Thu. May 16th, 2024

பஞ்சாப் சட்டப்பேரவைக்கான தேர்தல் இறுதி முடிவுகள் இரவு 10 மணியளவில் அறிவிக்கப்பட்டுள்ளன.

மொத்த இடங்களான 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வாகை சூடியதையடுத்து, முதல்முறையாக பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி அரியணை ஏறுகிறது. டெல்லிக்கு அடுத்து இரண்டாவது மாநிலமாக பஞ்சாபில் ஆட்சியை பிடிப்பதன் மூலம் ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சிக்குரிய அந்தஸ்தை பெறும் நிலை உருவாகியுள்ளது.

அம்மாநிலத்தில் ஆளும்கட்சியாக இருந்த காங்கிரஸ் 18 தொகுதிகளில் மட்டுமே வெற்றிப் பெற்றுள்ளது. சிரோன்மணி அகாலிதளம் 3 தொகுதிகளிலும் பாஜக 2 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்டை ஒருவர் தலா ஒரு தொகுதிகளிலும் வெற்றிப் பெற்றுள்ளனர்.

பகவந்த் மான் முதல்வராக பதவியேற்பு

ஆம் ஆத்மி கட்சி சார்பில் பஞ்சாவைப் சேர்ந்த பகவந்த் மான், அம்மாநிலத்தின் முதல்வராக முதல்முறையாக பதவியேற்க உள்ளார். தற்போது இவர் மக்களவை உறுப்பினராக உள்ளார்.

பதவியேற்பு விழா குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுதந்திர போராடட தியாகி பகத்சிங்கின் கிராமமான கட்கர்காலனில் தான் தான் முதல்வராக பதவியேற்பேன்; ராஜ்பவனில் பதவி ஏற்க மாட்டேன் என்றும் அறிவித்துள்ளார்.

மேலும், ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் அமர்ந்தவுடன், பஞ்சாபின் எந்த அரசு அலுவலகங்களிலும் முதல்வரின் புகைப்படங்கள் இருக்காது. பகத் சிங் மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் படங்கள் மட்டுமே இருக்கும் என்றும் பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், பஞ்சாப் மற்றும் டெல்லியில் அக்கட்சியின் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.