ஆந்திர மாநிலம் காக்கினாடாவில் ஒரு கொடூரமான நிகழ்வு நள்ளிரவில் நடைபெற்றுள்ளது. ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான “கார்ப்பரேட்டர் கம்பாரா ரமேஷ்” கொடூரமாக கொல்லப்பட்டார். அவர், அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் காக்கினாடாவில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகம் அருகே நடந்துள்ளது. கொடூர கொலை நிகழ்வு, அதே பகுதியில் உள்ள சி.சி.டி.வி.கேமிராவில் பதிவாகியுள்ளது.. அந்த காட்சிகள் பார்ப்போரை பதைபதைக்க வைக்கிறது..
இந்த சம்பவம் நள்ளிரவுக்கு சுமார் இரண்டரை மணி நேரம் கழித்து நடந்ததாக நம்பப்படுகிறது. தகவல் கிடைத்த உடனேயே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர்.. படுகாயமடைந்து உயிருக்கு போராடிய ரமேஷ் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து காக்கினாடாவில் பதற்றம் அதிகமாக நிலவி வருகிறது..
“கம்பாரா ரமேஷ்” ஒன்பதாவது வார்டு கார்ப்பரேட்டர். காக்கினாடா மாநகராட்சி நிலைக்குழுவின் தலைவராக பணியாற்றினார். அவர் காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் இருந்தார். 1992 இல் என்.எஸ்.யு.ஐ காக்கினாடா நகரத் தலைவராகவும், 1995 -ல் கிழக்கு கோதாவரி மாவட்ட இளைஞர் காங்கிரஸின் துணைத் தலைவராகவும் இருந்தார். 2000 ஆம் ஆண்டில் அவர் காக்கினாடா நகராட்சியின் துணைத் தலைவராகத் தொடர்ந்தார். ரமேஷ் கொலை வழக்கு தொடர்பாக, காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் அற்பக் காரணத்திற்காக ரமேஷ் கொல்லப்பட்டுள்ளது தெரியவந்தது.
அற்பக் காரணத்திற்காக கொலை
காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல் இதோ..
ரமேஷ் தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது, உடன் மது அருந்திய சின்னா என்பவர், தனது வீட்டில் நடைபெறவுள்ள பிறந்தநாள் விழாவில் பங்கேற்க ரமேஷ்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பிறந்த நாள் விழாவிற்கு வரமுடியாது என ரமேஷ் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற சின்னா, காரை வேகமாக ரமேஷின் மீது மோதியும், அவரது உடல் மீது காரை மூன்று முறை ஏற்றியும் உள்ளார். பின்னர், அவர் அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது.