Sun. May 19th, 2024

சுதந்திர இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழாவை, நிகழாண்டு முழுவதும் கொண்டாடுவதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதேபோல, பல்வேறு பொது நல அமைப்புகளும் சுதந்திர தின விழாவை உற்சாமாக தொடர்ந்து கொண்டாடி வருகின்றன. இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியும் தாமதமாக இப்போதுதான் இந்த வரிசையில் சேர்த்துள்ளது. சுதந்திர தாகத்தை ஊட்டி வளர்த்ததிலும், வெள்ளையர்களுக்கு எதிரான வேட்கைத் தீயை அதிகரித்ததிலும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பங்குண்டு.

வெள்ளையர்களிடமிருந்து இந்தியாவை மீட்பதற்காக உருவான அமைப்பான காங்கிரஸ் கட்சியில், இன்றைக்கு நாட்டுப்பற்று உள்ளவர்களுக்கு பஞ்சமா என்று கேட்கிற அளவுக்குதான், அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் அண்மைக்கால செயல்பாடுகள் இருக்கின்றன என்று வேதனையோடு கூறுகிறார்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகள். இதைவிட கொடுமையாக, சுதந்திர தினத்தின் 75 வது ஆண்டு விழாவை கொண்டாவடுவதற்கு அகில இந்திய தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ள குழுவில், தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் ஒருவர் கூட இடம் பெறவில்லை என்பதுதான் மிக,மிக வேதனைக்குரியது.

முன்னாள் பிரதமர் முனைவர் மன்மோகன்சிங் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் 7 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவில்தான் தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு வாய்ப்பு தராமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். 11 தலைவர்களை உள்ளடக்கிய குழுவில் தென்னிந்தியாவில் கேரளாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், மத்திய அரசில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி காலத்தில் இருந்து, அதாவது 1985 ஆம் ஆண்டில் இருந்து பங்காற்றி வந்த தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர்களின்ல ஒருவரான ப.சிதம்பரம் கூட சேர்க்கப்படவில்லை.

இந்திய சுதந்திரத்திற்காக இன்னுயிரை இழந்து ஆயிரக்கணக்கான தியாகிகளின் வீர வரலாறை கொண்ட தமிழ்நாட்டை, போகிற போக்கில் காங்கிரஸ் மேலிடம் அவமானப்படுத்தியுள்ளதாக கதறுகிறார்கள், தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகள்.

தென்னிந்தியாவில் முக்கியமான, முதன்மை மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டை காங்கிரஸ் மேலிடம் இப்போது மட்டும் முதல்முறையாக அவமானப்படுத்தவில்லை என்று கூறும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், அகில இந்திய காங்கிரஸ் தலைவரால் இதற்கு முன்பு நியமிக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்தத பல்வேறு குழுக்களிலும் கூட தமிழகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்ட எத்தனையோ நிகழ்வுகள் உண்டு என்கிறார் மிகுந்த வேதனையுடன்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து 9 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதை கூட நினைத்துப் பார்க்காமல், தமிழகத்தை அகில இந்திய காங்கிரஸ் மேலிடம் புறக்கணித்திருப்பது காங்கிரஸ் மேலிடத்திற்குதான் இழுக்கே தவிர, தமிழகத்திற்கு ஒரு போதும் மாண்பு குறைவு ஏற்பட்டுவிடக் கூடாது என்பது உலகத்திற்கு தெரியும் என்று ஆவேசம் காட்டுகிறார்கள் தமிழ் தேசியத் தலைவர்கள்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து இந்த 9 எம்.பி.க்களும் டெல்லிக்கு செல்வது தடைபட்டிருந்தால், நாடாளுமன்றத்தில் இன்றைக்கு காங்கிரஸுக்கு கிடைத்திருக்கிற 2 வது பெரிய கட்சி என்ற அந்தஸ்துகூட இல்லாமல் காங்கிரஸ் கட்சி, மிகப்பெரிய அவமானத்தை சுமந்து கொண்டிருக்கும் என்றும் நாடாளுமன்ற வரலாற்றில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படவிருந்த அவமானத்தை தடுத்து நிறுத்தியது தமிழகம்தான் என்பதை கூட மறந்து, நன்றி கெட்ட தலைமையாக, டெல்லி மேலிடத் தலைவர்கள் இருக்கிறார்கள் என்று கொந்தளிக்கிறார்கள் மானம், ரோஷம் உள்ள தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பலர்.

தமிழர்களின் தியாகமும், போராட்டக் குணமும், நாட்டுப்பற்று, இந்தியாவின் தந்தை என்று புகழப்படும் மகாத்மா காந்தியின் தமிழக விஜயமும், தமிழரின் சுதந்திரப் போராட்ட தீரம் குறித்தும் வழங்கிய நன்சான்றிதழ்களும், வெள்ளையர்களுக்கு எதிராக ராணுவத்தையே கட்டமைத்த சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான படையில் தமிழர்களின் பங்களிப்பும் தியாகங்களும் இன்றைக்கும் உலகளாவின வரலாறாகவே இருக்கிறது என்கிறார்கள் தமிழ் தேசியத் தலைவர்கள் ஆவேசம் பொங்க….