Thu. May 16th, 2024

மத்திய பாஜக அரசு இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைந்தவுடன், காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த 370 வது சட்டப்பிரிவை நீக்கி உத்தரவிட்டது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மூன்றாக பிரித்து, யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது. அதற்கான சட்ட மசோதாவும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கும் இடையே நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், மக்களவை இன்று கூடியதும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதன் மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசிய இஸ்லாமிய கட்சி உள்பட பல்வேறு கட்சி உறுப்பினர்கள் காஷ்மீர் நிலவரம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதனிடையே, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குரிய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதன் மீதான விவாதத்திற்கும் பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
370 வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் 890 க்கும் மேற்பட்ட மத்திய சட்ட பிரிவுகள் ஜம்மு காஷ்மீரில் அமலுக்கு வந்துள்ளது. டாக்டர் அம்பேத்கரின் கனவு, ஜம்மு காஷ்மீரில் நிறைவேறத் தொடங்கியுள்ளது. பட்டியலினம் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நாட்டின் பிற பகுதிகளில் கிடைத்து வரும் அனைத்து நலத்திட்ட உதவிகள், சலுகைகள் அனைத்தும் காஷ்மீரில் உள்ள பட்டியலின, பழங்குடியின மக்களுக்கும் முழுமையாக கிடைத்து வருகிறது.
2021 22 ஆம் ஆண்டில் மட்டும் ஒரு லட்சத்து 43 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் காஷ்மீர் மாநிலத்திற்கு வருகை புரிந்துள்ளனர். இவ்வளவு எண்ணிக்கையிலான வருகை கடந்த 7 ஆண்டுகளில் கடந்த ஆண்டு மட்டுமே நடைபெற்றுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் 1,198 புதிய தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 200க்கும் மேற்பட்ட புதிய தொழில் நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் ஜம்மு காஷ்மீரில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 143 கோடி ரூபாய் அளவுக்கு அவசர கால கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசினார்.