பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புத்துறைக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று இரவு நடைபெற்றது.
உக்ரைன் மீது ரஷியா இன்று போர் தொடுத்துள்ளது. தரைவழி, வான்வெளி மூலம் உக்ரைன் தலைநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் ரஷிய பாதுகாப்பு படையினர் குண்டுமழை பொழிந்து வருகின்றனர்.
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலால் உலக அளவில் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவி வருகிறது. நேட்டோ அமைப்பு தங்கள் உறுப்பு நாடுகளின் எல்லைகளில் படைகளை அதிகரித்துள்ளது. உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புத்துறைக்கான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் இன்று இரவு நடைபெற்றது. ஒன்றியய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாதுகாப்புத்துறையின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார்.
உக்ரைனில் ரஷியாவின் தாக்குதல், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் உள்ளிட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இரவு 10.30 மணியளவில் ரஷ்ய அதிபரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, உக்ரைன் மீதான போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.