Thu. May 9th, 2024

தமிழ்நாட்டில் முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் மட்டுமே 245 கோடி ரூபாய் முறைகேடு…

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவான் ஹெரே புதுடில்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது மகாத்மா ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் கடந்த நான்காண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் 935 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்று இருப்பதாக தணிக்கை துறை தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தில் நடைபெற்ற தணிக்கை மூலம் இந்த முறைகேடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பணியாற்ற நபர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்ட விவகாரத்தில்தான் பொய்யான கணக்குகள் காட்டப்பட்டு, இந்தளவுக்கான நிதி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
935 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் எழுந்த நிலையில், அதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் 12.5 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே நிதி வசூலிக்கப்பட்டுள்ளது. மொத்த முறைகேட்டில் மீட்கப்பட்ட பணத்தின் சதகிவிதம் 1.34 அளவுக்கு மட்டுமே திரும்பி அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் தவறான நிர்வாகத்தின் காரணமாகவும், கண்காணிப்பு மற்றும் அமலாக்கத்தில் காட்டப்பட்ட அலட்சியமே இந்த முறைகேட்டிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
900 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ள நிலையில், அரசாங்கத்தின் இருப்பில் இருக்க வேண்டிய தொகையை விரைவாக மீட்க மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்துகிறது. சட்டத்திற்குப் புறம்பாக செலவழிக்கப்பட்ட தொகையை விரைவாக மீட்டு, அந்த தொகையை, கொரோனோவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையாகும்.
ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் நாடு முழுவதும் 935 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாக கடந்த நான்காண்டுகளில் நிதி மேலாண்மை கையாளப்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டில் மட்டுமே 245 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
2017 முதல் 2021 காலாண்டு வரையிலான ஆண்டுகளில் மட்டுமே இந்தளவுக்கு முறைகேடு நடைபெற்று, இந்தியாவிலேயே முதலிடத்தில் தமிழ்நாடுதான் உள்ளது. இரண்டாவது இடத்தில் பீகார் மாநிலம் உள்ளது. அந்த மாநிலத்தில் மட்டும் 12.34 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடைபெற்றுள்ளது. பாஜக ஆளும் மாநிலமான ஜார்க்காண்டில் மட்டும் 51.29 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளது.
ஏழைகளுக்கு செலவழிக்க வேண்டிய நிதி மற்றும் பொதுமக்களின் வரிப்பணம் என ஏறக்குறையாக ஆயிரம் கோடி ருபாய் அளவுக்கு நடைபெற்ற முறைகேட்டில், உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடித்து தண்டிப்பதுடன், மத்திய அரசுக்கு வந்து சேர பணத்தை உடனடியாக வசூலிக்கவும் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.