ரயில் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து மத்திய ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இரவு நேர பயணத்தின் போது பயணிகள் சிலர், கைபேசியில் திரைப்பட பாடல்கள் உள்ளிட்டவற்றின் ஒலியை அதிக சத்தத்துடன் வைத்து கேட்டு வருவதாகவும், அதனால் இரவு பயணத்தின் போது நிம்மதியாக தூங்க முடியவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பயணிகள் தரப்பில் புகார் மனுக்கள் ரயில்வே அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல், கணினி உள்ளிட்டநவீன மின்சாதங்கள் மூலம் திரைப்படங்கள் பார்ப்பது, பணி நிமித்தமாக வேலை பார்ப்பது போன்ற செயல்களின் மூலம் சக பயணிகள் நிம்மதியாக பயணிக்க முடியவில்லை என்றும், அந்த புகார் மனுக்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. மேலும், இரவு நேர பயணத்தின் போது மின் விளக்குகளை ஒளிர விடுவதால், இரவு நேர பயணம் என்பதே மிகுந்த அவஸ்தைக்குரிய ஒன்றாக மாறிவிட்டதாகவும் ரயில் பயணிகள் நலச் சங்கத்தினரின் குற்றச்சாட்டாக உள்ளது.
இப்படி பல்வேறு தரப்பினரும் தங்கள் குறைகளை ரயில்வே அமைச்சத்திற்கு புகார்களாக தெரிவித்த நிலையில், பெரும்பான்மையான பயணிகளின் நலன் கருதி, இரவு நேர பயணத்தின் போது புதிய கட்டுப்பாடுகளை விதித்து ரயில்வே அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளனது.
அந்த உத்தரவில், கைபேசி, கணினி உள்ளிட்ட மின்சாதனங்கள் மூலம் இரவு 10 மணிக்கு மேல் அதிக ஒலியுடன் பாடல்களை கேட்பதற்கும், சத்தமாக உரையாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும், இரவு நேர மின்விளக்கை தவிர்த்து மற்ற மின் விளக்குகளை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இரவு நேர பயணிகளுக்க சக பயணிகளால் ஏற்படும் சிரமங்களை தடுத்து நிறுத்தும் பணிகளில் பயணச்சீட்டு பரிசோதகர், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் உள்ளிட்டோர் கண்காணிக்க வேண்டும் எனவும் ரயில்வே அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
குளிர்சாதன வசதி வகுப்பு பயணிகள் அவதி…
கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்பாக ரயில்களில் குளிர்சாதன வசதி கொண்ட வகுப்புகளில் பயணம் செய்பவர்களுக்கு போர்வை, தலையணை உள்ளிட்டவற்றை ரயில்வே நிர்வாகம் வழங்கி வந்தது. கொரோனோ தொற்று தாக்குதல் துவங்கியுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக போர்வை, தலையணை உள்ளிட்டவற்றை வழங்கும் நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டது.
2020 ஆம் ஆண்டு மார்ச் மாத நிறைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட இந்த நடவடிக்கை, தற்போது வரை அமலில் உள்ளது. இதனிடையே கடந்த வாரம், குளிர்சாதன வசதி வகுப்பு பயணிகளுக்கு போர்வை, தலையணை ஆகியவை மீண்டும் வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்து, அதற்கான உத்தரவையும் வெளியிட்டது.
இந்த உத்தரவில், உடனடியாக இந்த நடவடிக்கை அமல்படுத்தப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியபோதும், கடந்த ஒரு வாரமாக இரவு நேர பயணத்தின் போது குளிர்சாதன வசதி வகுப்பில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இந்த வசதிகள் செய்து தராததால், குழந்தை, வயதானவர்களுட்ன் குடும்பத்துடன் பயணிப்போர் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்த சலுகைகளை உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.