Fri. Nov 1st, 2024

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், உ.பி உள்பட 5 மாநிலங்களிலும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை ஆங்கில தொலைக்காட்சிகள் வெளியிட்டுள்ளன. பிரபல டைம்ஸ் ஆப் இண்டியா உள்பட வட இந்திய தொலைக்காட்சிகள நடத்தியுள்ள கருத்து கணிப்பில் கோவா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

இருப்பினும் தற்போதைய ஆளும்கட்சியான பாஜக, அவ்வளவு எளிதாக காங்கிரஸ் ஆட்சி கோவாவில் அமைத்து விடும் அளவுக்கு விட்டு விடாது என்பது என்ற அளவுக்குதான் கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

17 தொகுதிகளில் காங்கிரஸும், ஆளும்கட்சியான பாஜக 16 இடங்களும் கைப்பற்றும் எனவும் ஆம் ஆத்மி 2 இடங்களிலும் இதர கட்சிகள் 5 இடங்களிலும் வெற்றிப் பெறும் கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் இதர கட்சிகள் எந்த கட்சிக்கு ஆதரவு தருகிறார்களோ, அந்த கட்சியே ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் கட்சியான காங்கிரஸ், மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பாஜக ஆகிய இரண்டு கட்சிகளை விட அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி தனித்த பெரும்பான்மையான இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

மொத்தமுள்ள 117 இடங்களில் பெரும்பான்மைக்கு தேவையான 66 இடங்களை விட கூடுதலாக ஆம் ஆத்மி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் அந்தக் கட்சி 70 இடங்களிலும், ஆளும் காங்கிரஸ் 22 இடங்களிலும், சிரோன்மணி அகாலி தளம் 19 இடங்களிலும் பாஜக 5 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக 37 இடங்களிலும் காங்கிரஸ் 31 இடங்களிலும் ஆம் ஆத்மியும் இதர கட்சியும் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெறும் என்றும் அந்தமாநிலத்தில் தொங்கு சட்டசபை அமைவதற்கான வாய்ப்பே அதிகமாக உள்ளது என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/TimesNow/status/1500826552380047368?s=20&t=Xb4NRMPBT1U4LzHweBjgow

உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான 202 இடங்களை விட கூடுதலாக பாஜக தொகுதிகளைப் பெற்று மீண்டும்ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

உபியில் ஆட்சியை தக்க வைக்கும் பாஜக

தேசிய அளவில் மிகப் பெரிய எதிர்பார்பபை ஏற்படுத்தியிருக்கும் உபி தேர்தல் முடிவுகள் மத்திய பாஜகவுக்கு நிம்மதியை தரும் வகையில்தான் இருக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆளும்கட்சியான பாஜக 211 தொகுதிகள் முதல் 225 வரையிலான இடங்களில் வெற்றிப் பெறும் என்றும் சமாஜ்வாதி கட்சி 146 முதல் 170 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும் பகுஜன் மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் முறையே இரட்டை இலக்கு எண்ணிக்கை அளவுக்குதான் தொகுதிகள் கைப்பற்றும் என்றும் கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் தெரிவிப்பதாக அரசியல் தேர்தல் கள வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், மணிப்பூரிலும் ஆட்சியை தக்க வைக்கும் அளவுக்கு பாஜக, தேர்தல் முடிவுகள் வந்தவுடன் ஆட்சி அமைப்பதற்கு தேவையான கூட்டணியை உருவாக்கி விடும் என்ற அளவுக்குதான் கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் தெரிவிப்பதாகவும், பாஜகவை போலவே காங்கிரஸுக்கும் அந்த வாய்ப்பு உள்ளதாகவும், மணிப்பூர் மாநிலத்தை பொறுத்தவரை தனிப் பெரும் கட்சி என்ற அந்தஸ்து பாஜகவுக்கே கிடைக்கும் என்றும் அரசியல் கள ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.