விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகில் உள்ளது சிப்பிப்பாறை கிராமம். விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இந்த கிராமத்தில், பல நூறு குடும்பங்கள் வசித்து வருகின்றன. பெரும்பாலும் இங்குள்ளவர்கள் கூலித் தொழிலாளிகளாகவே உள்ளனர் கிராம மக்களின் பூர்வீகத்தை உணர்த்தும் வகையில், தேவேந்திர குல வேளாளர் சங்கத்தின் பெயர் பலகை அடையாளமாக நிற்கிறது.
2004 ஆம் ஆண்டு இந்த ஊருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைததது. அப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்த ம.தி.மு.க.வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், சிப்பிப்பாறையை உள்ளடக்கிய சிவகாசி தொகுதியில் வைகோ போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிப்பிப்பாறை ரவிச்ச்ந்திரன் என்ற 35 வயது இளைஞரை வேட்பாளராக அறிவித்தார் அவர். அதன் மூலம் சிப்பிப்பாறை கிராமத்திற்கு தனித்துவமிக்க அடையாளம் கிடைத்தது.
2004 ல் விருதுநகர் மாவட்டத்தை கடந்து மாநிலம் முழுவதும் அங்கீகாரம் கிடைத்த அந்த கிராமம், 16 ஆணடுகளுக்குப் பிறகும் தனது அடிப்படையான அடையாளத்தை இழக்காமல், அப்படியே கட்டுக் குலையாமல் காட்சியளிக்கிறது. சரியான சாலை வசதி கிடையாது. பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடையாது. 2004 ஆம் ஆண்டில் இருந்து மூன்று முறை மாநில ஆட்சி மாறியிருக்கிறது. இன்றைக்கும் அடிப்படை வசதிகள் முழுமையாக இல்லாமல்தான் காட்சியளிக்கிறது. வறட்சியின் சுவடுகள் ஒவ்வொரு வீட்டிலும் எதிரொலிக்கின்றன. அத்தியாவசிய தேவைகள் கூட முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்று சிப்பிப்பாறை மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.
ஊரின் நுழைவு வாயிலின் ஒருப்பகுதியில் ஊரணி போன்று ஒரு குளம் உள்ளது. அந்த குளத்தின் அனைத்துப் பகுதிகளும் தூர்ந்துப் போய்வுள்ளன. அதில், ஆகாயத் தாமரை படர்ந்து, நீரின் பரப்பையே மூடியுள்ளது. அதனை தூர் வாரி, சுற்றுச்சுவர் எழுப்பி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியாளர்களிடம் பல மனுக்கள் கொடுத்தும், எந்த பலனும் இல்லை என்கிறார்கள் உள்ளூர்வாசிகள்.
ஊரணி நிறைய தண்ணீர் இருந்தும், தங்களின் அன்றாட பயன்பாட்டிற்காக நிலத்தடி நீரைத்தான் பயன்படுத்தி வருவதாகவும், அதுவும் இரண்டு நாளுக்கு ஒருமுறைதான் கிடைப்பதாகவும் பெண்கள் வேதனைப்பட தெரிவித்தனர். பள்ளி செல்லும் மாணவிகள் முதல் வயது முதிர்ந்த மூதாட்டிகள் வரை, தண்ணீர் பிடிக்க கால் கடுக்க வரிசையில் நிற்கிறார்கள்.
பல கிராமங்களில் வீட்டிற்கு வீடு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தங்கள் கிராமத்தை எந்த அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கண்டுகொள்வதில்லை என்பதுதான் கிராம மக்களின் புகார்.
மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் குடிமராமத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு பெருமைப்பட்டுக் கொள்ளும் நிலையில், சிப்பிப்பாறை போன்று பல கிராமங்களில் தூர்ந்துப் போய்வுள்ள நீர்நிலைகள் எண்ணற்றவை மராமத்து செய்யப்படாமல் புதர் மண்டி கிடப்பதாக ஊர் பெரியவர்கள் வேதனையோடு கூறினார்கள்.
ஐந்தாண்டுக்கு முறை ஆட்சிகள் மாறினாலும் கூட, சிப்பிப்பாறை போன்ற கிராம மக்களின் வாழ்க்கை முறையிலும், பெருளாதார வளர்ச்சியிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படுவதே இல்லை என்பதுதான் வேதனைக்குரிய ஒன்று. ஆளும்கட்சியாக அ.தி.மு.க.அரசாக உள்ள நிலையில், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தி.மு.க.வைச் சேர்ந்தவராக இருப்பதால், அரசு அதிகாரிகளும் சிப்பிப்பாறை கிராமம் பக்கமே தலைவைத்து படுப்பதில்லை என்கிறார்கள் ஊர்ப் பெரியவர்கள்.
ஆளும்கட்சிக்கு மட்டுமே விசுவாசமாக இருப்போம் என்ற மனப்பாங்கு என்றைக்கு அரசு அதிகாரிகளிடம் இருந்து மாறுமோ? வாக்காளப் பெருமக்களுக்கு விடிவு கிடைக்கும் நாள் எந்நாளோ ?