அதிமுக ஆட்சியின் போது தென் மாவட்ட அமைச்சர்களில் பாரி வள்ளலைப் போல திகழ்ந்தவர் அப்போதைய வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னையில் இருந்து தனது தொகுதியான திருமங்கலத்திற்கு அவர் சென்றால், தொகுதி மக்களுக்கு திருவிழா கொண்டாட்டம் போலதான். கடந்த 5 ஆண்டுகளும் ஆர்.பி.உதயகுமாரால் தொகுதியில் உள்ள அதிமுக நிர்வாகிகள் வீடுகளில் மட்டுமின்றி பொதுமக்கள் வீடுகளிலும் அசைவு உணவு தூள் கிளப்பியது.
அந்தளவுக்கு வாரம் தவறாமல் தனது திருமங்கலம் தொகுதியில் ஏதாவது ஒரு விழாவை நடத்தி, அந்த விழாவுக்கு கூட்டத்தை சேர்க்க, அதிமுக நிர்வாகிகளில் அழைத்து வரப்படும் பொதுமக்களுக்கு பெண்களாக இருந்தால் ஒரு புது சேலையும், இருநூறு ரூபாயும், ஆண்களாக இருந்தால் புதுவேட்டியும் இருநூறு ரூபாயும் வாரி வழங்கி நவீன பாரிவள்ளலாக விஸ்வரூபம் காட்டி வந்தவர் ஆர்.பி.உதயகுமார்.
சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களிலும் ஏறக்குறைய 5 ஆயிரம் பேர், ஆர்.பி.உதயகுமார் நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்த வகையில், வழக்கத்திற்கு மாறான சந்தோஷத்தில் துள்ளி குதித்துள்ளனர். அந்தவகையில், பொதுமக்களை அழைத்து வரும் அதிமுக நிர்வாகிகளும் இரட்டிப்பு மகிழ்ச்சியில் தள்ளாடி போனார்கள்.
பொதுமக்கள், அதிமுக நிர்வாகிகளைப் போல, ஆர்.பி.உதயகுமாரின் நிகழ்வுகளை செய்தியாக்கும் அனைத்து ஊடகப் பத்திரிகையாளர்களும், வாரச் செலவுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமை வருவாயையே முழுமையாக நம்பியிருந்தனர்.
இப்படி கடந்த 5 ஆண்டுகளாக தொகுதி மக்களை எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்ட ஆர்.பி.உதயகுமார், தென் மாவட்டங்களிலேயே தன்னைப் போல எம்.ஜி.ஆர், ஜெயலலிதா விசுவாசி யாரும் இல்லை என்பதை தமிழகத்திற்கு காட்ட, திருமங்கலம் அருகே முன்னாள் முதல்வர்கள் இருவருக்கும் 12 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான கோயில் ஒன்றை கட்டினார். அதில், இருவருக்கும் வெண்கலத்திலான ஆளுயர சிலைகளையும் நிறுவி, ஆகம விதிகளின்படி கோயில்களில் நடைபெறும் வழிபாட்டு முறைகளையும் அந்தக் கோயிலிலும் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்தார்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு நாள்தோறும் பூஜை செய்வதற்காக பூசாரி ஒருவரையும் நியமித்தார். மேலும், தினசரி ஆராதனைக்கு தேவையான பால், தயிர் ஆகியவற்றை வெளியே விலை கொடுத்து வாங்காமல் சொந்தமாக உற்பத்தி செய்து கொள்வதற்காக பசுமாடு, காளை என 40 மாடுகளை வாங்கி கோயில் பயனபாட்டிற்கு வழங்கினார். மேலும், தான் உயிரோடு இருக்கும் வரை அந்த கோயிலில் மதியம் அன்னதானம் தடையின்றி வழங்கப்படும் என்றும் வீராவேசமாக அறிவித்திருந்தார் ஆர்.பி.உதயகுமார்.
மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவோம், மக்களின் வரிப்பணத்தில் எவ்வித இடையூறும் இன்றி கொள்ளையடிப்போம். அந்தப் பணத்தில் இருந்து எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா கோயிலில் தர்ம காரியம் செய்து நவீன வள்ளலாக ஆயுள் முழுவதும் வாழ்ந்து விடலாம் என்று நம்பிக்கையில், தேர்தலுக்கு முன்பு வீர முழக்கங்களை செய்த ஆர்.பி.உதயகுமார், அதிமுக தோற்று திமுக ஆட்சிக்கு வந்தவுடன், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கோயில் பக்கமே தலைவைத்து படுப்பது இல்லை.
மேலும், கோயிலுக்கு என்று வாங்கி விடப்பட்ட 40 மாடுகளையும் விற்றிருக்கிறார் ஆர்.பி.உதயகுமார். அதைவிட கொடுமையாக கொரோனோ உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில், கோயிலில் மதியம் வழங்கி வந்த அன்னதானத்தையும் நிறுத்தியிருக்கிறார் ஆர்.பி. உதயகுமார். வீண் செலவு வைக்கம் ஆராதனைகளையும் குறைக்க சொல்லியிருக்கிறார்.
ஆட்சியும், அதிகாரமும் பறிபோன ஒரு மாதத்திற்குள்ளாகவே, ஐந்தாண்டுகளுக்கு மேலாக போட்டுக் கொண்ட பாரிவள்ளல் அடையாளத்தை களைந்து, சராசரி மனிதனைப் போல அம்மணமாக நிற்கும் கோலத்திற்கு ஆர்.பி.உதயகுமார் வந்துவிட்டது போன்ற உணர்வுதான் தங்களுக்கு எல்லாம் உருவாகியிருக்கிறது என்று வேதனையோடு கூறுகிறார்கள் திருமங்கலம் அதிமுக நிர்வாகிகள்.
கொரோனோ உச்சம் தொட்டு இருக்கும் இன்றைய நிலையில், தொகுதி மக்களுக்கு எந்த நலத்திட்ட உதவிகளையும் வழங்காமல் கையை இறுக்கிக் கொண்டுள்ள ஆர்.பி.உதயகுமார், தனது தந்தையின் மறைவுக் காரணம் காட்டி, தொகுதி மக்களுக்கு எந்தவிதமான நலத்திட்ட உதவிகளையும் செய்யாமல் ஒதுங்கிக் கொண்டுள்ளார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான விசுவாசிகள்.
இப்படி தொகுதி மக்களிடம் பாராமுகம் காட்டும் ஆர்.பி.உதயகுமார், அரசியல் உள்குத்துகளில் தனித்து ஆர்வத்துடன் விளையாடிக் கொண்டிருப்பதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது என்று கூறும் அவரது நலம்விரும்பிகள், தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில், கடலூர் மாவட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திருமங்கலத்திற்கு வந்தததின் பின்னணி பற்றி வெளியாகும் தகவல்தான் அடிவயிற்றில் தீயை பற்ற வைக்கிறது என்கிறார்கள் அதிர்ச்சி கலந்த குரலில் அவர்கள்.
கேள்விக்கு காத்திராமல் அவர்களே தொடர்ந்து பேசினார்கள். கடந்த வாரத்தில் சி.வி.சண்முகம் மற்றும் கடலூர் மாவட்ட அதிமுக எம்.எல்.எ.க்கள் திருமங்கலம் வந்தனர். ஆர்.பி.உதயகுமாரின் தந்தை மரணமடைந்ததையொட்டி இரங்கல் தெரிவித்த அவர்கள், ஆர்.பி.உதயகுமாருக்கும் ஆறுதல் கூறினார்கள்.
சி.வி.சண்மும் உள்ளிட்ட கடலூர் அதிமுக நிர்வாகிகள் வருகையையொட்டி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கோயிலில் சிறப்பு பூஜைக்கும் ஆர்.பி.உதயகுமார், ஏற்பாடு செய்திருந்தார். அதில் அனைவரும் கலந்து கொண்ட போது, சி.வி.சண்முகத்துடன் தனியாக கொஞ்ச நேரம் ஆர்.பி.உதயகுமார் ரகசியம் பேசினார்.
இவர்கள் இரண்டு பேருமே, தாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் தலைமைக்கு ஒரு சரிவு என்றால் உடனடியாக அந்த தலைமையை படுகேவலமாக விமர்சனம் செய்துவிட்டு செல்வாக்கு மிக்க தலைமை பக்கம் தாவி, அரோகரா போடும் குணம் கொண்டவர்கள். இப்படிபட்ட இருவரும் தனித்து பேசிய ரகசியத்தில் ஓ.பி.எஸ்., தலை உருளப் போகிறதா? அல்லது இ.பி.எஸ்.ஸுக்கு படுகுழி தயார் ஆகிறதா ? என்று தெரியவில்லை.
அபூர்வ சகோதரர்களைப் போல காட்சியளிக்கும் சி.வி.சண்முகமும், ஆர்.பி.உதயகுமாரும் எப்போது யார் மீது பாய்வார்கள், எந்த நேரத்தில் எந்த பக்கம் தாவுவார்கள் என்றே தெரியாததால், அவர்கள் இருவரையும் நம்பி அரசியல் செய்யும் ஆதரவாளர்களான தங்களுக்குதான் ஒவ்வொரு நாளும் கலக்கமாக இருக்கிறது என்று மனம் நொந்து போய் பேசினார்கள் அவர்கள்…
போகிற போக்கில் பார்த்தால் ஆர்.பி.உதயகுமாருக்கே நிவாரண நிதி தருணும் போல…