கொரோனோ முதல் அலையை விட 2 வது அலையின் தாக்கம், பொதுமக்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரோனோ தொற்று தாக்காமல் இருக்க முகக்கவசம், தனிமையில் இருத்தல் போன்ற முன்னெச்சரிக்கையுடன் இருந்தாலும், கொரோனோ கிருமி பாதிப்பிற்கு உள்ளாகி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை நாடிச் செல்பவர்களின் எண்ணிக்கை தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
குறிப்பாக சென்னையில் பாதிப்பு 6 ஆயிரம் அளவுக்கு என்ற வகையில் நாள்தோறும் கொரோனோ தொற்றுக்கு மக்கள் பாதித்து வருகின்றனர். பிற மாவட்டங்களைவிட சென்னையில் மருத்துவக் கட்டமைப்பு பலமாக இருந்தாலும்கூட, அரசு மருத்துவமனைகளில் தொற்றாளர்களுக்கு தேவையான உதவிகளை அரசு நிர்வாகம் உடனுக்குடன் நிறைவேற்றி வந்தாலும், சிறியளவிலான உதவிகள் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தனித்த சிறப்பு கொண்டது, கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டியூட் மருத்துவமனைதான். கொரோனோ தொற்றுக்கு சிறப்பான மருத்துவ சேவை வழங்குவதற்கு என்றே குறுகிய காலத்தில் இந்த மருத்துவமனை உருவாக்கப்பட்டது.
ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, ஒமந்தூரார் அரசு சிறப்பு மருத்துவமனையைவிட, கிண்டியில் உள்ள கிங் மருத்துவமனையில் அதிநவீன வசதிகள் இருப்பதால், இங்கு சிகிச்சைப் பெறும் தொற்றாளர்கள் நிம்மதியுடன் சிகிச்சைப் பெற்று, விரைவாக குணமடைந்து வீடு திரும்புகிறார்கள்.
அந்த வகையில், மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் நாராயணசாமி, தனிக் கவனம் செலுத்தி, தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருபவர்களுக்கு மன தைரியம் வழங்கி, உற்சாகமாக பேசி, துளியும் பயம் இன்றி சிகிச்சை காலம் முழுவதும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார் என்று பூரண நலமடைந்து வீடு திரும்புவோர் புகழ்ந்து பேசுகிறார்கள்.
இப்படி தொற்றாளர்களை நோய் பாதிப்பிற்குரியவர்களாக கருதாமல், சகோதர, சகோதரி பாசத்துடன் டீன் மருத்துவர் நாராயணசாமி தலைமையில் மருத்தவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கவனித்துக் கொள்ளும் கிங் மருத்துவமனைக்கு சென்னை வேளச்சேரி லயன்ஸ் கிளப், 23 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய தேநீர் தூள், சத்துபானம், மூலிகைப் பொருள் உள்ளிட்டவற்றை நன்கொடையாக வழங்க முன்வந்தது.
கிங் மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் நாராயணசாமியோடு ஆலோசனை நடத்தி தொற்றாளர்களுக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்யும் பொறுப்பை ஆர்வமுடன் ஏற்று சிறப்பாக செய்தார் இந்த திட்டத்தின் தலைவரான லயன்ஸ் ராஜா.
உயிர்க்கொல்லி நோயான கொரோனோ தாக்குதலுக்கு பயந்து பெரும்பான்மையான மக்கள் வீடுகளுக்குள்யே பதுங்கி கொண்டிருக்கும் இந்தநேரத்தில் தங்களுடைய உயிரைப் பற்றி துளியும் கவலைப்படாமல், பொதுச்சேவையில்தான் மனித சமுதாயத்தின் மகத்துவம் இருக்கிறது என்ற லட்சியத்தோடு வேளச்சேரி லயன்ஸ் கிளப் தலைவர் லயன் தேவநாதன் தலைமையில் திட்ட தலைவர் ராஜா, முதன்மை உறுப்பினர்கள் லயன் செல்வக்குமார், லயன் சித்தார்த்தன், லயன் ஹரிகரன் ஆகியோர் உதவிப் பொருள்களை எடுத்துச் சென்று கிங் மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் நாராயணசாமியிடம் ஒப்படைத்தனர்.
சேவையுள்ளத்தோடு மனமுவந்து உதவி புரிந்த லயன் கிளப் வேளச்சேரி நிர்வாகிகளை வெகுவாக பாராட்டினார் கிங் மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் நாராயணசாமி. மேலும், கொரோனோ தொற்றாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சை முறைகளையும் எடுத்து கூறி, கொரோனோ தொற்று பரவலை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வருவதற்கு விழிப்புணர்வு பிரசாரத்தை பொதுமக்களிடம் லயன் கிளப் மூலம் மேற்கொள்ளுமாறு லயன் தேவநாதன் தலைமையிலான நிர்வாகிகளுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்தார் முதல்வர் மருத்துவர் நாராயணசாமி…