Wed. Apr 24th, 2024

காவல் துறையில அந்த நாள் மறக்க முடியாத நாள்.

அடுத்த நாள் காலையில முதலமைச்சர் அம்மையார் செயலலிதா திருச்சிக்கு வரப்போறதா தகவல். இரவே சொல்லிட்டாங்க . கான்வாய் எந்த வழியா போகுதுங்குற தகவல்படி, காவலர்கள அங்கங்க டூட்டி நிர்ணயிக்கிறாங்க. நான் டூட்டி பார்க்க போற இடம், திருச்சி ஏர்போட் ரோடு. இப்பல்லாம் நிறைய கடைங்க இருக்கு ,அப்ப அந்த ரோடே விரிச்சோடி கிடக்கும்.

என் மகள் நாலு மாச கை குழந்த . ராத்திரில தூங்கவே தூங்காது, நம்மளையும் தூங்க விடாது. எதுக்கு அழுவுதுன்னே தெரியாது அழும். ராத்திரி முழுக்க கண்ணு முழிச்சிட்டு, பகல்ல டூட்டி பார்க்கறது இருக்கே அது அத விட கொடும. இப்ப தான் பேறுகால விடுப்பு 12 மாசம். ஆனா அப்ப வெறும் 3 மாசம் தான்.

ராத்திரி ஒரு மணி வரைக்கும் தொட்டில போட்டு ஆட்டிக்கிட்டே இருக்கேன். பாட்டு பாடுறேன் , “ஆராரோ அரிராரோ
என் கண்ணே
நீ ஆராரோ ஆரிராரோ
காலையில காவல் பணி
உன் அம்மா கலைப்புடனே போகனுமா? கண்ணே உறங்கிடடி காலையில எழுந்திரடின்னு” பாடிகிட்டே தொட்டில ஆட்டுறேன்.

பாட்ட கேட்டுக்கிட்டே கொட்ட கொட்ட முழிச்சி பார்க்குது. அது குழந்த அதுக்கு என்ன தெரியும்? இருந்தாலும் அதுகிட்ட பேசுறேன், அம்மு தயவு செஞ்சி தூங்கு அம்மு, காலையில அம்மா டூட்டிக்கி போகனும் அம்முன்னு சொல்லிகிட்டே தொட்டில ஆட்டுறேன். ஒரு சில நேரத்துல அழுதுருக்கேன். அது என் முகத்த பார்த்து பார்த்து சிரிக்கும். என் வலி அந்த பிஞ்சுக்கு எப்படி தெரியும்? பாவம்.

நாலு மணி இருக்கும், என் மாமியார் எழுந்து வந்து இன்னும் உன் மவ தூங்கலயாம்மான்னு? கேட்டாங்க. இல்லம்மா எங்க தூங்குது?? என்னால முடியிலம்மா, வயித்துல ஆப்ரேசன் பண்ணுன இடம் வேற வலிக்குதும்மா, என்னால ரொம்ப நேரம் நிக்க கூட முடியில, செத்துடலாம் போல இருக்குன்னு சொல்லிட்டு அழ ஆரம்பிச்சிட்டேன். இந்த வலியெல்லாம் சொன்னா புரியாதுங்க.

வயித்த கிழிச்சி குழந்த பெத்துக்கறது இருக்கே.. அது ரணமான ரணம். ரொம்ப நேரம் நிக்க முடியாது ,முதுகு வலிக்கும். மயக்க ஊசிய போடுறதுக்கு முன்னாடி, புருசன் கிட்ட கையெழுத்து வாங்குவாங்க பாருங்க, அத படிச்சி பார்த்தாலே மரண பயம் வரும். மயக்க ஊசிய போடுட்டுட்டு ,நமக்கு ஆக்சிஜன் குடுத்து, வயித்துல அளவு எடுத்து, வயித்த கிழிச்சி, குழந்தைய வெளியில எடுக்குற வரைக்கும், எந்த உணர்வுமே இல்லாம ஜடம் மாதிரியே கிடந்து, அதுக்கப்புறம் நம்ம புள்ளைய நம்ம ஆசையா தூக்கி கொஞ்ச முடியாம ,யாரவது தூக்கி கையில குடுத்து, அந்த குழந்த முகத்த பார்த்ததும் ,நம்ம வயித்துல கிழிச்ச வலிய மறந்து, பெட்ல இருந்து எழும்போது கூட, தானா எழுந்திரிக்க முடியாம, யாரையாவது புடிச்சிக்கிட்டு எழுந்து நடக்கறது இருக்கே அது பரசவ வலிய விட மோசமான வலிங்க.

கால் கையெல்லாம் நடுங்க, மெதுவா எழுந்து, நடக்கும் போது, தையல்ல ஒரு வலி வலிக்கும் பாருங்க ,அய்யோ! அது ஒரு மரண வலிங்க. எங்க பரம்பரையிலயே யாருக்குமே ஆப்ரேசன் பண்ணி குழந்தைய எடுத்ததே இல்ல. டவுன்ல இருந்தாலே இப்புடிதான் வயித்த கிழிச்சிடுவாங்க போல இருக்கு. நம்ம உடம்பு எக்சசைஸ் பாடி நமக்கெல்லாம் ஆப்ரேசன் பண்ண வேண்டியதில்லன்னு நினைச்சேன். ஆனா எனக்கும் கிழிச்சிதான் ஆகனும் வேற வழியே இல்லன்னு சொல்லிட்டாங்க. அதவிட கொடும உடனே ஆப்ரேசன் பண்ணலன்னா ரெண்டு உசுருல ஒரு உசுர தான் காப்பாத்த முடியுமுன்னு வேற சொல்றாங்க. அந்த நேரத்துல டாக்டர்ங்க பேசறத கேட்டாலே பயம் அதிகமாகிடுங்க.

பாப்பா பொறந்தப்ப என் கணவர் என் பக்கத்துல இல்ல. வெளிநாட்டுல இருந்தார். என் அம்மா, அப்பா ,என்னோட நாத்தனார், மாமியார், கொழுந்தனார் தான் கூட இருந்தாங்க. எத்தன பேர் இருந்தாலும், கணவர் கூட இருக்குறப்ப ஒரு தைரியம் இருக்கும் பாருங்க அந்த தைரியம் ஆயிரம் பேர் இருந்தாலும் வராது. அது ஏனோ தெரில ஆப்ரேசன் தியேட்டர்க்கு கொண்டு போறதுக்கு முன்னாடி டாக்டர் நிர்மலா சபாரத்தினத்துக்கிட்ட டாக்டர் ….ஒரு அஞ்சு நிமிசம் என் கணவர் கிட்ட பேசிட்டு வரட்டுமான்னு கேட்டேன். பேசுப்பா பேசு பயப்புடாத தைரியமா இரு ,போலீஸ்கார புள்ள நீயே பயப்புடலாமான்னு? கேட்டாங்க. பிரசவ பயம் எல்லாருக்கும் ஒன்னு தானே? போலீஸ், வக்கில்ன்னு பார்த்தா வலி வருது?

கணவர் கிட்ட இருந்து போன் வருது. எடுத்து தங்கம் …எனக்கு பயமா இருக்குன்னு சொல்லிட்டு அழுவுறேன். அவரும் அழுதுகிட்டே அதெல்லாம் ஒன்னும் ஆகாதுப்பா, என் உடம்பு தான் இங்க கிடக்கு, என் உசுரெல்லாம் அங்க தான் இருக்கு, நீ தைரியமானவ… நீயே அழுதா! நான் என்ன பண்ணுவேன் சொல்லு? அழாத தங்கம், அழுதா காய்ச்சல் வரும். பணமெல்லாம் கட்டியாச்சா? அம்மா ஊர்ல இருந்து வந்துட்டாங்களா? எங்க அண்ணன கையெழுத்து போட சொல்லி இருக்கேன், அவரு போடுவாரு ,நீ எந்த கவலையும் படாத, உனக்கு ஒன்னும் ஆகாதுடா , டைம் ஆச்சிடா, நான் செல் போன பார்த்து கிட்டே தான் உட்காந்திருப்பேன், கண்டிப்பா பாப்பா தான் பொறக்கும். ரெண்டு பேரும் நல்லா இருக்கீங்கன்னு அந்த சேதிய கேட்குற வரைக்கும், பச்சத்தண்ணிக்கூட குடிக்க மாட்டேன். என் மனசு வலிக்கிற வலிய சொல்லி அழக்கூட இங்க யாரும் இல்ல. என் புள்ள பிறந்தவுடனே என் கையில ஆசையா புள்ளய வாங்கிப்பாக்க கூட எனக்கு குடுத்து வைக்கில, நீ அழுவுறப்ப உன் பக்கத்துல இருந்து ஆறுதலா ஒரு வார்த்த பேசமுடியாம நான் எப்புடி துடிக்கிறேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். தைரியமா இருப்பா, போன வைக்கிறேன்னு சொல்லும் போதே ..கண்ணுல இருந்து தாரை ,தாரையா கண்ணுதண்ணி ஓடுது. அந்த கடைசி நேர உரையாடலும்,அந்த நேரத்துல பேசுற வலி நிறைஞ்ச வார்த்தையும், மரண படுக்கையிலும் மறக்காது.

ஒரு வேள நான் செத்துட்டா பிள்ளைங்கள பத்தரமா பார்த்துக்கங்கன்னு சொன்னேன். அய்யோ…என்னப்பா இப்படி பேசுற? உனக்கு ஒன்னுமே ஆகாது தைரியமா போடா, நீ செத்துட்டா நான் மட்டும் வாழ போறேனா? அட போப்பா ஏன் தங்கம் இப்படியெல்லாம் பேசுறன்னு? சொல்லிட்டு போன வச்சிட்டார். போன வச்சதுக்கப்புறம் அவர் நிம்மதியாவே இருந்துருக்க மாட்டாருன்னு எனக்கு தெரியும்.

தொட்டில ஆட்டிக்கிட்டே மாமியார் கிட்ட என்னால முடியிலம்மான்னு அழுதுட்டேன்.அய்யோ! நீ போயி படும்மா நான் பார்த்துக்குறேன்னு தொட்டில ஆட்ட ஆரம்பிச்சிட்டாங்க. உண்மையிலே என் மாமியார் மாதிரி ஒரு தங்கமான குணம் யாருக்குமே வராது. என்ன அவுங்க பெத்த புள்ள மாதிரிதான் பார்த்துக்குவாங்க. நானும் அம்மான்னு தான் கூப்பிடுவேன். என் மருமக போலீஸ்ன்னு பெருமை பட்டுக்குவாங்க. நான் தான் அவுங்களுக்கு உசுரு. நான் டூட்டி முடிஞ்சி வந்தவுடனே சாப்பாடு கொண்டு வந்து கையில குடுப்பாங்க. ஆனா கடைசியில ஒரு கை ஒரு கால் வராம பத்தாண்டு காலம் ஒரு குழந்தைய பார்த்துக்குறா மாதிரியே அவுங்கள நான் பார்த்துக்கிட்டேன். அவுங்களோட இழப்பு என் வாழ்க்கையில மிகப்பெரிய இழப்பு.

அடுத்த நாள் காலையில 6 மணிக்கே குழந்தைக்கு பால் குடுத்து நாத்தனார் கிட்ட பாப்பாவ குடுத்துட்டு டூட்டிக்கி கிளம்பி போய்ட்டேன். 11.30 க்கு முதல்வர் வருகை. ஆனா 4 மணி நேரத்துக்கு முன்னாடியே டூட்டி இடத்துக்கு போயாச்சி. பத்து மணிக்கு வீட்டுல இருந்து போன் வருது. எடுத்தா.. குழந்த கத்துற சத்தம். என்னம்மா ஏன் பாப்பா அழுவுது? ன்னு கேட்குறேன். புள்ள பசியில அழுவுது ,பசும் பால் சங்குல குடுத்தோம், குடிக்க மாட்டேங்குது துப்புது, தண்ணி கூட குடிக்க மாட்டேங்குதும்மா கத்தி ,கத்தி புள்ள தொண்ட காஞ்சி போச்சி. ஒரு எட்டு வந்து புள்ளைக்கு பால குடுத்துட்டு போய்டுமான்னு நாத்தனார் கெஞ்சிறாங்க.

புள்ள பசியில கத்திக்கிட்டு கிடக்கும் போது, டூட்டியில நிக்கறது இருக்கே அது மாதிரி ஒரு கொடும வேற எதுவுமே இருக்க முடியாது. கண்ணெல்லாம் கலங்குது, புள்ளையோட அழுவுற சத்தம் காதுல கேட்டுக்கிட்டே இருக்கு. அதவிட ஒரு பெரிய கொடும குழந்தையோட அழுகை சத்தம் கேட்கும் போதே என் சட்டையெல்லாம் நனைஞ்சி போச்சி. எங்க அம்மா சொல்லுவாங்க புள்ளக்கி பசி எடுத்தா நமக்கே நல்லா தெரியும்னு. ஆமாம் அதுவும் ஒரு உணவு கலயம் தானே. ரொம்புனா வழியதானே செய்யும்.

டூட்டியில இருக்குற அதிகாரி கிட்ட போயி கொஞ்ச நேரம் பர்மிசன் கேட்கவே வெட்கமா இருக்கு. சட்டை நனைஞ்சி இருக்கே அத பார்க்குறவங்க என்ன நினைப்பாங்க? சும்மாவே ஆணுக்கோ பெண்ணுக்கோ கண்ணு அங்க தான் போவும். நனைஞ்சி வேற இருக்கு இத பார்த்தா சொல்லவே வேண்டாம். கூனி குறுகி போய் நிக்கிறேன்.

என் தோழி ஓடிவந்து என்னடி ஆச்சுன்னு? கேட்டுக்கிட்டே கைக்குட்டைய எடுத்து குடுத்தா. அத வச்சா மட்டும் நின்னுடுமா என்ன? வேண்டாம்பா கொஞ்சம் தண்ணி மட்டும் வேணுன்னு கேட்டேன். ஓடி போயி தண்ணி பாட்டுல எடுத்துட்டு வந்து குடுத்தா. முன்னால சட்டையில ஊத்தி நெஞ்சு பூராவும் நனைச்சேன் . யாராவது கேட்டா தண்ணி குடிச்சப்ப தவறி தண்ணி ஊத்திடுச்சின்னு சொல்லிக்கலாம்ன்னு தான் அப்படி நனைச்சிட்டு, அந்த அதிகாரி கிட்ட போயி பர்மிசன் கேட்டேன்.

நான் போயி அந்த அதிகாரிகிட்ட நின்னவுடனே, அவர் கேட்ட முதல் கேள்வியே என்னம்மா சட்டை நனைஞ்சிருக்குன்னு? தான் கேட்டார். தண்ணி குடிச்சப்ப தவறிடுச்சிங்க சார்ன்னு சொன்னேன். என்ன அசால்ட்டு? VVIP வரும்போது இப்புடிதான் நனைச்சிகிட்டு நிப்பீங்களா? சின்ன புள்ள மாதிரின்னு? கேட்டார். ஆமால்ல! இந்த ஈரம் பத்தி அவருக்கு எங்க புரிய போவுது?

சார் நாலு மாசம் கை குழந்த சார், புள்ள ரொம்ப கத்திக்கிட்டு இருக்குன்னு போன் வந்துச்சிங்க சார் ,வீடு வரைக்கும் போய்ட்டு வந்துடுறேங்கன்னு கேட்டேன். VVIP பந்தோபஸ்த்துமா ஆப்சென்ட் ஆயிட்டா ஒன்னுமே பண்ண முடியாது .பேசாம புள்ளைய தூக்கிட்டு வர சொல்லுங்கம்மான்னு சொல்லிட்டு அவர் ரவுன்ஸ் கிளம்பிட்டார்.அவுரு மேலயும் குறை சொல்ல முடிதுயாது . நான் இங்கேர்ந்து போறப்ப எங்கயாவது அடிப்பட்டுட்டேன்னா அவர தான் கேட்பாங்க. யார கேட்டுட்டு அனுப்புனீங்கன்னு? அவர் வேள போயிடும் அதனால அவுருக்கு பயம். என்ன தான் அதிகாரம் இருந்தாலும் சில நேரத்துல அந்த அதிகாரத்த பயன் படுத்த முடியாது காவல் துறையில.

உடனே வீட்டுக்கு போன் பண்ணி, ஆட்டோவுல புள்ளைய தூக்கிட்டு வாங்கன்னு சொன்னேன், கொஞ்ச நேரத்துல வந்துட்டாங்க. காக்கி சட்டை போட்டுருக்கறதையும் மறந்து ஓடி போயி குழந்தைய தூக்கினேன். என் கை பட்டவுடனே அழுகை நின்னு போச்சி. அந்த ஆட்டோகாரர் ஆட்டோவ ஓரமா நிப்பாட்டிட்டு, ரெண்டு பக்கமும் மறைவ எடுத்து விட்டுட்டு, அக்கா ஆட்டோவுலயே உட்காந்து புள்ளைய அமத்துங்கக்கான்னு சொன்னார். தெய்வங்கள் கோவில்ல இல்லங்க, இவுங்கள மாதிரியான மனிதர்கள் தான் தெய்வம்.

அதனால தான் தற்போதய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெண்காவலர்கள் VVIP வரும்போது சாலையில் பந்தோபஸ்த்து பணியில் நிற்க வேண்டாம்ன்னு அறிவிச்சவுடனே எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியா இருந்துச்சி.அந்த மகிழ்ச்சில தான் என் எழுத்தையும், பேச்சையும், சில சம பவத்தையும், சேமிச்சி வச்சி முதல்வருக்கு ஒரு வாழ்த்து மடல் எழுதினேன் .

(என் கூட படத்துல இருக்க என் பொண்ணுதான் அந்த நாலு மாச கை குழந்த)

நன்றி.

கவி செல்வ ராணி ராமச்சந்திரன் திருச்சி.