Fri. Nov 22nd, 2024

அ.தி.மு.க.வில் மீண்டும் சசிகலாவை இணைத்துக் கொள்வதற்கு 100 சதவிகிதம் வாய்ப்பு இல்லை என்று டெல்லியில் இருந்தபடியே கடந்த 19 ஆம் தேதி சொன்னாலும் சொன்னார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவரின் அந்தப் பேச்சுதான் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலாவை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளதாம். டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட மன்னார்குடி சொந்தங்களும் இ.பி.எஸ்.ஸுக்கு எதிராக உச்சகட்ட ஆத்திரத்தில் இருக்கிறார்களாம். எந்த தைரியத்தில் அவர் அப்படி சென்னார் என மண்டையை பியத்துக் கொள்கிறார்கள் மன்னார்குடி பிரமுகர்கள், விடுதலையான நாளில் இருந்து எண்ணி 30 நாட்களுக்குள் அ.தி.மு.க. கட்சியை கைப்பற்றுவேன் என்று சபதம் எடுத்திருக்கும் சசிகலாவின் வியூகத்தை அறிந்துகொள்வதில்தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதை ‘ஸ்மெல் ‘செய்துள்ள கொங்கு மண்டலத் தலைவர்கள், எடப்பாடி பழனிசாமியின் நிலைதான் என்னவாகுமோ? என்று பரிதவிக்கிறார்கள்.

‘நானும் ரவுடிதான்’ என்ற கணக்கில் வீராப்பு காட்டி வரும் முதல்வர் இ.பி.எஸ்., தரப்பினரோ, ‘பாடி ஸ்டராங், பேஸ்மென்ட் வீக்‘ என்பதைப் போல உள்ளூக்குள் ஆடிக் கொண்டிருக்கிறார்களாம். விக்டோரியா மருத்துவமனையில் இருந்து மறைந்த முதலவர் ஜெயலலிதா பயன்படுத்திய வாகனத்திலேயே அ.தி.மு.க கொடி கட்டி உறவினர்களுடன் ஊர்வலமாக வி.கே.சசிகலா புறப்பட்டதைப் பார்த்து, தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த அ.தி.மு.க.வினரும், அடுத்தடுத்த நாட்களில் அ.தி.மு.க.வில் என்ன பூகம்பம் வெடிக்குமோ? என்ற பதைபதைப்புடன் தான் இருக்கிறார்கள்.

பிப்ரவரி முதல் வாரத்தில் பெங்களூரில் இருந்து சென்னை திரும்பவுள்ளார் சசிகலா. ஓசூர், ஆம்பூர், வேலூர் வழியாக அவரை சென்னை அழைத்து வர பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், சென்னை மண்ணில் சசிகலா கால் வைக்கும் நேரத்தில் அ.தி.மு.க.வில் முக்கியப் பொறுப்பில் உள்ள தலைமைக் கழக நிர்வாகிகள், ஒன்றிரண்டு அமைச்சர்கள், மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் நின்று சசிகலாவை பயபக்தியோடு வரவேற்பதற்கும், களத்தில் முழுவீச்சில் இறங்கி வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.


முதல்வர் இ.பி.எஸ் மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸுக்கு நெருக்கமாக இருக்கும் முன்னணி நிர்வாகிகளைத் தவிர்த்து, ஏனையோர் தன்னை வந்து சந்திக்கலாம் என்று அனுமதியளித்துள்ள சசிகலா, தன்னுடைய அனுமதியில்லாமல் நேரடியாக வந்து சந்திப்பதற்கு அமைச்சர்களுக்கு மட்டும் தடா போட்டிருக்கிறாராம். தற்போதுள்ள அமைச்சரவையில், பாதிப் பேர் சசிகலாவை சந்திக்க ஆர்வமாக இருப்பதும், அவர்களைப் பற்றிய பட்டியல் சசிகலாவின் பார்வைக்கே அனுப்பி வைத்துள்ளதாகவும், அமைச்சர்கள் தன்னை வந்து சந்திப்பதில் சசிகலாவுக்கு பெரிதும் ஆர்வமில்லை என்றும் பெங்களூரில் முகாமிட்டுள்ள சசிகலாவின் நெருங்கிய உறவினர்கள் தகவல் தெரிவிக்கிறார்கள்.


வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நட்சத்திரமான மகம் நாளன்று, ஒட்டுமொத்த அ.தி.மு.க.வும் தன் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என்றும், அதற்குரிய திட்டங்களையும் சிறையில் இருக்கும் போதே சாசனம் போல எழுதி தாயராக வைத்திருப்பதாகவும், சசிகலா குறிப்பிட்டதாகவும் தகவல்களை கசிய விடுகின்றனர் அவரது உறவினர்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வையும், ஆட்சியையும் கட்டுப்கோப்பாக எப்படி உருவாக்கினேனோ, அதே போல மீண்டும் அ.தி.மு.க.வை ராணுவக் கட்டுப்பாட்டுடன் தன் தலைமையில் இயங்கும் வகையில்தான் இருக்கும் என்றும் தீர்மானமாகவும் தீர்க்கமாகவும் கூறியுள்ளாராம் சசிகலா.
அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க.வை இணைப்பது உறுதி என்றும், அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் ஒன்றுபட்ட அ.தி.மு.க.வை உருவாக்க, 5 கட்டளைகளை சசிகலா முன் வைத்துள்ளதாகவும், இந்த நடவடிக்கையில் அவர் காட்டும் உறுதி, தங்களுக்கே வியப்பாக இருக்கிறது என்கிறார்கள் அவர்களது உறவினர்கள்.
அது என்ன 5 கட்டளைகள்? என்று கேட்டால், ஒன்று ஒன்றாக சசிகலாவின் உறவினர்கள் விவரித்தபோது, நமக்கே திகிலடித்தது போன்றுதான் இருந்தது.தேவனஹள்ளி சொகுசு பங்களாவிற்குள காலடி எடுத்து வைத்த அடுத்த ஒரு சில மணிநேரம்தான் அமைதியாக இருந்தாராம் சசிகலா. பின்னர், டி.டிவி. தினகரன், இளவரசியின் புதல்வரும், ஜெயா டி.வி. தலைமை செயல் அலுவலர் விவேக் ஜெயராமன் உள்ளிட்ட நெருங்கிய ரத்தபந்த உறவுகளிடம் மட்டுமே செம ஜாலியான மூடில் மனம் திறந்து பேசினாராம். அப்போது அவரிடம் காணப்பட்ட உற்சாகத்தைப் பார்த்து டி.டி.வி.தினகரன், விவேக் உள்ளிட்ட உறவினர்களுக்கே ஆச்சரியமாக இருந்ததாம். நம்பிக்கை தரும் விதமாக பேசிய சசிகலா, உறவுகளுக்குள் உள்ள நல்லது, கெட்டதை மட்டுமே தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினாராம்.

அரசியல் வியூகம் பற்றி சும்மா ட்ரைலர் போல அப்போது சசிகலா சுட்டிக் காட்டினாராம். அவரின் டிரைலர் பற்றி ஏற்கெனவே டி.டி.வி.தினகரனுக்கு தெரியும் என்பதால், உடல்மொழியாக அவர் எதையும் வெளிப்படுத்தவில்லையாம். ஆனால், மற்ற உறவுகளுக்கு, சசிகலா ஒரு ஸ்ட்ராங்கான மனுஷியாக தான் காட்சியளித்தாராம்.
ஒரு வாரம் அங்கேயே தங்கியிருந்து, இளவரசி ஜெயராமன் விடுதலையானவுடன், இருவரும் சென்னைக்கு பயணமாவார்களாம். எப்படி, ஏற்கெனவே, சசிகலாவுடன் ஜெயலலிதா சென்னைக்கு இரட்டையர்களாக வந்தார்களோ அதுபோலதான், சசிகலாவும், இளவரசியை தன்னுடன் அழைத்துக் கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறாராம். அன்று, அவருக்கு வழங்கப்படும் உற்சாக வரவேற்பு, ஆட்சியில் இருப்பவரையே ஆட்டம் காண செய்ய வேண்டும் என்ற வெறியுடன் களத்தில் இறங்கியிருக்கும் டி.டி.வி.தினகரன், தன்னுடைய ஆதரவாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கட்டளைகளை பிறப்பித்து வருகிறாராம்.

முக்கியமான ஒன்றிரண்டு நிர்வாகிகளிடம் மட்டும் சசிகலாவின் ஐந்து கட்டளைகளை சுருக்கமாக கூறி உற்சாகப்படுத்தியுள்ளளாராம். அவர்களில் நட்புக்குரிய ஒரு பிரபலம் நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அதகள ரகம்.
சசிகலாவின் ஐந்து கட்டளைகள் என்னென்ன…

முதல் கட்டளை, 2017 ஆம் ஆண்டு தான் சிறைக்கு போகும்போது அ.தி.மு.க.வின் உட்கட்சி கட்டமைப்பு எப்படியிருந்ததோ, அதே மாதிரிதான் மீண்டும் இருக்கும். இரண்டாவது கட்டளை, ஓ.பி.எஸ் ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளராக இ.பி.எஸ்.ஸும், துணை ஒருங்கிணைப்பாரளாக கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் என 4 பேரின் நியமனம் ரத்து செய்யப்படும். மூன்றாவது கட்டளை, வழிகாட்டுதல் குழு என்ற அந்த குழுவே கலைக்கப்படும்.நான்காவது, மாநிலம் முழுவதும் 2017 பிப்ரவரிக்கு பிறகு கடசியில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட அனைத்து கட்சி பொறுப்புகளும் ரத்து செய்யப்படும். ஐந்தாவது கட்டளை, தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் இ.பி.எஸ். ஓ.பி.எஸ் உள்ளிட்டோருக்கு எந்த பங்கும் கிடையாது என்பதுதான் அந்த ஐந்து கட்டளைகள் என்றார்கள் டி.டி.வி.தினகரனின் நம்பிக்கைக்கு உரிய நிர்வாகிகள்.
இந்த ஐந்து கட்டளைகள் மூலம் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவியை விட்டுக் கொடுக்க தான் தயாராக இல்லை என்பதை, இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., உள்ளிட்ட அத்தனை அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும் உணர்த்த முடிவு செய்து இருக்கிறாராம் சசிகலா. அதில் இருந்து பின்வாங்கும் எண்ணமே சசிகலாவுக்கு இல்லை. தற்போதைய ஆட்சிப் பற்றி அவருக்கு எந்த கவலையும் இல்லை, கட்சிதான் முக்கியம் என்பதில் சசிகலா தீர்க்கமாக இருக்கிறார் என்பது எதிர்தரப்பினருக்கும் லேசுபாசாக தெரியும் என்கிறார்கள் டி.டி.வி.யின் நம்பிக்கைக்குரியவர்கள்.


சசிகலாவை கட்சியிலே சேர்க்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கும் இ.பி.எஸ்., எப்படி, அவரின் ஐந்து கட்டளைகளையும் ஏற்றுக் கொள்வார் என்று நமது சந்தேகத்தை முன்வைத்தோம். மர்ம புன்னகையுடன் பேசிய அவர், சசிகலா மற்றும் இ.பி.எஸ். இடையே தான் இன்றைய நிலவரப்படி போட்டியே இருக்கிறது. சசிகலாவின் ஐந்து கட்டளைகளை ஏற்று நடக்க ஓ.பி.எஸ்., தயாராகிவிட்டார். ஆனால், இ.பி.எஸ்.தான் அதிரடி காட்ட துடித்துக் கொண்டு இருக்கிறார். 2017 ஜனவரியில் சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ். போட்ட தர்மயுத்த வேடத்தைதான் இ.பி.எஸ். கையில் எடுக்கப் போகிறார். வரும் 14 ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியிடம் சரணாகதி அடைந்து, சசிகலாவை ஒழிந்து கட்டலாம் என்று இ.பி.எஸ். நினைக்கிறார். அவரின் ஆட்டமும், பகல் கனவும் தோல்வியில்தான் முடியும். கொஞ்சம் பொறுத்திருங்கள், சசிகலா சென்னை திரும்பியவுடன், அ.தி.மு.க.விற்குள் கேட்கும் அதிர்வேட்டுகளின் சத்தம், தமிழக மக்களுக்கும் கேட்கும் என்று கலகலவென சிரிக்கிறார் டி.டி.வி.யின் நம்பிக்கைக்குரிய தளபதி.

மீண்டும் தர்மயுத்தத்தை தொடங்கப் போவது சசிகலாவா… எடப்பாடி பழனிசாமியா…
பிப்ரவரி 7க்குப் பிறகு தெரிந்துவிடும்.