Fri. May 17th, 2024

தமிழக பா.ஜ.க. தலைவராக முன்னாள் காவல்துறை அதிகாரியான அண்ணாமலை பதவியேற்றுக் கொண்டார். சென்னை தி.நகரில் உள்ள கமலாயத்தில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை,தனது பதவியில் இருந்து விலகி, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பா.ஜ.க.வில் இணைந்தார். உடனடியாக அவருக்கு மாநில துணைத் தலைவராக பதவி வழங்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட அண்ணாமலை படுதோல்வியை தழுவினார்.

தேர்தல் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்திருந்த நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணையமைச்சராக அண்மையில் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, காலியாக இருந்த தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் பதவியில் அண்ணாமலையை நியமித்து, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தவிட்டார்.

தமிழக பாஜக தலைவராக அறிவிக்கப்பட்ட அண்ணாமலை, அதிகாரப்பூர்வமாக பதவியேற்றுக் கொள்ளாமலேயே, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.

இதனையடுத்து, இன்று சென்னை தி.நகரில் உள்ள, கமலாயத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை தமிழக பா.ஜ.க தலைவராக பதவியேற்றுக்கொண்டார். இதில், தமிழக பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன், முன்னாள் எம்.பி. இல. கணேசன், சட்டமன்ற பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தலைவராக பதவியேற்றுக் கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் அண்ணாமலை.

சாதாரண மனிதர்களுக்கும் அங்கீகாரம் வழங்கும் கட்சி பா.ஜ.க. என்னை போன்ற விவசாய குடும்பத்தில் பிறந்தவர்கள், எல்.முருகனை போன்ற ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு நீட் தேர்வு வரப்பிரசாதமாக இருக்கிறது. எனவே, நீட் தேர்வு வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் நிலைப்பாடு. கிராமப்புற மாணவர்களை சந்தித்து நீட் தேர்வின் நன்மைகள் குறித்து எடுத்துரைப்போம். அதை முக்கிய பிரசாரமாக்கி மூலை முடுக்கெல்லாம் உள்ள மக்களை சந்தித்து நீட் தேர்வு நல்லது என்று மக்களிடம் எடுத்து சொல்வோம்.

நீட் தேர்வால் மருத்துவ படிப்புகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுவது தடுக்கப்பட்டது . ஏழை, எளிய மாணவர்களுக்கு நீட் தேர்வு ஒரு வரப்பிரசாதம்.

தமிழகத்தில் பா.ஜ.க.வை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வேன். பா.ஜ.க. தலைமை எனக்கு வழங்கிய பொறுப்பை உணர்ந்து செயல்படுவேன்

மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் முறைப்படி கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்கிறது.

மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு மட்டுமே தடுப்பூசி விநியோகம் செய்யப்படுவது இல்லை.

தடுப்பூசி செலுத்தும் வேகம், தடுப்பூசி வீணாவது போன்றவையும் விநியோகத்தின் முக்கிய காரணிகள் ஆகும்.

தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்குமாறு தமிழக பா.ஜ.க. வலியுறுத்தும் .

மூத்த தலைவர்களை கலந்தாலோசித்தே தமிழக பா.ஜ.க இனி முக்கிய முடிவுகளை எடுக்கும்.

இவ்வாறு அண்ணாமலை கூறினார்.