Sun. May 19th, 2024

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலம் தவிர்த்து எஞ்சிய 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

வெற்றிக் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களைகட்டியுள்ள நிலையில், பிரதமர் மோடி, டெல்லியில் உள்ள பாஜக கட்சி தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவருக்கு அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர், தொண்டர்களிடையே பேசிய பிரதமர் மோடி, பாஜக அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாகதான் சட்டப்பேரவை தேர்தல்களின் வெற்றி அமைந்துள்ளது. மக்கள் மனதில் நிலையான இடத்தை பாஜக பிடித்துள்ளது. இப்போதே ஹோலி பண்டிகை துவங்கிவிட்டதற்கான எழுச்சியை தொண்டர்களிடம் பார்க்க முடிகிறது. வாக்களித்த அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவா மாநில தேர்தல் முடிவுகள் குறித்து வெளியான அனைத்து கருத்துக்கணிப்புகளையும் தேர்தல் முடிவுகள் பொய்யாக்கியுள்ளன. ஏற்கெனவே ஆளும்கட்சியாக உள்ள கட்சி, இரண்டாவது முறையாகவும் ஆட்சியை பிடித்துள்ளது, இதற்கு முன்பு இல்லாத சாதனையாகும். அரசியல் நிபுணர்கள் புதிய கண்ணோட்டத்துடன் சிந்திக்க வேண்டும். இனியும் பழைய பல்லவியையே திரும்ப, திரும்ப பாடிக் கொண்டிருக்க கூடாது. சாதியை முன்வைத்து அரசியல் செய்தவர்களை மக்கள் புறந்தள்ளிவிட்டு, வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கான அரசை தேர்வு செய்துள்ளனர்.

இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

நான்கு மாநிலங்களில் காவிக் கொடி

இரவு 9 மணி நிலவரப்படி உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பாஜக கூட்டணி 273 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய காலை 8 மணி முதலாகவே அம்மாநிலத்தில் பாஜகவே தொடர்ந்து பெரும்பான்மைக்கு மேலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதன் காரணமாக, தற்போதைய முதல்வர் யோகி தலைமையிலான பாஜக ஆட்சி மீண்டும் அங்கே அமையவுள்ளது.

இரண்டாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை சமாஜ்வாதி கட்சி பெற்றுள்ளது. அக்கட்சி 130 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு இரண்டே 2 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து பரிதாபமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

கோவா மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 20 இடங்கள் தேவை என்ற நிலையில், அம்மாநிலத்தில் 20 இடங்களில் பாஜக வெற்றிப் பெற்றுள்ளது. இரவு 10 மணியளவில் அனைத்து தொகுதிகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, பாஜக 20 இடங்களிலும், காங்கிரஸ் 11 இடங்களிலும், ஆம் ஆத்மி 2 இடங்களிலும் பிற கட்சியினர் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 இடங்களில் பாஜக கூட்டணி 48 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆக இந்த மாநிலத்திலும் பாஜகவே ஆட்சி அமைக்கவுள்ளது. காங்கிரஸ் 18 தொகுதிகளிலும் இதர கட்சிகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் பாஜக 32 தொகுதிகளில் வாகை சூடியுள்ளது. இரண்டாவது பெரிய கட்சியாக தேசிய மக்கள் கட்சி 7 இடங்களிலும், நாகலாந்து மக்கள் முன்னணி 5 இடங்களிலும் காங்கிரஸ் 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதர கட்சியினர், சுயேட்சைகளை உள்ளடக்கியவர்கள் என 5 இடங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளனர். பெருபான்மைக்கு தேவையான 31 தொகுதிகளுக்கு மேலாக பாஜக வெற்றிப் பெற்றுள்ளதால், அம்மாநிலத்தில் உள்ள பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள், வெற்றிக் கொண்டாட்டடத்தில் தூள் கிளப்பி வருகின்றனர்.