மூதாட்டியின் நிலை குறித்து தகவலறிந்த சேலம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் நேரடியாக சென்று மூதாட்டியை மீட்ட தனியார் தொண்டு நிறுவனம்…
சேலம் அருகே உள்ள டால்மியா போர்டு பகுதியை சேர்ந்தவர் ராதா(95) என்ற மூதாட்டி.இவரது கணவர் தலைமை காவலராக இருந்து ஓய்வு பெற்று கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு உயிர் இழந்துள்ளார். இவருக்கு 4 மகன்கள் இருந்த நிலையில் 2 மகன்கள் உயிரிழந்தனர். கடைசி மகனான ஸ்ரீதர் என்பவரின் வீட்டில் இவர் வசித்து வருகிறார்.
டால்மியா போர்டில் உள்ள கனிமவளங்கள் துறையில் பணிபுரிந்து வருகிறார். மேலும் மூதாட்டிக்கு அரசின் சார்பில் பென்ஷன் தொகையும் வந்து கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் ஸ்ரீதர் மற்றும் அவரது மனைவி,மகன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தினர் அனைவரும் தனியார் மருத்துவமனைக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை ஸ்ரீதர் வசித்து வந்த வீட்டின் பின்புற பகுதியிலிருந்து மூதாட்டி ஒருவரின் அழுகுரல் கேட்டு அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது வீட்டின் கழிவறையில் மூதாட்டி ராதா உணவின்றி, குடிநீர் இன்றி தவித்து வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மூதாட்டி ராதாவின் மகன்களை தொடர்பு கொண்டு தெரிவித்த போது ‘தனது தாய் இறந்தால் மாநகராட்சிக்கு தெரிவித்து விடுங்கள். அவர்கள் வந்து எடுத்து செல்லட்டும்’என்று அலட்சியமாக பதில் கூறியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் இந்த நிலை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்ததையடுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து சேலத்தில் ஆதரவற்ற முதியோர் இல்லம் நடத்தி வரும் போதி மரம் என்ற தனியார் தொண்டு நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து போதிமரம் தனியார் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கழிவறை அறையில் கடந்த சில நாட்களாக உணவின்றியும், குடிநீரின்றியும் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த மூதாட்டியை மீட்டு முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இது குறித்து மூதாட்டியிடம் விசாரித்த பொழுது கடந்த சில நாட்களாகவே கழிவறையில் தங்க வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மூதாட்டியை முதியோர் இல்லத்தில் சேர்த்து அவருக்கு முதலுதவி அளித்து வருகின்றனர்.பெற்றத் தாயை கழிவறையில் விட்டுச் சென்ற மகனின் மனிதநேயம் இல்லாத செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.