2024ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுடனான இந்த ஒற்றுமை தொடர வேண்டும் என்றும் தேர்தலுக்காக தற்போதே திட்டமிடுதலை தொடங்க வேண்டும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் சார்பில் காணொலி வாயிலாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி இன்று மாலை நடைபெற்ற காணொலி வாயிலாக கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதல்வர் தாக்ரே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைகளை கேட்டுக் கொண்ட பின்னர் சோனியா காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:.
கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் ஒன்றாக செயல்பட்டோம்.
இந்த ஒற்றுமை வருங்காலத்திலும், நாடாளுமன்றத்துக்கு வெளியே நடத்தவேண்டிய போராட்டத்திலும் தொடரும் என நம்புகிறேன்.
நமக்குள் பல்வேறு கருத்துகள் இருந்தாலும் நம் தேச நலனுக்காக, தேசத்தின் தேவைக்காக ஒன்றாக ஒரே குறிக்கோளுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெகாசஸ் விவகாரம், விலைவாசி உயர்வு, சிலிண்டர் விலையேற்றம், பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியள்ளது-
இன்றைய எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் மூலம் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட ஆயத்தமாகி விட்டதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில் செப்டம்பர் 20 முதல் 30 ஆம் தேதி வரை மக்கள் விரோத மத்திய பாஜக அரசைக் கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுப்பது என முடிவெடுக்கப்பட்டு,அறிவிக்கப்பட்டுள்ளது.