Sat. Nov 23rd, 2024

அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில், அதிமுக.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கப்பட்டதற்கு முக்கிய காரணம், திமுக.வில் சேர அவர் எடுத்த முயற்சிதான் என்று நல்லரசு தமிழ் செய்திகளில் குறிப்பிட்டிந்தோம். நம்மை தவிர வேறு எந்த ஊடகமும் இந்த தகவலை சொல்லவில்லை.

நல்லரசு தளத்தில் வெளியிடப்பட்ட தகவலை, பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நிலோபர் கபிலே ஒத்துக் கொண்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் தேவராஜ் எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து நிலோபர் கபில் பேசியதிலும் இதுவரை வெளிவராத ஒரு சுவாரஸ்யமான தகவல் உள்ளது.

சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு கடந்த 19 ஆம் தேதி நிலோபரின் சகோதரி உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். அதற்கு முன்பாக கடந்த 13 ஆம் தேதி நிலோபரின் தாயார் காலமாகியிருக்கிறார். அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக, வாணியம்பாடி அரசு விருந்தினர் மாளிகையில் இருந்தவாறு 6 நாட்களுக்குப் பிறகு (மே 19 ஆம் தேதி) தேவராஜ் எம்.எல்.ஏ., தொலைபேசியில் முன்னாள் அமைச்சர் நிலோபரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

அன்றைய தினம் வாணியம்பாடியில் இருந்த நிலோபர் கபில், அவரது ஆறுதலான வார்த்தைகளை கேட்டு நெகிழ்ந்துப் போன நிலோபர் கபில், தேர்தலில் தேவராஜ் வெற்றிப் பெற்றதற்கு வாழ்த்து சொல்லிவிட்டு, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் அண்ணா ? என்று கேட்டபோது, தான் தங்கியிருக்கும் இடத்தை சொல்லியிருக்கிறார் தேவராஜ் எம்.எல்.ஏ.

அப்போது நானும் வாணியம்பாடியில்தான் இருக்கிறேன். சென்னையில் சிகிச்சைப் பெற்று வரும் தனது சகோதரிக்கு தேவையான வெண்டிலேட்டரை எடுத்துக் கொண்டு சென்னை செல்கிறேன். வழியில் உங்களையும் வந்து நேரில் பார்த்து வாழ்த்து தெரிவிக்கிறேன் என்று கூறவே, தேவராஜும் வாருங்கள் என்று சொல்லியுள்ளார். அதன்பேரில் வாணியம்பாடி அரசினர் விருந்தினர் மாளிகையில் கடந்த 19 ஆம் தேதி தேவராஜை சந்தித்து நிலோபர் கபில் பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போதுதான் திமுக.வில் சேர ஆர்வமாக இருப்பதாக நிலோபர் கபில் தெரிவித்துள்ளார்.

இருவரின் சந்திப்பு தொடர்பாகவும், நிலோபர் கபில் திமுக.வில் சேர முயற்சித்த தகவலையும் நல்லரசு தமிழ் செய்திகளில் விரிவாக எழுதியிருந்தோம்.

அதிமுக.வில் இருந்து தன்னை நீக்கியதன் மூலம் இரட்டை தலைமை தன்னை அசிங்கப்படுத்திவிட்டதாக நினைக்கும் நிலோபர் கபில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு தலைவர்கள் உள்பட முன்னாள் அமைச்சரான கே.சி.வீரமணியையும் பகிரங்கமாக எதிர்க்க துணிந்துவிட்டார்.

தன்மீதான 6 கோடி ரூபாய் அளவுக்கான ஊழல் புகார்களை சட்ட ரீதியாக சந்திக்க தயாராக இருப்பதாகவும் அதிமுக அமைச்சர்களில் எடப்பாடி பழனிசாமி உள்பட பலர் மீது ஊழல் புகார்களை கூறி ஆளுநரிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ள புகாரில் குறிப்பிட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்களை, இ.பி.எஸ்.ஸும், ஓ..பி.எஸ்.ஸும் நீக்குவார்களா? என்று பகிரங்கமாக சவால் விட்டுள்ளார் நிலோபர் கபில்.

நிலோபர் கபில் காட்டும் விஸ்வரூபம், வேலூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணியின் கட்சி பதவியை பறிக்கும் வரை ஓயப்போவதில்லை என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதேநேரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஊழல் புகார்கள் மீது திமுக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிலோபர் கபில் மூலமே நிர்ப்பந்தம் கொடுக்க வைத்து திமுக மறைமுகமாக அரசியல் செய்கிறதா ? என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறார்கள் கே.சி.வீரமணிக்கு நெருக்கமான விசுவாசிகள்.

கே.சி.வீரமணிக்கு எதிராக நிலோபர் கபில் பொங்குவதை ஆர்வத்துடன் ரசித்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அவருக்கு எதிரான அதிமுக முன்னணி நிர்வாகிகள்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 13 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. வேலூரை பிரித்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட போது வேலூர் மாவட்டத்தில் 5 தொகுதிகள் இடம் பெற்றது. இதில், ஒரே ஒரு தொகுதியில், கே.வி.குப்பத்தில் மட்டுமே அதிமுக கூட்டணி வேட்பாளர் ஜெகன் மூர்த்தி வெற்றிப் பெற்றார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் அரக்கோணத்தில் மட்டும் அதிமுக வேட்பாளர் எஸ். ரவி வெற்றிப் பெற்றார்.

இதேபோல, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் வாணியம்பாடி தொகுதியில் மட்டுமே அதிமுக வேட்பாளர் ஜி. செந்தில்குமார் வெற்றிப் பெற்றுள்ளார்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 தொகுதிகளில் 10 தொகுதிகளில் அதிமுக தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணமே, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் தான்தோன்றித்தனமான செயல்பாடுகள்தான் என்று அதிமுக முன்னணி நிர்வாகிகள், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் புகார் வாசித்துள்ளனர்.

16 ஆண்டு காலம் மாவட்டச் செயலாளராகவும், பத்தாண்டு காலம் எம்.எல்.ஏ.வாகவும், இரண்டு முறை அமைச்சராகவும் இருந்த கே.சி.வீரமணியால், வேலூர் மாவட்டத்தில் அதிமுக.வின் செல்வாக்கை தூக்கி நிறுத்த முடியவில்லை.

அவருடைய சொந்த தொகுதியான ஜோலார்பேட்டையிலேயே கே.சி.வீரமணி தோல்வியை தழுவி விட்டார். ஒட்டுமொத்தமாக வேலூர் மாவட்டத்தில் செல்வாக்கு இழந்துவிட்ட கே.சி வீரமணியை, மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று முன்னணி நிர்வாகிகள் பலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

கோவி சம்பத்குமார், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.

அதில் முன்னணி நபராக இருப்பவர் கோவி சம்பத்குமார். இவர் வாணியம்பாடி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ., வாக இருந்தவர். மேலும், ஆலங்காயம் ஒன்றியத்தின் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.வாணியம்பாடியில் இவரின் செல்வாக்கை குறைக்கும் வகையில்தான் ஆலங்காயம் ஒன்றியத்தை இரண்டாக பிரித்து, தற்போதைய அதிமுக எம்.எல்.ஏ., ஜி.செந்தில்குமாரை ஆறு மாதத்திற்கு முன்பு மேற்கு ஒன்றிய செயலாளராக நியமித்தார் அப்போதைய அமைச்சர் கே.சி.வீரமணி.

ஆலங்காயம் ஒன்றியத்தை உள்ளடக்கிய வாணிம்பாடி தொகுதியில் தனது வளர்ச்சிக்கு தொடர்ந்து தடையாக இருக்கும் கே.சி.வீரமணியை அவமானப்படுத்தி, மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மறைமுகமாக காய் நகர்த்தி வருகிறார் ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய செயலாளரான கோவி சம்பத்குமார்.

நிலோபர் கபிலுக்கு எதிராக மோசடி புகார் கூறியதில், கோவி சம்பத்குமாரின் ஆதரவாளர்களும் உள்ளனர். தற்போது நிலோபர் கபிலின் கதை முடிந்ததால், அடுத்து கே.சி.வீரமணிக்கு குறி வைத்துள்ளார் கோவி சம்பத்குமார்.

அவருக்கு மறைமுகமாக வேலூர் மாவட்ட அதிமுக முன்னணி நிர்வாகிகள் பலர் ஆதரவு தந்து வருவதால், மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து கே.சி.வீரமணியை நீக்கும் வரை ஓய மாட்டேன் என்று சபதமே செய்துள்ளாராம் கோவி. சம்பத்குமார்.

ஆக, மொத்தத்தில் வேலூர் மாவட்ட அதிமுக.வில் வெடித்துக் கொண்டிருக்கும் உட்கட்சி மோதல், இப்போதைக்கு ஓயாது போல….