Thu. May 16th, 2024

5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமையவுள்ள நிலையில், நேற்று (மார்ச் 10) புதுடில்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து, அவர்களின் வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார் பிரதமர் மோடி.

அந்தக் கூட்டத்தில் பேசிய மோடி, சாதி அரசியலை தவிர்த்துவிட்டு வளர்ச்சித் திட்டங்களை மனதில் வைத்து மக்கள் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளார்கள். அவர்களின் நம்பிக்கையை மேலும் மேலும் அதிகரிக்கும் வகையில் மக்களின் முன்னேற்றத்திற்கும் இந்திய தேசத்தின் வளர்ச்சிக்கும் கடுமையாக உழைப்போம் என்று உறுதிபட தெரிவித்தார்.

இதனையடுத்து, இரண்டு நாள் பயணமாக அவரது சொந்த மாநிலமான குஜராத்திற்கு இன்று பிற்பகல் சென்றார் பிரதமர் மோடி. அகமதாபாத் நகரில் அவருக்கு உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

விமான நிலையத்தில் இருந்து பாஜக தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடம் வரை பிரதமர் மோடியை, அம்மாநில பாஜகவினர் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அப்போது வழியெங்கும் திரண்டிருந்த பொதுமக்கள் பிரதமருக்கு ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து, பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, பொதுமக்களின் முன்னேற்றத்திற்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்து கட்சி நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டறிந்தார். பின்னர், நாட்டு மக்களின் மேம்பாட்டிற்காகவும், தேசத்தின் வளர்ச்சிக்காவும் இன்னும் கூடுதலான அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் இறுதியில் குஜராத் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடியின் இரண்டு நாள் சுற்றுப்பயணம், சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள அம்மாநில பாஜக நிர்வாகிகளுக்கு உத்வேகம் அளிக்கும் என்று குஜராத் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.