ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 ராணுவ அதிகாரிகளின் உடல்கள், உயர் அலுவலர்களின் அஞ்சலிக்குப் பிறகு தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் மூலம் வெலிங்டன் ராணுவ பயிற்சி நிறுவனத்தில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக சூலூர் விமானப்படை தளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
வழியெங்கும் இருபுறமும் சாலையோரம் திரண்ட குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள், ராணுவ அதிகாரிகளின் உடல்களை சுமந்து சென்ற ஆம்புலன்ஸ் மீது பூக்களை தூவியும், கண்ணீர் அஞ்சலி செலுத்தியும் வழியனுப்பி வைத்தனர்.
மேட்டுப்பாளையத்தில் திரண்டிருந்த பொதுமக்கள், வீர வணக்கம்… வீர வணக்கம் என முழக்கமிட்டு ராணுவ அலுவலர்களுக்கு மரியாதை செய்தனர்.
தேச பக்தியில் தமிழர்கள் எந்த மாநிலத்திற்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், பொங்கி வந்த அழுகையோடு வீர வணக்கம் செலுத்திய நீலகிரி தாய்மார்கள்… கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய மகளிர்களை பார்த்து, ஒட்டுமொத்த கூட்டமும் கண்ணீர் மழை பொழிந்தது…
சூலூர் விமானப்படை தளத்திற்கு ஆம்புலன்ஸ் சென்றடைந்த பிறகு, அங்கு ஏற்கெனவே தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராணுவத்திற்குச் சொந்தமான சி 130 சூப்பர் ஹெர்குலிஸ் விமானத்தில் பிபின் ராவத், அவரது மனைவி உடல் மற்றும் 11 ராணுவ அலுவலர்களின் உடல்கள் ஏற்றப்பட்டதையடுத்து, டெல்லி நோக்கி அந்த விமானம் புறப்பட்டது.
முப்படையைச் சேர்ந்த உயரதிகாரிகள் மற்றும் அங்கு திரண்டிருந்த ராணுவ அலுவலர்கள், தமிழக அரசின் உயரதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உணர்ச்சிப் பொங்க வீர வணக்கம் என முழக்கமிட்டு, முப்படை தளபதிக்கு பிரியா விடை கொடுத்தனர்.