பேரறிஞர் அண்ணாவின் நினைவுத் தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் திராவிடக் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் ஏராளமானோர் மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க. சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் ஏராளமானோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
தி.மு.க. சார்பில், அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள், அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து மௌன ஊர்வலமாகச் சென்று நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
தொடர்ந்து, தமிழ் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அணிகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.
வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு :
வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பா.ம.க. தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பாக ஏற்கெனவே இரண்டு முறை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸை, அவரது தைலாபுரம் தோட்டத்தில் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட குழுவினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று சென்னையில் உள்ள மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி இல்லத்தில் நடைபெற்றது.இதில், பா.ம.க சார்பில், அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, பா.ம.க வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், விவாதிக்கப்பட்ட அம்சங்கள குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.
வரும் 7ம் தேதி சசிகலா வருகை
பெங்களூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, வரும் 7 ஆம் தேதி சென்னை வரவுள்ளதாக, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். அ.ம.மு.க. நிர்வாகி இல்ல திருவிழாவில் கலந்துகொண்டபோத இதனை அவர் தெரிவித்தார். சசிகலாவிற்கு ஓசூர் எல்லையில் இருந்து வரவேற்பு கொடுத்து சென்னைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சசிகலா, அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக இருந்து நம்மை வழிநடத்துவார் என்றும் அவரை வரவேற்க தொண்டர்கள் அனைவரும் தயாராக வேண்டும் என்றும் டி.டி.வி.தினகரன் கேட்டுக் கொண்டார்.
உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்: திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் 11 ஆம் தேதி தி.மு.க.இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார். தொடர்ந்து, அந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவர் பிரசாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.