Thu. Nov 21st, 2024

திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் பூமிநாதன் (56). நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பூமிநாதன் நவல்பட்டு சாலையில் 3 இருசக்கர வாகனங்களில் ஆடுகளுடன் வந்த நபர்களை நிறுத்தினார். அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றனர்.

ஆடுகளை திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதனை தெரிந்து கொண்ட எஸ்ஐ பூமிநாதன் அவர்களை இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்றார்.. அந்த ஆசாமிகள் திருச்சி- புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள பள்ளத்துப்பட்டி என்ற ஊருக்கு அருகில் சென்ற போது இருசக்கர வாகனம் ஒன்றை எஸ்ஐ பூமிநாதன் மடக்கி நிறுத்தியதுடன் அதில் இருந்த 2 திருடர்களையும் பிடித்தார்.

இதனைத் தெரிந்து கொண்ட மற்ற ஆடு திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் திரும்பி வந்து பூமிநாதனிடம் தங்களது கூட்டாளிகளை விடுவிக்குமாறு சண்டை போட்டனர். அப்போது அவர்களையும் கைது செய்ய பூமிநாதன் முயன்றார். அதனால் ஆத்திரமடைந்த ஆடு திருடும் கும்பல், அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள்களை எடுத்து, பூமிநாதனை கொடூரமாக வெட்டினர். இதில், படுகாயமடைந்த எஸ்ஐ பூமிநாதன் நிகழ்விடத்திலேய பரிதாபமாக உயிரிழந்தார். திருட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

அதிகாலை 2 மணியளவில் இந்த கொடூர நிகழ்வு நடந்துள்ளது. ஆனால், ஏறத்தாழ 3 மணிநேரம் கழித்துதான், அதாவது காலை 5 மணியளவில் தான் பூமிநாதன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிகழ்வு குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிந்துள்ளது. பள்ளத்துப்பட்டி வழியாக சென்ற நபர்கள் சிலர்தான், பூமிநாதன் கொலை செய்யப்பட்டு, அனாதையாக கிடப்பது குறித்து காவல்துறைக்கு தெரியவந்தது.

ஆடுத் திருடும் கும்பலால் காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்ட நிகழ்வு, திருச்சி மாவட்ட காவல்துறையினரையும், பொதுமக்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொலை நடந்த இடத்தை பார்வையிட்ட காவல்துறை உயரதிகாரிகள், அவரை பூமிநாதனை கொலை செய்த ஆடுதிருடர்களை உடனடியாக பிடிக்க, தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர்.