Mon. May 6th, 2024


  • சோழப் பேரரசின் பெருந்தேவியான செம்பியன் மாதேவியால் கற்றளியாக உருப்பெற்ற ஆலயமே திருநல்லம் என்கிற கோனேரிராஜபுரம் பூமிநாதர் ஆலயம். அதன் பின்னர் வந்த அரசர்கள் பல்வேறு திருப்பணியில் ஈடுபட்டனர். அதில் ஒரு சோழ அரசன் நடராஜரின் ஆனந்தத்தையே வார்த்தெடுத்து சிலா ரூபத்தில் சிலிர்க்க வைக்க வேண்டுமென்று ஆவலுற்றான். சிற்பிகள் வரவழைக்கப்பட்டனர். தன் மனதிற்கு சிறந்தவர் என கணித்து ‘நீங்கள்தான் செய்து தர வேண்டும்’ என்று உத்தரவிட்டான். சிற்பியின் கரங்களில் சிலை வளர்ந்தது. ஆனால், அந்த மெல்லிய சிரிப்பும், ஆனந்த அலையலும் உள்ளத்தில் தைக்கும்படி சிலையில் பொலிந்து இறங்க மறுத்தது. சோழனின் கால்பற்றி ”என்னால் தில்லைக்கூத்தனின் திருவுருவைச் செய்ய இயலாதய்யா…
    ஏதோவொன்று என்னை மறிக்கிறது. காரணம் புரியாது தவிக்கிறேன். என் சிலைக் கணக்குகள் தவறாகின்றன. என்னை மன்னியுங்கள்” என்றான்.

”அறிவிலியாக பேசாதே. இன்றொரு நாள் உனக்கு அவகாசம். நாளை சிலை பிரதிஷ்டை. ஒன்று சிலை இருக்க வேண்டும். இல்லையெனில் உன் சிரசு பூமியில் உருளும்” என்று அரண்மனைக்குள் சென்றார், அரசன். சிற்பி திருநல்லம் கோயிலுக்குள் நுழைந்தான். ஈசனுக்கருகே வயதான தம்பதியர் மேனி முழுதும் திருநீறு பூசி நின்றிருந்தனர். ”வெகு தொலைவிலிருந்து வருகிறேன் ஐயா. தொண்டை தாகத்தால் வறட்சியுற்றிருக்கிறேன். அருந்த நீர் வேண்டுமே” என்று பணிவாக கேட்டனர். சிற்பி ”நீர் வேண்டுமெனில் என்னையா கேட்பீர். எங்கேனும் இருந்தால் பிடித்துக் குடித்துக் கொள்ளுங்கள்” என்றான். வார்த்தைகள் கூர் ஈட்டியாகப் பாய்ந்தது.

”திருநல்லமுடையாரை தரிசிக்க வந்தவருக்கு நீர் கொடுக்க மாட்டீரா” என்றார் வேதியர்.சிற்பி கிழச்சிங்கத்தின் பக்கம் திரும்பினான். முகத்தில் கோப அனல் பறந்தது. ‘ஐயா, வேதியரே… இதோ வெந்து கொண்டிருக்கிறதே இந்த உலோகக் குழம்பை எடுத்துக் குடியுங்கள். இப்போதைக்கு இதுதான் முடியும்” என்று வெறுப்புடன் பேசினான். அந்த திவ்ய தம்பதியினர் கொதித்துப்போய், பொன்னுருவில் கொப்பளிக்கும் அக்னிக் குழம்பில் தம் அழகிய பஞ்சினும் மெல்லிய காலடியை உலைக்குள் இருக்கும் பாத்திரத்தில் வைத்து இறங்கினர். சிற்பி அலறினான். ‘ஐயோ…” என்று பெருங்குரலெடுத்துப் பிளிறினான். அவ்விடத்தில் பெருஞ்ஜோதியொன்று வெடித்தது. உலகம் யாவையும் மறைத்து ஆனந்தக் கூத்தனாக… தில்லை அம்பல நடராஜனாக திகழ்ந்தெழுந்தது. விரிவார் சடையன் எண்திக்கும் விரிந்தெழுந்தான். சடாபாரம் அலைய ஆனந்த நர்த்தனமாடினான். உள்ளுக்குள் அசைந்தவன் புறத்திலே சிலையாகி நின்றான். சிற்பி மூர்ச்சையுற்றான். சிலை பொன்னாக ஜொலித்தது. அருகே சென்று பார்க்க சிலையின் மார்புப் புறம் மூச்சுக் காற்றின் அசைவால் மேலே விம்மி விம்மி அழுந்தியது. புன்சிரிப்பொன்று உதடுகளில் நிரந்தரமாக படர்ந்திருந்தது. கைகளின் கீழே தோலின் மேல் தோன்றும் மரு ஒன்று காணப்பட்டது. கைகள் வைத்துணர ரத்த ஓட்டம் போல ஏதோவொன்று அசைந்தோடியதைப் பார்த்து அயர்ந்தான். மணிக்கணக்கில் முகவாயில் கை வைத்து தன் கண்களால் சிலையின் வடிவழகைப் பருகினான். மன்னரை பார்க்கப் போனான். நடந்ததைக் கூறினான். மன்னர் நம்ப மறுத்தார். கோயிலிலுள்ள சிலையழகைக் கண்டு மயங்கினார். தன் போன்று கை நகங்களும், தோலின் வழவழப் பும் எப்படி என்று சோதித்தறிய மெல்லிய ஈட்டியால் விலாப்பக்கம் குத்த குருதி கொப்பளித்தது. ‘ஐயனே என்னை மன்னித்துவிடு” என்று அவர் கழற்சதங்கை கால் பற்றித் தொழுதான். ஊரார் கூடி விழா எடுத்தனர்.
இன்றும் அந்த உயிரோட்டம் மிகுந்த நடராஜர் சிலை திருநல்லம் எனும் கோனேரிராஜபுரத்தில் உள்ளது. நால்வராலும் பாடல் பெறும்போது திருநல்லம் என்றழைக்கப்பட்ட இத்தலம், கோனேரிராயன் என்னும் சிற்றரசனுக்குப் பிறகு ‘ கோனேரி ராஜபுரம்’ என்றாகியது.

வெளிப்பிராகாரத்தின் வடக்குப் பக்கம் அம்பாள் தனிக் கோயிலில் எழிலோடு வீற்றிருக்கிறாள். சொல்லச் சொல்ல மனதிற்கு இனிமையை ஊட்டும் அழகுப் பெயர் இவளுக்கு. திருஞான சம்பந்தர் அங்கோல் வளை மங்கை என்கிறார். அங்கவள நாயகி என்றும், தேக சுந்தரி என்றும் சற்றே மாற்றியும் அழைக்கிறார்கள். நடராஜர் மண்டபம். நகமும், சதையும், தோலின் மருவும் அண்ணாந்து பார்க்க வைக்கும் சிலையின் பிரமாண்டமும் மயிர்க்கூச்செரிய செய்கின்றன. இன்னமும் கூட ஒரு கொதிப்பும், தணலும் சந்நதியை நிறைத்தபடி இருக்கிறது. சடை கற்றைகள் தீ போல பரவியிருக்கிறது. கால்கள் வீசியிருக்கும் லாவகத்தை அருகிலிருந்து பார்க்க ஏதோவொரு புயல் சட்டென்று கடந்து நகர்வது போன்ற உணர்வு. கால் மாற்றி நடனமிடும் முகத்தில் ஓர் நளினமும், மெல்லிய புன்சிரிப்பும் அந்தப் பொன்னொளியில் இன்னும் ஜொலிக்க வைக்கிறது. அந்தச் சிற்பியின்மிரட்சியை நாமும் அங்கு உணரலாம்.
[09:49, 2/18/2021] +91 99655 87724: யுகம்தோறும் வீற்றிருப்பவரான மூலவர் சந்நதிக்கருகில் இடையறாத ஓர் அருட் சக்தி பொத்துக் கிளர்ந்தெழுகின்றது. அருகினில் சென்று இமைமூட நம் அகத்திலும் சுழன்று எழுகிறார். இத்தலத்திற்கு வரும் பக்தர்களுக்கு மணமுடித்து மகிழ்கிறான். அதனாலேயே திருநல்லமுடையார் எனும் பூமிநாதரை ‘கல்யாண சுந்தரர்’ என்று அன்பாக அழைத்தனர். அப்பரடிகள் ‘நல்லம் மேவிய நாதன் அடிதொழ வெல்ல வந்த வினைப்பகை வீடுமே” என்கிறார். இத்தல ஈசனின் திருவடிகளை தொழ நம்மை அழிக்க வந்த வினைகள் அழியுமே என்று உறுதி சொல்கிறார்.

இத்தலம் கும்பகோணம் – காரைக்கால் மார்க்கத்திலுள்ள எஸ்.புதூர் என்ற ஊரிலிருந்து செல்ல வேண்டும். மினி பஸ்கள் மற்றும் ஆட்டோ வசதிகளும் உள்ளன.