தமிழக காங்கிரஸ் சட்டமன்றக் குழுத்தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம் செய்திருப்பது, காங்கிரஸ் முன்னணி தலைவர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற அனைத்துக்கட்சிகளிலும் சட்டமன்றக் குழுத்தலைவர் தேர்வு எந்த சிக்கலும் இன்றி உடனடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன.
ஆனால், காங்கிரஸ் கட்சியில் மட்டும் சட்டமன்றக் குழுத்தலைவர் தேர்வு, வழக்கம் போல காலதாமதமானது. இரண்டு முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூட்டியபோதும், குழுக் தலைவரை தேர்ந்தெடுக்க முடியவில்லை. இத்தனைக்கும் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்களாக மாநிலங்களை எதிர்க்கட்சித்தலைவரும், கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அறிவுரை கூறியபோதும், மூன்று முறை எம்.எல்.ஏ.வான விஜயதாரணிக்கும், பிரின்ஸுக்கும் இடையே கடும் போட்டி நடைபெற்றது.
உள் அரங்கில் இருவருக்கும் இடையே நடைபெற்ற போட்டிக்கு முன்பாகவே, சட்டமன்றத்திலேயே இருவரும் முன்வரிசையில் தலைவர்களுக்கு உரிய இடம் பிடிப்பதில் பகிரங்கமாக மோதிக்கொண்டதை தமிழகம் ஏற்கெனவே வேடிக்கை பார்த்தது.
கடைசி நிமிடம் வரை பிரின்ஸுக்கு ஆதரவாக நின்ற தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விஜயதாரணியை தவிர வேறு யாரை வேண்டுமானாலும் நியமித்துக் கொள்ளுங்கள் என்று டெல்லி மேலிட தலைவர்களிடம் தீர்மானமாக கூறிவிட்டதாகவும் தகவலும் வெளியாகியுள்ளது.
தமிழக காங்கிரஸிற்குள் நிலவி வரும் கோஷ்டிப் பூசலை பார்த்து வெறுத்துப் போன அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பாஜக.வின் வியூகத்தை கையில் எடுத்துக் கொண்டார் என்கிறார்கள் டெல்லியில் உள்ள காங்கிரஸ் முன்னணி தலைவர்கள். தமிழக பாஜக.வுக்கு தாழ்த்தப்பட்டோரை தலைவராக நியமனம் செய்தததைப் போல, தமிழக சட்டமன்றக் குழுத்தலைவர் பதவிக்கு செல்வப்பெருந்தகையை டிக் அடித்துவிட்டார்.
அவரின் முடிவுக்கு காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆலோசனையும் ஒருவகையில் உதவிகரமாக இருந்துள்ளது என்கிறார்கள் டெல்லியில் உள்ள காங்கிரஸ் முன்னணி தலைவர்கள்.
விஜயதாரணி, பிரின்ஸ், செல்வப் பெருந்தகை ஆகிய மூன்று பேருக்கு அடுத்து, கன்னியாகுமரியைச் சேர்ந்த கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாரின் பெயரையும் எல்லோரும் உச்சரித்து இருக்கிறார்கள். அவருக்கு அபரிதமான ஆதரவு இருந்ததால், அவருக்கு துணைத் தலைவர் பதவி கிடைத்துவிட்டது.
செல்வப் பெருந்தகையோடு நெருங்கிப் பழகும் மூத்த ஊடகவியலாளர்கள் ருசிகரமாக ஒரு தகவலை சொல்லுகிறார்கள். அதையும் புறக்கணித்துவிட முடியவில்லை. ஒரு இலக்கை நோக்கி செல்வப் பெருந்தகை பயணிக்க தொடங்கிவிட்டால் அதை அடையாமல் விடமாட்டார். அதற்காக எந்த விலை வேண்டுமானாலும் அவர் கொடுப்பார் என்று அவரின் மனஉறுதியை தெளிவாக எடுத்துக் கூறுகிறார்கள் அவர்கள்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இருந்து 1980 ஆம் ஆண்டில் இருந்து நான்கு தேர்தலில் வெற்றிப் பெற்ற காங்கிரஸ் மூத்த தலைவரான மறைந்த யசோதாவுக்கு, ஒருமுறை கூட சட்டமன்றக் குழுத்தலைவர் பதவி வழங்கப்படவே இல்லை. அவருக்கு துணைத் தலைவர் பதவிதான் வழங்கப்பட்டது. அதனால், அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பரிகாரம் தேடும் வகையில் அதே தொகுதியில் நின்று போட்டியிட்டு வெற்றிப் பெற்ற செல்வப் பெருந்தகையை, காங்கிரஸ் சட்டமன்றக் குழுத்தலைவராக நியமனம் செய்துவிட்டது, டெல்லி காங்கிரஸ் மேலிடம் என்கிறார்கள் தமிழக காங்கிரஸில் உள்ள முன்னணி தலைவர்கள்.
இன்றைய தேதியில் தமிழக காங்கிரஸுக்கு மிகவும் செல்வாக்கு உள்ள பகுதியாக தென்மாவட்டங்கள்தான் இருக்கிறது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய இரணடு மாவட்டங்களில்தான் அதீத செல்வாக்காக இருக்கிறது என்று கூறும் பழம்பெரும் தலைவர் ஒருவர், மாநிலம் முழுவதும் பரவலாக கட்சியின் செல்வாக்கை அதிகரிக்க, மக்களிடம் செல்வாக்குப் பெற்ற, மக்களை ஈர்க்கக் கூடிய தலைவரை தமிழக காங்கிரஸுக்கு தலைவராக நியமிக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழக காங்கிரஸ் பலம் பொருந்திய கட்சியாக உருவெடுக்கும். அந்த நிலைக்கு தமிழக காங்கிரஸை உயர்த்தினால்தான், திமுக.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் போது உரிய மரியாதை கிடைக்கும். கௌரவமான தொகுதிகளையும் பெற முடியும். இதைதான் ப.சிதம்பரம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என்றார் அவர்..
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அதற்கு வாய்ப்பு இருக்கிற மாதிரி தெரியலையே ராஜா….
கட்டுரை அருமை
-ஞானமணி