Thu. May 16th, 2024

ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாமிய மத சட்டத்தில் அத்தியாவசிய அம்சம் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளதாக கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவியர் ஹிஜாப் ஆடை அணிவது தொடர்பாக கடும் சர்ச்சை எழுந்தது. பல்வேறு கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் ஆடை அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து நாடு முழுவதும் இஸ்லாமியர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தனிமனிதரின் ஆடை விவகாரத்தில் கல்வி நிறுவனங்கள் தலையிடக் கூடாது என்று கல்வியாளர்களில் பெரும்பான்மையானோர் கருத்து தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் ஹிஜாப் ஆடைக்கு ஆதரவாகவும் எதிராகவும் பெங்களூர் உள்பட கர்நாடகாவின் பல்வேறு நகரங்களில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன.

இந்து மதத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் தங்கள் கழுத்தில் காவி நிறத்திலான துண்டை அணிந்து வந்தனர். இதன் காரணமாக, இரு தரப்பினருக்கும் இடையே எழுந்த சர்ச்சை, போராட்டத்திற்கு வித்திட்டது. இதனைத்தொடர்ந்து கர்நாடகாவின் பல நகரங்களில் தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இதனிடையே, ஹிஜாப் அணிந்து கல்வி நிறுவனங்களுக்கு வருவதற்கு தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணையின் போது, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் மத அடையாளங்களை குறிக்கும் எந்தவிதமான ஆடையையும் அணிந்து வரக் கூடாது என உத்தரவிட்டதுடன், முழுமையான விசாரணைக்குப் பிறகு இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

அதனையடுத்து, ஹிஜாப் அணிந்து கல்வி நிறுவனங்களுக்கு செல்வது தொடர்பான வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று முழுமையான தீர்ப்பை வழங்கியது.

ஹிஜாப் அணிவது குறித்து இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமான ஒன்று என்று குறிப்பிடபடவில்லை. அரசின் சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே. மாணவர்களின் வேலை என்பது படிப்பதுதான். எனவே, இதையெல்லாம் விட்டுவிட்டு அவர்கள் படித்து ஒற்றுமையாக இருக்க வேண்டும். கர்நாடக அரசின் ஹிஜாப் தடை அரசாணை செல்லும்;எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று கூறி கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

மத்திய அமைச்சர் வரவேற்பு

கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்றுள்ள மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் வரவேற்றுள்ளார்.