Thu. Apr 18th, 2024

கோவையில் சாலை விபத்தில் சைக்கிளை இழந்து, உயிருக்கு போராடி மீண்ட 14 வயது ஏழை சிறுவனுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரதாப்சிங் புதிய சைக்கிளை பரிசாக அளித்த இன்ப அதிர்ச்சி வழங்கிய நிகழ்வு, பொதுமக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தடாகம் சாலையில் உள்ள பால் கம்பெனி பகுதியைச் சேர்ந்த சிறுவன் சுபாஷ்சந்திரபோஸ். இவரது தந்தை ஆட்டோ ஓட்டி வரும் நிலையில் தாய் கூலி வேலைக்கு சென்று வருகிறார். மாநகராட்சி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சுபாஷ் சந்திர போஸ் பெற்றோரின் சுமையை குறைப்பதற்காக ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள பானிபூரி கடையில் தினசரி 100 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்து வருகிறார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தனது நண்பனின் சைக்கிளில் வேலையை முடித்துக்கொண்டு இரவு வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது , எதிர்பாராதவிதமாக சிறுவன் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தலையில் காயம் அடைந்த சிறுவன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் ஓட்டிச் சென்ற சைக்கிள் முழுமையாக சேதமடைந்தது.

இந்த விபத்து தொடர்பாக கோவை மேற்கு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் பிரதாப்சிங் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். விசாரணைக்காக சிறுவன் வசித்த பகுதிக்கு சென்ற போது, சிறுவன் சுபாஷ் சந்திரபோஸ் சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவர் என்பதும், சிறுவயதிலேயே குடும்ப சுமையை குறைப்பதற்காக பானிபூரி கடையில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

சிறுவனின் மீது கொண்ட தனியாத பாசத்தினால், அந்த பகுதியில் உள்ள மனிதாபிமானமுள்ள மக்களே சிறுவனுக்கு சைக்கிள் வாங்கிக் கொடுக்க திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது.

பொதுமக்களிடம் காணப்பட்ட மனிதாபிமானத்தால் நெகிழ்ந்து போன பிரதாப் சிங், மருத்துவமனையில் இருந்து அபாய கட்டத்தை தாண்டி, சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சிறுவன் சுபாஷ் சந்திரபோஸை சென்று சந்தித்து ஆறுதல் கூறி உற்சாகமும் படுத்தினார். தொடர்ந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோவை மேற்கு போக்குவரத்து காவல் பிரிவு ஆய்வாளர் பிரதாப் சிங் நேரில் சென்றும் நலம் விசாரித்து வந்ததார்.

தொடர்ச்சியாக, சிறுவனை வெரைட்டி ஹால் பகுதிக்கு அழைத்து வந்த ஆய்வாளர் பிரதாப் சிங் தனது சொந்தப் பணம் 4800 ரூபாயில் புதிய சைக்கிள் ஒன்றை சிறுவன் சுபாஷ் சந்திரபோஸ்க்கு வாங்கி கொடுத்து சிறுவனின் சைக்கிள் கனவை நனவாக்கினார்.

புத்தம் புது சைக்கிளுடன் உற்சாகமாக தடாகம் பகுதியில் சுற்றி வரும் சிறுவன் சுபாஷ் சந்திரபோஸை பார்த்து அப்பகுதி மக்கள் ஆனந்தமடைந்த அதே நிலையில், அந்த சிறுவனின் சந்தோஷத்திற்கு வித்திட்ட காவல் ஆய்வாளர் பிரதாப் சிங்கின் மனிதநேயத்தையும் மனதார பாராட்டி வருகின்றனர்.