Fri. Nov 22nd, 2024

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கில் ஒரு வாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1993 ஆம் ஆண்டு தமிழ சட்டப்பேரவையில் 69 சதவிகித இடஒதுக்கீட்டை தொடர்ந்து அமல்படுத்துவது தொடர்பாக சிறப்பு சட்டம் இயற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவரின் ஒப்புதல் பெறப்பட்டது. அந்த அடிப்படையிலேயே தமிழகத்தில் சட்டம், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் மற்றும் பொறியியல் என அனைத்து துறைகளிலும் தற்போது வரை 69சதவீத இடஒதுக்கீட்டு முறையே பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை மாணவர் தினேஷ் என்பவர், அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில்,’மருத்துவ கலந்தாய்வு, பொறியியல் படிப்பு உட்பட பல விவகாரங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. அதனால் தமிழகத்தில் இருக்கும் 69சதவீத இடஒதுக்கீட்டை 50சதவீதமாக குறைக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவிகிதம் தொடர்பாக மத்திய அரசு ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.