந்துகொண்டிருக்கிறார். இந்த மீட்டிங்கில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று பார்த்தால், எனக்கு கிடைத்துள்ள புகைப்படத்தில், தற்போது துபாய் சென்ற முதல்வர் அங்கு யாரையெல்லாம் சந்தித்தாரே, அவர்களில் ஒருவரான தொழிலதிபர் யூசூப் அலி உள்பட பலர் இருக்கிறார்கள்.
இதுபோல் எனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில்தான் விருதுநகரில் பாஜக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது 5000 கோடி ரூபாய் அளவுக்கு துபாய் பணம் எடுத்துச் சென்றிருப்பதாக சொல்கிறார்கள். எதற்காக அந்த தொகை துபாய்க்கு கொண்டு செல்லப்பட்டது, 5000 கோடி ரூபாயில் உள்ள மர்மம் என்ன, தொடர்ச்சியாக முதல் அமைச்சர் குடும்பத்தினர் துபாய் போகிறார்கள். இப்போது முதல் அமைச்சரும் போகிறார் என்று பேசினேன்.

அதே போல தான் சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் பேசினேன். நிறையே நிதிகளை கூட்டிப் போகிறார்.. தமிழ்நாட்டிற்கு நிதியை கொண்டு வரப் போகிறாரா, கோபாலபுரத்திற்கு கொண்டு வரப் போகிறராரா என்ற கேள்விகளை முதல்வரிடம் கேட்டேன்.
6100 கோடி ரூபாய் தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளதாக கூறுகிறார் முதல்வர். அந்த தொகையில் 4,100 கோடி ரூபாய் துபாயில் உள்ள கேரளாவைச் சேர்ந்த இரண்டு தொழில் அதிபர்கள் யூசூப் அலி மற்றும் ஆசாத் அலி ஆகியோர் மூலமாக தமிழகத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த தொகையில் அதிகமாக, அதாவது 70 சதவீதம் அளவுக்கு யூசூப் அலிதான் தமிழகத்தில் முதலீடு செய்கிறார்.


இதையெல்லாம் என்னிடம் உள்ள ஆவணங்கள் மூலம் தமிழக மக்களுக்கு தெரிவித்திருக்கிறேன். இப்படிபட்ட நேரத்தில், திமுக அமைப்புச் செயலாளர் எனக்கு 100 கோடி ரூபாய் கேட்டு அவதூறு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். முதல்வர் பற்றி அவதூறு பேசியதற்காக 24 மணிநேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் 100 கோடி ரூபாய் இழப்பீடாக தமிழ்நாடு முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு தர வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.


அவர் அனுப்பிய நோட்டீஸுக்கு ஒரே பதில்தான். நான் பேசியது அனைத்துமே ஆதாரத்துடன்தான் பேசியிருக்கிறேன். திமுக அனுப்பியுள்ள நோட்டீஸை, வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்க வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறேன். மார்ச் 26 ஆம் தேதி திமுக அனுப்பிய நோட்டீஸ் 29 ஆம் தேதி பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்திருக்கிறது. நீதிமன்றத்தில் பார்த்துகலாம்.

அதே சமயம், அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அதிமுக அமைச்சர்களை பிளாக் மெயில் செய்து அண்ணாமலை பணம் வாங்கியிருப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் சொல்லியிருக்கிறார். நான் இன்னும் 6 மணி நேரம் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அமர்ந்து இருப்பேன். தெம்பு, திராணி இருக்கிறது என்றால், எனக்கு எதிராக அவர்களிடம் ஆதாரம் இருக்கிறது என்றால் 6 மணிநேரம் காத்திருக்கும் என்னை பாஜக அலுவலகத்திற்கு வந்து கைது செய்து சிறைக்கு அனுப்ப வேண்டும்.

என் மீதான குற்றச்சாட்டுக்கு எல்லாம் நான் மானநஷ்ட நோட்டீஸ் எல்லாம் அனுப்ப மாட்டேன். நான் சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து அரசியலுக்கு, பாஜகவுக்கு வந்திருக்கிறேன். என்னை இன்று மாலை 6 மணிக்குள் கைது செய்யவில்லை என்றால், இனிமேல் திமுகவினர் பாஜகவுக்கு எதிராக கூறும் எந்த குற்றச்சாட்டையும் பொதுமக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.


இவ்வாறு பாஜக தலைவர் கே.அண்ணாமலை கூறியுள்ளார்.