Fri. May 17th, 2024

2021 ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு பெற்று தருவதாக கூறி 50 லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக மத்திய பாஜக அமைசசர் கிஷன் ரெட்டியின் உதவியாளர் மீது சென்னை பாண்டி பஜார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிகழ்வு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் புவனேஷ் குமார் என்பவர், சென்னை பாண்டி பஜார் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை வழங்கியுள்ளார். அதில், தான் ஆரணி நகர பாஜக தலைவராக இருந்து வருவதாகவும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆரணி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுவதற்கு முயன்று வந்ததாகவும் அப்போது, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்று தருவதாக கூறி, நரோத்தமன் என்ற நபரை சென்னை தி.நகரில் உள்ள ஹோட்டலில் சந்தித்தாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த சந்திப்பின் போது மத்திய பாஜக அமைச்சர் கிஷன் ரெட்டியின் தனி உதவியாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நரோத்தமன், பாஜக வேட்பாளராக அறிவிப்பதற்கு ஒரு கோடி ரூபாய் லஞ்சமாக கேட்டார். அப்போதே முன்பணமாக 50 லட்சத்தை வழங்கியதாகவும், பாஜக வேட்பாளர் பட்டியலில் தன் பெயர் இடம் பெற்றால் மீதி தொகையான 50 லட்சம் ரூபாயை அப்போது வழங்குவதாகவும் உறுதியளித்தாகவும் கூறியதாக குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், பாஜக வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட போது, அந்த பட்டியலில் தன் பெயர் (புவனேஷ் குமார்) இடம் பெறாததால், அதிர்ச்சியடைந்து விட்டதாகவும், 50 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு தன்னை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியின் தனி உதவியாளர் நரோத்தமன் ஏமாற்றி விட்டதாகவும், பணத்தை திருப்பி தருமாறு கேட்டபோது, நரோத்தமன் பணத்தை தராமல் மோசடி செய்து வருகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, பண மோசடியில் ஈடுபட்ட நரோத்தமன் மீது உரிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது புகாரில் கேட்டுக் கொண்டிருந்தார் புவனேஷ்குமார்.
அவரின் புகாரின் பேரில் விசாரணை நடத்திய பாண்டி பஜார் காவல்துறையினர், பண மோசடியில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்ததையடுத்து, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியின் தனி உதவியாளர் நரோத்தனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மத்திய பாஜக அமைச்சரின் தனி உதவியாளருக்கு எதிராக பண மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளது, தமிழக பாஜக நிர்வாகிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பாஜக அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளராக கடந்த பிப்ரவரி மாதம்தான் அகில இந்திய பாஜக.வால் நியமிக்கப்பட்டார் என்பது நினைவுக்கூரத்தக்கது.