5 மாநில தேர்தல் முடிவுகளால் நம்பிக்கை இழந்துவிடாமல், வரும் 2024 ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்க்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, பாஜகவை எதிர்க்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் இழந்துவிட்டது. காங்கிரஸை நம்பி இருக்க முடியாது. காங்கிரஸ் விரும்பினால், அந்த கட்சியோடு இணைந்து போராட தயாராக இருக்கிறோம். இப்போதைக்கு ஆக்ரோஷமாக இருக்காதீர்கள். நேர்மையாக இருங்கள். இந்த வெற்றி பாஜகவுக்கு எதிர்காலத்தில் பெரும் இழப்பை ஏற்படுத்தும். 2022 தேர்தல் முடிவுகள் 2024 தேர்தலின் தலைவிதியை தீர்மானிக்கும் என்று பாஜகவினர் கூறுவது நடைமுறைக்கு மாறானது.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி செல்வாக்குடன் இருந்த காலத்திலேயே அக்கட்சியில் இருந்து வெளியேறி திரிணாமுல் காங்கிரஸ் என்று தனிக்கட்சி துவங்கி, அம்மாநிலத்தில் அசைக்க முடியாக சக்தியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தார். தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸே மேற்கு வங்கத்தில் செல்வாக்கு மிகுந்த நிலையில் இருந்து வரும் நிலையில், இரண்டாம் இடத்தில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கும் நிலையில், காங்கிரஸ் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுவிட்டது.
மேற்கு வங்கத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் திரிணாமுல் காங்கிரயை வளர்த்தெடுக்கம் விதமாக பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் தற்போது நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டது திரிணாமுல் காங்கிரஸ். ஆனால், அக்கட்சிக்கு பெரிய வரவேற்பு இல்லை.
டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ள ஆம் ஆத்மி, குறுகிய காலத்திலேயே பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளுக்கு அடுத்து மூன்றாவது சக்தி வாய்ந்த கட்சியாக ஆம் ஆத்மியும், அதன் நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பார்க்கப்படுகிறார். இந்த நேரத்தில், தேசிய அளவில் ஆம் ஆத்மியின் வளர்ச்சியை தடுக்கவும், பாஜகவின் ஆதிக்கத்தை வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தடுத்து நிறுத்தவும், இதுவரை காங்கிரஸ் கட்சியோடு முட்டி மோதிக் கொண்டிருந்த மம்தா பானர்ஜி, திடீரென்று காங்கிரஸோடு இணைந்து செயல்பட தயார் என்றும், பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் காங்கிரஸ் தலைமையிலும் ஓரணியில் திரள வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளது, தேசிய அளவில் மிகப்பெரிய விவாத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.