Fri. Nov 1st, 2024

உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்களின் கல்விக் கடனை
முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு சு.வெங்கடேசன் எம்.பி எழுதியுள்ள கடிதத்தின் முழு விவரம் இதோ…

உக்ரைனில் படிக்கிற இந்திய மாணவர்கள் அங்கு போர் மூண்டுள்ள சூழலில் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக அவர்கள் தங்களின் கல்விக் கடனை திருப்பிச் செலுத்த இயலாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சில மதிப்பீடுகள் அங்கு படிக்கிற இந்திய மாணவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 20000 பேர் என்கிறது. அவர்களின் பாதுகாப்பும், எதிர்காலமும் கேள்விக் குறியாக மாறியுள்ளது.

இம்மாணவர்களில் பெரும்பாலோனோர் இந்தியாவின் சாதாரண நடுத்தர வர்க்க குடும்பங்களை சார்ந்தவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் இந்திய தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணங்கள் மிக அதீதமாக இருக்கிற காரணத்தால் அங்கு போய் மருத்துவக் கல்வி பெறுபவர்கள். அதற்காக இந்திய வங்கிகளில் தங்கள் பெற்றோர் கடும் உழைப்பால் ஈட்டிய சொத்துகளை பிணையாகத் தந்து கல்விக் கடன் பெற்று இருப்பவர்கள். இப்போது பெரும் சிரமத்தில் ஆட்பட்டு இருப்பதால் கல்விக் கடன் தவணைகளை தவறவிடப் போகிறார்கள் என்பது கண்கூடானது.

நமது வங்கிகள் கடன் தவணை தவறுகிற மிகப் பெரிய கார்ப்பரேட் கடன்களுக்கு “சீர் செய்தல்” (“Hair Cut”)/ வராக்கடன் வசூலாகாமல் போதல் வாயிலாக பல்லாயிரக் கணக்கான கோடிகளை ஒவ்வோர் ஆண்டும் இழப்பதைக் காண்கிறோம். இத்தகைய சூழலில் அடித்தள, நடுத்தர குடும்பங்களின் கண்ணீர் துடைக்க அரசின் கரங்கள் நீள வேண்டிய தருணம் இது என கருதுகிறேன்.

உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்களின் கல்விக் கடனை முழுமையாக ரத்து செய்யவும் உரிய முடிவுகளை எடுத்து பிணைச் சொத்துகளை திரும்ப ஒப்படைக்கவும் வங்கிகளுக்கு அறிவுறுத்துமாறு வேண்டுகிறேன்.

நல்ல முடிவை விரைவில் எடுப்பீர்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு சு.வெங்கடேசன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.