முப்படைகளின் முதல் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 ராணுவ அதிகாரிகள் நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர்.
இந்தியாவின் பாதுகாப்பு படைகளுக்கு தலைமை வகித்து வந்த பிபின் ராவத், இன்று காலை நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்காக, தனது மனைவி மற்றும் பாதுகாவல் அதிகாரிகளுடன் புதுடெல்லியில் இருந்து கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தார். அங்கிருந்து ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டரில் வெலிங்டன் புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது மனைவி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 14 பேர் பயணம் செய்தனர்.
இன்று நண்பகல் 12 மணியளவில் வெலிங்டன் ராணுவ பயிற்சி பள்ளியில் தரையிரங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக ஹெலிகாப்டர் துரதிர்ஷ்டவசமாக விபத்தில் சிக்கியது. வனப்பகுதியில் உள்ள மரங்கள் மீது மோதியதை அடுத்து ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டர் தீப்பற்றி ஒரு மணிநேரத்திற்கு மேலாக எரிந்ததால், ஹெலிகாப்டரில் பயணம் செய்த பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் 11 பேரும் தீயில் கருகினர்.
மலைவாழ் மக்கள் அளித்த தகவலின் பேரில் ராணுவ அதிகாரிகள், தீயணைப்புப் படையினர், நீலகிரி மாவட்ட காவல்துறையினர் நிகழ்வு இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், விபத்தில் சிக்கிய தகவல் தீயாக பரவியதையடுத்து நாடு முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. டெல்லியில் நாடாளுமன்றத் கூட்டத்தில் பங்கேற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உடனடியாக ராணுவ உயரதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தினார். பின்னர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து பிரதமர் மோடியுடனும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து, நாடாளுமன்ற மக்களவையில் பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது தொடர்பான தகவலை தெரிவித்தார். நாளை நாடாளுமன்றத்தில் விபத்து குறித்த முழுமையான அறிக்கையை ராஜ்நாத் சிங் தாக்கல் செய்யவுள்ளார்.
மேலும், அவரின் உத்தரவின் பேரில், மீட்பு மற்றும் விபத்தில் சிக்கி தீக்காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. இந்த விபத்தில் சிக்கி படுகாயடைந்த குரூப் கேப்டன் வருன் சிங் மீட்கப்பட்டு வெல்லிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, முதல்வர் மு.க.ஸ்டாலினும், நீலகிரி மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு ஹெலிகாப்டர் விபத்து மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து விசாரித்தார். பின்னர், மாவட்ட அதிகாரிகளுக்கு மீட்பு பணிகளை துரிதப்படுத்தும்படியும், விபத்தில் மீட்கப்பட்டவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்குமாறும் முதல்வர் உத்தரவிட்டார்.
நண்பகலில் துவங்கிய மீட்புப் பணி பல மணிநேரம் நீடித்தது. அடர்ந்தமலைப்பகுதிக்குள் விபத்து நடந்ததையொட்டி, மீட்புப் பணி மிகவும் தாமதமானது. கடும் போராட்டத்திற்குப் பிறகு, நிகழ்விடத்தில் உடல் கருகி உயிரிழந்து கிடந்த 13 பேர் உடல்கள் மீட்கப்பட்டன. படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய பிபின் ராவத் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் பலனின்றி ராவத் உயிரிழந்ததாக பிற்பகலில் இந்திய விமானப் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ராணுவ ஹெலிகாப்டரில் பயணம் செய்த பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதையடுத்து, ராவத்தின் தியாகத்தை போற்றி குடியரசுத் தலைவர், பிரதமர், பாதுகாப்புத்துறை அமைச்சர் உள்ளிட்ட தலைவர்களும், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் உத்தரவின் பேரில், ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதற்கான காரணம் குறித்து இந்திய விமானப் படை உயர் அதிகாரிகள் முனைப்பான விசாரணையை துவக்கியுள்ளனர்.
முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உயிரிழ்ந்த நிகழ்வு, நாடு முழுவதும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….
நாட்டின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த தலைவர்கள் பயணம் செய்வதற்காக ரஷ்ய தயாரிப்பான Mi-17V-5 எனும் பெயரிலான ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வகையான ஹெலிகாப்டர்கள், எந்தவிதமான பருவநிலையிலும் பயணம் செய்யும் அளவுக்கு பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்தவையாகும். குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களின் பயணத்திற்காக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த வகையான ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது, பாதுகாப்புத்துறையை சேர்ந்த உயரதிகாரிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹெலிகாப்டர் விபத்து குறித்த விசாரணை அறிக்கை கிடைக்கப் பெற்ற பிறகுதான், ஹெலிகாப்டர் மீதான சந்தேகங்களுக்கு உரிய விடை கிடைக்கும்.