Sun. May 19th, 2024

அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபிலுக்கு எதிரான மோசடி புகாரால் ஒட்டுமொத்த அதிமுக.வே இன்றைக்கு தலை குணிந்து நிற்கிறது.
அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நிலோபர் கபில் போட்டியிடுவதற்கு வாய்ப்பே தரப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த நிலோபர் கபில், வேலூர் மாவட்ட அதிமுக.வில் தனி செல்வாக்கோடு இருக்கும் கே.சி.வீரமணி மீது புழுதி வாரி தூற்றினார்.
வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் கே.சி.வீரமணி.
சாதி பாசத்தோடு திமுக முன்னணி தலைவர்களோடும் நெருக்கமாக பழகி வருவதுடன் தொழில் ரீதியாக பார்ட்டனராகவும் கே.சி.வீரமணி உள்ளார் என்று அதிரடியாக குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
நிலோபர் கபிலின் கண்ணீர் பேட்டிகளை கண்டுகொள்ளாத அதிமுக இரட்டை தலைமை, கே.சி. வீரமணிக்கே ஆதரவாக நின்றது.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தவுடன் துள்ளிக் குதித்து சந்தோஷப்பட்டார் நிலோபர் கபில்.
அதுவும் தனது அரசியல் எதிரியான கே.சி.வீரமணியும் படுதோல்வி அடைந்தார் என்ற தகவலைக் கேட்டு குத்தாட்டம் போட்டார் நிலோபர் கபில்.
அதிமுக.வில் இனியும் தொடர்ந்தால் கே.சி.வீரமணிக்கு எதிராக அரசியல் பண்ண முடியாது என்று நினைத்து, திமுக.வுக்கு தூது விட்டார் நிலோபர் கபில்.

அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணியை தோற்கடித்த திருப்பத்தூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் தேவராஜிடம் சரண்டர் ஆனார் நிலோபர் கபில்.
மரியாதை நிமித்தமாக நிலோபர் கபில் போட்ட பொன்னாடைகளை வாங்கி மடித்து வைத்துக் கொண்டார் தேவராஜ்.
அதிமுக.வின் முன்னாள் அமைச்சர் என்ற முறையில் நிலோபரிடம் நலம் விசாரித்துள்ளார் தேவராஜ்.


அவரின் உபசரிப்பை பார்த்து மகிழ்ந்து போன நிலோபர் கபில், அதிமுக.வில் இருந்து விலகி திமுக.வில் சேர வந்திருப்பதாக கூறியுள்ளார்.
தேவராஜுக்கும் சாதிப் பாசம் அதிகம். தனது சமுதாயத்தைச் சேர்ந்த கே.சி.வீரமணியின் அரசியல் எதிரி தனக்கும் எதிரி என்ற சிந்தனையோடு நிலோபரை கழற்றி விட்டுள்ளார்.
அம்மா, நீங்கள் முன்னாள் அமைச்சர். உங்களை திமுக.வில் சேர்க்க வேண்டும் என்றால், முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் முடிவெடுக்க வேண்டும். அவரை சந்திக்க முடியாவிட்டால், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனைப் பாருங்கள். உங்களை திமுக தலைவரிடம் அழைத்துச் செல்வார் என்று கூறி நாசூக்காக கழன்று கொண்டார் தேவராஜ்.

அப்போதும் மனம் தளராத நிலோபர் கபில், திமுக பொதுக் செயலாளர் துரைமுருகனை சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.
ஆனால் துரைமுருகனின் உதவியாளர்கள் கொரோனோவை காரணம் காட்டி, ஒரு வாரம் கழித்து வரச் சொல்லியிருக்கிறார். இதனால் ஏமாற்றத்துடன் வாணியம்பாடிக்கே திரும்பி வந்திருக்கிறார் நிலோபர் கபில். வாணியம்பாடியிலேயே அட்ராஸ் இல்லாதவரை, எம்.எல்.ஏ.வாக ஆக்கி, அமைச்சராக ஆக்கி தமிழகம் முழுவதும் அடையாளம் தந்த கட்சிக்கே துரோகம் செய்ய துணிந்துவிட்டார் நிலோபர் கபில் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் போட்டுக் கொடுத்துள்ளார் கே.சி.வீரமணி.

அதிமுக ஆட்சியில் கோடி கோடியாக கொள்ளையடித்த நிலோபர் கபில், பரம வைரியான திமுக.வில் சேர முயற்சிப்பதை கேள்விப்பட்டு ஆத்திரமடைந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. கோபம் தணிவதற்கு முன்பாகவே, முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகிய இருவரையும் அழைத்து, தேனியில் உள்ள ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். ஸை சந்தித்து, நிலோபர் கபிலை அதிமுக.வில் இருந்து நீக்கும் அறிவிப்பில் கையெழுத்து வாங்கி வரச் சொல்லியிருக்கிறார். நேற்று காலை இரண்டு பேரும் தேனிக்குச் சென்று ஓ.பி.எஸ். ஸை சந்தித்து நிலோபர் கபிலை, அதிமுக.வில் இருந்து நீக்கும் அறிக்கையில் கையெழுத்து வாங்கியுள்ளனர்.
ஒருபக்கம் எஸ்.பி.வேலுமணியும், பி.தங்கமணியும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெற்றுக் கொண்டிருந்த அதே நேரத்தில், ஜோலார்பேட்டையில் அமர்ந்து கொண்டே, நிலோபர் கபிலின் பொது வாழ்க்கைகே வேட்டு வைத்தார், கே.சி.வீரமணி.


நிலோபர் கபில் அமைச்சராக இருந்தபோது அவரிடம் உதவியாளராக பணியாற்றிய பிரகாசம் என்பவர் மூலம் 6 கோடி ரூபாய் அளவுக்கு நிலோபர் கபில் மோசடியில் ஈடுபட்ட விவகாரத்தை சமூக ஊடகங்களில் வெளியிட வைத்தார், கே.சி.வீரமணி.
மாலை நேரத்தில் வாட்ஸ் அப் மூலம் பரவிய அந்த மோசடி புகார், நிலோபர் கபிலின் பொதுவாழ்க்கைக்கே எமனமாக மாறிவிட்டது.


இனிமேல் எக்கி எக்கி குதித்தாலும் நிலோபர் கபில் எந்த கட்சியிலும் சேர முடியாது. அவரது சொந்த ஊரான வாணியம்பாடியிலேயே சுதந்திரமாக நடமாட கூட முடியாது…அதிமுக.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நிலோபர் கபிலை நீக்கியுள்ளதை பார்த்து அதிர்ச்சியாகியுள்ளனர் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள்.
அதிமுக.வுக்கு துரோகம் இழைக்க நினைப்பவர்களை விரட்டி விரட்டி வெளுக்க தயாராகி விட்டார் எடப்பாடி பழனிசாமி என்று உற்சாகத்தில் திளைக்கிறார்கள் அதிமுக முன்னணி நிர்வாகிகள்…

One thought on “நிலோபர் கபிலுக்கு திமுக தடை… கட்சி தாவ முயன்றவருக்கு கல்தா.. இ.பி.எஸ். ஆட்டம் ஆரம்பம்…”

Comments are closed.