Sat. Apr 20th, 2024

வணக்கம் நண்பர்களே! எனதருமை நண்பர், தமிழுலகம் நன்கறிந்த தமிழ்ப் பேரறிஞர் திரு. திருப்பூர் கிருஷ்ணனின் நட்பு வட்டம் ஆயிரக்கணக்கான தமிழ் அன்பர்களால் ஆனது!அதனால், அந்த நட்பு வட்டத்தில் நிகழும் கால, அகால மரணங்களை குறுஞ்செய்தியில் அடிக்கடி அவர் அறிவித்துக் கொண்டே இருப்பார்!எந்த மரணமும் ஆதரவற்ற மரணமாக அமைந்துவிடக் கூடாது என்பது அவரது உயிரின் வேட்கை! எல்லோரும் எல்லோர்க்கும் இரங்க வேண்டும் என்பது அவரது வாழ்வின் கோட்பாடு!

திருப்பூர் கிருஷ்ணன்….

இந்த நிலையில் அவரது, மரண அறிவிப்புகளின் தொடர்ச்சியாக……இன்று காலை, ‘My son Aravind expired today morning’ THIRUPPUR KRISHNAN-என்று அவர் ஒரு குறுஞ்செய்தியை எனக்கு அனுப்பிய போது,நிலைக்குலைந்து போன நான் இன்னமும் நொறுங்கியே கிடக்கிறேன்!நிகழ்காலத் தமிழ் இலக்கியவாதிகளை, அவர்களது குடும்பத்தினரோடு சேர்ந்து நேசிக்கும் தனிப்பெருந்தாய்மை திருப்பூர் கிருஷ்ணனின் எப்போதும் உண்டு! அவர் மிக மிக அரிதானதொரு நல்லிலக்கியவாதி!

வாழ்வின் நிலையாமை பற்றியும், மனிதர்கள் ஒவ்வொரும் கொண்டிருக்க வேண்டிய நேர்மறை எண்ணங்களைப் பற்றியும் எப்போதும் அவர் நிறைய பேசுவார்!இந்தக் கேடுகெட்ட சமூக அமைப்பிலும், அவரது பார்வைகள் அனைத்தும் நேர் கொண்ட நல்ல பார்வைகளாகவே இருந்து வருவதை நினைத்து நினைத்து நான் பல முறை வியந்திருக்கிறேன்!இந்தச் சிக்கலைத் திருப்பூர் கிருஷ்ணன் எப்படிக் கையாள்வார்? என்று சிந்தித்து, பல முறை என் சிக்கல்களை நான் சரிசெய்து கொண்டிருக்கிறேன்.

கலைகள், ஆன்மிக இலக்கியங்கள், சங்கத் தமிழ் இலக்கியங்கள், தற்கால இலக்கியங்கள்,நாடகங்கள், ஆய்வுகள், நட்புறவுகள், குடும்ப உறவுகள்,இதழியல் கூறுகள், இலக்கண வகைகள், வாழ்க்கைமுறைகள், காந்திய நெறிகள், வள்ளலார் வழிகள், பொதுப் பண்புகள், சபைப் பண்புகள் என்றெல்லாம் தான் ஏற்றுக்கொண்ட வாழ்வின் அனைத்துக்கூறுகளிலும் மிகவும் உயர்ந்து விளங்குகிற அப்பழுக்கற்ற தனிப்பெரும் பேராற்றல் அவருக்கு உண்டு!’

இன்னொரு திருப்பூர் கிருஷ்ணன்’ என்று இந்தத் தமிழ் நாட்டில் எவருமே இல்லை!திருப்பூர் கிருஷ்ணன், நமது தமிழ்ச் சமூகத்தின் தனிப்பெரும் சொத்து!அவரது குடும்பம் மூன்று உன்னதமான உறவுகளால் ஆனது, மிகவும் எளிமையானது!அதே வேளையில் உறுதியான ஆழ்ந்த அன்பினால் பிணைக்கப்பட்டது!

திருப்பூர் கிருஷ்ணனுக்கும் அவர்தம் அரிய வாழ்விணையர் திருமதி ஜானகி அம்மாவுக்கும் ஒற்றை நம்பிக்கையாகவும், ஒரே மகனாகவும் விளங்கியவர் அரவிந்த்!’விளங்கியவர்’ என்று இங்கே என் எழுத்துகளைத் தட்டச்சு செய்து முடிப்பதற்குள் எனது விரல்கள் கட்டுப்படுத்த முடியாமல் நடுங்குகின்றன!

இனி என்னால் இப்பதிவில் தொடர்ந்து எழுத முடியாது!நீ போய்விட்டாய்… போ அரவிந்த்! உன் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் உன்னளவுக்கு யாரும் கிடைக்கமாட்டார்கள் என்றாலும், உன்னைப்போல் நிறையபேர் கிடைப்பார்கள்!எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பாய்!அந்தச் சிரிப்புக்கு நீ இன்னொரு பொருளையும் வைத்திருந்தாய் என்பதை இப்போது புரிந்து கொள்கிறேன்!

கவிஞர் ஜெயபாஸ்கரன்…..