பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், தமிழ் சுறும் நல்லுலகத்திற்கு நன்கு அறிமுகமானவர். புன்னகை தவழ, பட்டிமன்றங்களில் ஆழமான வாதங்களை முன்வைத்து, ஒட்டுமொத்த ரசிகர் கூட்டத்தையும் தன் வசப்படுத்துபவர். சாலமன் பாப்பையா தலைமையிலான பட்டிமன்றத்திற்கு சிறப்பு சேர்ப்பவர்களில் முதன்மையானவர் பாரதி பாஸ்கர்.
தமிழ்நாடு மட்டுமின்றி உலககெங்கும் தமிழர்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ, அத்தனை நாடுகளுக்கும் சென்று பட்டிமன்ற பேச்சின் மூலம் அங்குள்ள தமிழ் மக்களை வசீகரப்படுத்தியவர்.
பாரதியார் கவிதைகளை மேற்கோள் காட்டுவதிலும் தேச பக்தியை அனைவரின் உள்ளங்களிலும் பதியம் போடுவதிலும் அதீத ஆர்வம் காட்டுபவர். பட்டிமன்றப் பேச்சை பொழுதுபோக்காக கொள்ளாமல், அதன் மூலம் அறிவுத் தேடலை தீவிரப்படுத்தும் வல்லமை கொண்டவர்.
அறிமுகம் இல்லாதவர்களிடம் கூட தனது புன்சிரிப்பால் அர்த்தமுள்ள, ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்தும் சிறப்பு குணம் கொண்டவர் பாரதி பாஸ்கர். பட்டிதொட்டி எங்கும் நலம் விரும்பிகளை கொண்ட பாரதி பாஸ்கர், குடும்ப வாழ்க்கையிலும் சிறப்புறவே வாழ்ந்து வருபவர்.
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக, உண்மையிலேயே வாழ்ந்துக் கொண்டிருக்கும் அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு நடைபெற்ற மருத்துவப் பரிசோதனையில் மூளையில் உள்ள ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து, அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாரதி பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் தீயாக பரவி வரும் இந்த நேரத்தில், நடிகை குஷ்பு உள்ளிட்ட ஏராளமானோர், பாரதி பாஸ்கர் விரைவாக குணமடைய அனைவரும் பிரார்த்திப்போம் என அழைப்பு விடுத்துள்ளா.