Sat. Nov 23rd, 2024

தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்…

அரசியலில் அடுத்தடுத்த உயரத்தை எட்ட அயோக்கியத்தனம்தான் முதலீடு என்பதற்கு சிறந்த உதாரணமாக அதிமுக முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதியை சொல்லலாம் என்று மனம் வெறுத்து போய் கொதிக்கிறார்கள் சேலம் மேற்கு மாவட்ட திமுக முன்னணி நிர்வாகிகள். அவர்களைவிட ஆவேசமாக பொங்குகிறார்கள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த சமுதாயத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள். கடந்த ஒருவாரமாக சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமுதாயத்தைச் சேர்ந்த தொழில் அதிபர்கள் ஒன்றிரண்டு பேர் வாட்ஸ் அப் காலில் மாறிமாறி பொங்கிய விவகாரங்கள், அத்தனையும் டி.எம்.செல்வகணபதியின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டுவதாகவே அமைந்திருக்கிறது.
கொங்கு சமுதாயத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் கொட்டிய எரிமலை வார்த்தைகளின் சூட்டை தாங்க முடியவில்லை.


சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரத்தில், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்களில் ஒருவரான கான்ட்ராக்டர், அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை எடுத்து பணிகளை துவங்கி இருந்தார். தேர்தல் முடிந்து ஆட்சி மாறிவிட்டால், செய்த பணிகளுக்கு பணம் பெற முடியாது என்பதால், எடப்பாடி பழனிசாமியை அணுகி, ஒப்பந்தத்திற்கு அதிகாரப்பூர்வமான டென்டர் உத்தரவு பெற்று தரும்படி கேட்டுள்ளார். அப்போது, ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தத்திற்கான மூன்று இலக்க கமிஷனை வை. டென்டர் ஆர்டர் கிடைக்கும் என்று கறாராக சொல்லி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.


70 சதவீத பணிகளை முடித்திருந்த நிலையில், இ.பி.எஸ். உறவினரிடம் அந்த நேரத்தில் கமிஷன் பணம் இல்லை. கமிஷன் தொகை முழுவதையும் வைத்தால்தான் டென்டர் ஆர்டர் கிடைக்கும் என நெருக்கடி கொடுக்க அலறியடித்தபடி, மூன்று இலக்க தொகையை மிகவும் சிரமப்பட்டு திரட்டி கொடுத்துவிட்டு சென்னையில் இருந்து நாமக்கல் திரும்பியிருக்கிறார் இ.பி.எஸ்.ஸின் நெருங்கிய உறவினரான கான்ட்ராக்டர். எடப்பாடி பழனிசாமியின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் துணை நின்ற தன்னையே பதம் பார்த்ததை அந்த கான்ட்ராக்ட்ரால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. அதனால், எடப்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் எடப்பாடி பழனிசாமியை எப்படியாவது தோற்கடித்தே தீர வேண்டும் என வெறியோடு திமுக வேட்பாளர் அறிவிப்புக்காக காத்திருந்தார்.

இந்த இடத்தில் சின்ன பிளாஷ் பேக்..

எடப்பாடி பழனிசாமி அரசியலில் நுழைந்து பெரியளவில் செல்வாக்கு பெற்று இருக்காத காலக்கட்டம் அது. அப்போது சேலத்தில் மிகவும் பிரபலமான தனியார் பேருந்து முதலாளியான சண்முகம் என்பவர். 3007 என்ற எண் கொண்ட பேருந்துகளை சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இயங்கி கொண்டிருந்தார். (இப்போதும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன) மேலும், சங்ககிரி அருகே கல்லூரி ஒன்றையும் நடத்தி வருகிறார். இ.பி.எஸ். சமுதாயத்தைச் சேர்ந்தவர். அதனால், தனது மகன் மிதுனுக்கு , சண்முகத்தின் மகளை திருமணம் செய்து வைக்குமாறு சண்முகத்திடம் கேட்கிறார் எடப்பாடி பழனிசாமி. அரசியல்வாதி குடும்பத்தில் திருமண பந்தம் கொள்வதற்கு சண்முகத்திற்கு விருப்பம் இல்லை. அதனால், இ.பி.எஸ். மகனுக்கு பெண் தர மறுத்துவிடுகிறார்.

அந்த பகையை, நெஞ்சுக்குள்ளேயே புதைத்து வைத்துக் கொண்டு முதல்வராக பதவியேற்ற சிறிது காலத்திலேயே சண்முகத்தை தேவையில்லாத வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கும் அளவுக்கு சதிராட்டம் ஆடி விடுகிறார் அப்போதைய முதல்வர் இ.பி.எஸ்.

சண்முகம் சிறையில் அடைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட நிகழ்வை கொங்கு சமுதாயத்தைச் சேர்ந்த தொழிலதிபர்களில் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால், எடப்பாடி பழனிசாமியை பழி வாங்க, சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். மேலும், திமுக.வுக்கு ஆதரவாக தேர்தல் வேலை பார்க்க 20 கோடி ரூபாய் அளவுக்கு தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளிடம் இருந்து திரட்டி தயாராக வைத்திருந்திருக்கிறார்கள்.

இந்த நேரத்தில், ஐந்து பைசாவுக்கு பிரயோசனம் இல்லாத சம்பத்குமார் என்பவர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த கொங்கு தொழிலதிபர்கள், எடப்பாடி தொகுதி மக்களிடம் மட்டுமல்ல, திமுக நிர்வாகிகளிடம் கூட அறிமுகம் இல்லாத சின்னப் பையன் ஒருவரை எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எப்படி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் என்பதை விசாரித்துள்ளனர். அப்போதுதான், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளரான டி.எம்.செல்வகணபதி எடப்பாடி பழனிசாமியிடமே விலை போன விவகாரமே தெரிய வர, அவர்கள் அதிர்ச்சியடைந்து விடுகிறார்கள்.

கடந்தாணடு இதே மாதத்தில் கொரோனோ உச்சத்தில் இருந்த போது அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மாநிலம் முழுவதும் இருந்த எதிர்ப்பு அலைபோலவே, எடப்பாடி தொகுதியிலும் கனன்று கொண்டிருந்தது. இதனால், சேலம் மேற்கு தொகுதிக்கு மாறி போட்டியிடலாமா என்று இ.பி.எஸ். ஆலோசித்துள்ளார். இதுதொடர்பாக, அப்போதே தொகுதி மாறுகிறார் எடப்பாடி பழனிசாமி என்று ஊடகங்களிலும் பரவலாக செய்தி வந்தது.

அந்த நேரத்தில்தான் சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இளங்கோவன் மூலம் டி.எம்.செல்வகணபதிக்கு வலை வீசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக கூட்டணிக்கு பாமக வந்தால், எடப்பாடியில் எளிதாக வெற்றிப் பெற்றுவிடலாம் என கணக்குப் போட்ட இ.பி.எஸ்., கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெறும் வாக்கு வித்தியாசத்தைவிட தான் அதிகமாக பெற வேண்டும். அப்போதுதான் அதிமுக.வில் தனது செல்வாக்கு நிலைத்து நிற்கும் என்று தீர்மானித்து, இரட்டை இலக்க கோடிகளில் பணம் கைமாறுகிறது.

இரண்டு விதமான சதித்திட்டத்திற்கு அந்த பணம் வழங்கப்படுகிறது. ஒன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் இ.பி.எஸ். ஜெயிக்க வேண்டும். சேலம் மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட திமுக ஜெயிக்கக் கூடாது என்று இ.பி.எஸ்.ஸும், இளங்கோவனும் சேர்ந்து டி.எம்.செல்வகணபதியிடம் சத்தியம் வாங்கி விடுகிறார்கள்.

அதிமுக ஜெ.பேரவைச் செயலாளர் ஆர்.இளங்கோவன்…

எடப்பாடி பழனிசாமியிடம் விலைபோன டி.எம்.செல்வகணபதி, அவருக்கு ஒதுக்கப்பட்ட சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர் ஆகிய மூன்று தொகுதிகளிலும் திமுக நிர்வாகிகளிடமே செல்வாக்கு இல்லாத நபர்களை வேட்பாளர்களாக நிறுத்துகிறார். அதுவும் சங்ககிரி தொகுதியில் வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ள போது, இ.பி.எஸ். சமுதாயத்தைச் சேர்ந்த ராஜேஷை திமுக வேட்பாளராக களம் இறக்க காய் நகர்த்தி சாதித்து விடுகிறார்.

தனக்கு ஒதுக்கப்பட்ட 3 தொகுதிகளிலும் அதிமுக. வெற்றியை உறுதி செய்துவிட்ட திருப்தியில், கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கத்தை கைக்குள் போட்டு அவரது பொறுப்பில் உள்ள ஏற்காடு, கெங்கவள்ளி, ஆத்தூர் ஆகிய மூன்று தொகுதிகளிலும் திமுக தோற்கும் அளவுக்கு அன்டர்கிரவுண்டில் வேலை பார்த்துவிடுகிறார், டிஎம்எஸ்.
இதையெல்லாம் தங்களுக்கு உள்ள தொழில் தொடர்புகள் மூலம் உறுதி செய்து கொள்ளும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கொங்கு தொழிலதிபர்கள் தலையில் அடித்துக் கொள்கிறார்கள்.

சொந்த சாதியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமியை தாங்களே தோற்கடிக்க சபதம் போட்டும், கோடிக்கணக்கில் பணத்தையும் திரட்டி வெறித்தனமாக இருக்கும் போது, பணத்திற்கு சோரம் போகிற டி.எம்.செல்வகணபதியை மட்டுமே நம்பி விட்டாரே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்று புலம்புகிறார்கள் அவர்கள். எடப்பாடி பழனிசாமி காலில் போய் விழுந்துவிட்டாரே டி.எம்.செல்வகணபதி என்று வெளிப்படையாக அப்போதே பேசியும் இருக்கிறார்கள் கொங்கு தொழிலதிபர்கள் சிலர்.

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில், சேலத்தில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே திமுக வெற்றிப் பெற்றுவிடுகிறது. சேலம் வடக்கு தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ.வும் சேலம் மத்திய மாவட்டச் செயலாளருமான வழக்கறிஞர் ஆர்.ராஜேந்திரன் மட்டும் வெற்றிப் பெற்றதை கண்டு ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று விடுகிறார் எடப்பாடி பழனிசாமி.

கோடிக்கணக்கில் விலைபேசி பணம் கொடுத்ததற்கு பலனாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விட கிட்டதட்ட ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்நிருந்தாலும் கூட, கோவை மாவட்டத்தில் அப்போதைய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோடிக்கணக்கில் பணத்தை இரைத்து திமுக நிர்வாகிகளை விலைக்கு வாங்கி, மொத்த தொகுதிகளையும் அள்ளியதைப் போல, தன்னுடைய மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற முடியவில்லையே என்ற கோபத்தில் டி.எம்.செல்வகணபதியை சகட்டு மேனிக்கு ஆபாசமாக திட்டி தீர்க்கிறார்.


இ.பி.எஸ்.ஸின் சீற்றத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சியாகி விடுகிறார் டி.எம்.செல்வகணபதி. அவரது எண்ணமே, சட்டமன்றத் தேர்தலில் திமுக ஜெயித்து ஆட்சியைப் பிடிக்காது. மீண்டும் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வராக பதவியேற்பார். அவர் மூலம் மத்திய பாஜக அரசிடம் பேசி, உச்சநீதிமன்றத்தில் தனக்கு எதிரான சுடுகாட்டு கூரை ஊழல் மேல்முறையீட்டு வழக்கில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என கணக்குப் போட்டுதான் அதிமுக. வெற்றிக்கு மறைமுகமாக உழைத்திருக்கிறார். ஆனால், அதிமுக ஆட்சியை இழந்தது ஒருபக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்த, மற்றொரு புறம் தன்னை விட ஜூனியரான அமைச்சர் செந்தில் பாலாஜியை சேலம் மாவட்டத்திற்கு நியமித்து தனது அரசியல் தில்லுமுல்லுகளுக்கு செக் வைக்கிறதோ திமுக தலைமை என பீதி அடைந்திருக்கிறார் டி.எம்.செல்வகணபதி.


சேலம் மாவட்டத்தில் திமுக.வுக்கு ஏற்பட்ட படுதோல்வி குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ரகசிய விசாரணை நடத்தியதில், எடப்பாடி பழனிசாமியிடம் டி.எம்.செல்வகணபதி விலை போனதை கொங்கு தொழில் அதிபர்கள் புட்டு புட்டு வைக்கிறார்கள். திமுக.வுக்கு தான் இழைத்த துரோகங்கள் எல்லாம் திமுக தலைமைக்கு எட்டிவிட்டதை கண்டு பதற்றத்தில் இருக்கும் டி.எம்.செல்வகணபதி, எப்படியும் திமுக தலைமை தன்னை தண்டித்துவிடும் என பயந்து போய், சேலம் மேற்கு மாவட்டத்தில் உள்ள மூன்று ஒன்றியச் செயலாளர்களை பலி கொடுக்க சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தார்.

இந்த நேரத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கான அழைப்பு வந்தவுடன், அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் முன்பாக, எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மூன்று ஒன்றியங்கனான கொங்கனாபுரம், எடப்பாடி, நங்கவள்ளி ஆகிய மூன்று திமுக செயலாளர்களையும் மாற்றிவிட்டு, தனது ஆதரவாளர்களை அந்த பதவிகளில் நியமிக்க சதித்திட்டம் தயாரிக்கிறார். அதற்கு பகடைக்காயாக சங்ககிரி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ராஜேஷை, கடந்த 24 ஆம் தேதி சங்ககிரிக்கே சென்று நள்ளிரவில் சந்தித்துப் பேசுகிறார் டி.எம்.செல்வகணபதி.

சட்டமன்றத் தேர்தலில் ஒன்றியச் செயலாளர்கள், மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் ஆகியோர் தேர்தலில் சரியாக வேலை பார்க்கவில்லை என்று திமுக தலைமைக்கு புகார் எழுதி தரும்படி ராஜேஷிடம் கடிதம் பெற்றுக் கொண்டு சென்னைக்கு புறப்படுகிறார் டி.எம்.செல்வகணபதி.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கிடைத்த சில நொடிகளில், கட்சி விஷயமாக பேச அனுமதி கேட்கிறார். டி.எம்.செல்வகணபதியின் குள்ளநரித்தனத்தை முழுமையாக அறிந்து வைத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரின் முகத்தை கூட ஏறிட்டு பார்க்காமல் பொதுச் செயலாளர் துரைமுருகனை பார் என்று கூறி விடுகிறார். திமுக தலைவரிடமே அவமானப்பட்ட பிறகும் கூட, சுயவுணர்வோடு நடந்து கொள்ளாமல் பொதுச் செயலாளர் துரைமுருகனை அவரது இல்லத்தில் சந்தித்து புகார் மனுவை நீட்டுகிறார்.

கே.என்.பி.நல்லதம்பி, எடப்பாடி திமுக ஒன்றியச் செயலாளர்…

முறுக்கு மீசையுடன் எப்போதுமே கம்பீரமாக நடந்து பழக்கம் உடைய டி.எம்.செல்வகணபதி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்வதைப் போல, காலணிகளை கழற்றிவிட்டு, கூனி குறுகி நின்று அமைச்சர் துரைமுருகனிடம், 3 திமுக ஒன்றியச் செயலாளர்களுக்கு எதிரான புகார் பட்டியலை வாசிக்கிறார் டி.எம்.செல்வகணபதி.
அந்த நிமிடத்திலேயே தகவல் சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு எட்டிவிடவே, டி.எம்.செல்வகணபதியின் துரோகத்தால் மூன்று தொகுதிகளையும் அதிமுக.விடம் பறிகொடுத்த கோபத்தில் இருந்து வரும் திமுக நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து, அவருக்கு எதிராக போர்க் கொடிகளை தூக்கி விட்டார்கள்.

கே.எம்.ரவிச்சந்திரன், நங்கவள்ளி ஒன்றியச் செயலாளர்…


டி.எம்.எஸ் கொடுத்த புகார் பட்டியலில் எடப்பாடி ஒன்றியச் செயலாளர் கே.என்.பி.நல்லதம்பி, நங்கவள்ளி ஒன்றியச் செயலாளர் கே.எம்.ரவிச்சந்திரன், கொங்கனாபுரம் ஒன்றியச் செயலாளர் பரமசிவம் ஆகியோர் பெயருடன் இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன் பெயரும் இடம் பெற்றிருக்கிறது. இந்த மணிகண்டனின் கட்சி விசுவாசம் பற்றி ஏற்கெனவே நல்லரசுவில் விலாவாரியாக எழுதியிருக்கிறோம்.

https://nallarasu.com/archives/11144


பரமசிவம் ஐந்து முறையும், கே.எம்.ரவிச்சந்திரன் 3 முறையும் ஒன்றிய செயலாளர்களாக இருக்கிறார்கள். கட்சி மாறாமல் பாரம்பரிய திமுக. குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள். இதேபோல எடப்பாடி ஒன்றியச் செயலாளராக உள்ள கே.என்.பி. நல்லதம்பியும் பாரம்பரிய திமுக. குடும்பத்தை சேர்ந்தவர்தான்.

பி.பரமசிவம், கொங்கனாபுரம் திமுக ஒன்றியச் செயலாளர்…

சட்டமன்றத் தேர்தலில் திமுக.வுக்கு முழுக்க, முழுக்க துரோகம் இழைத்தது டி.எம்.செல்வகணபதிதான் என்பதை பல்வேறு ஆதாரங்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், பணத்திற்காக எதையும் செய்வார் டி.எம்.செல்வகணபதி என்பதை மட்டும் ஜீரணிக்க முடியாமல் இருந்திருக்கிறார் திமுக தலைவர். அந்தநேரத்தில், டி.எம்.செல்வகணபதிக்கு எதிராக மற்றொரு பஞ்சாயத்து அண்ணா அறிவாலயத்தில் நடந்த போது தருமபுரி திமுக எம்.பி. மருத்துவர் செந்தில்குமார், டி.எம்.செல்வகணபதியின் கேவலமான குணத்தை விவரித்துள்ளார்.

தருமபுரி நாடாளுமன்றத் தேர்தலின்போது பொறுப்பாளராக வந்த டி.எம்.எஸ்., தன்னிடம் இருந்தே ஒரு கோடி ரூபாயை ஆட்டையை போட்டு விட்டார் என்று புலம்பியிருக்கிறார். மாவட்டம் விட்டு மாவட்டம் சென்ற போதும் பண விஷயத்தில் நேர்மையாக நடந்து கொள்ளாதவர் டி.எம்.செல்வகணபதி என்பதை அறிந்து கோபப்பட்ட திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து டி.எம்.செல்வகணபதியை தூக்கியடியுங்கள் என்று ஆவேசமாக கூறியுள்ளாராம்.

தருமபுரி திமுக எம்.பி. மருத்துவர் செந்தில்குமார்….


இப்படிபட்ட நேரத்தில்தான், தன்னை காப்பாற்றிக் கொள்ள, திமுக.வுக்காக சொத்து பத்துகளை எல்லாம் இழந்து கட்சிப் பணியாற்றிக் கொண்டிருக்கும் மூன்று ஒன்றியச் செயலாளர்களையும், மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளரையும் பலி கொடுக்க துணிந்துவிட்ட டி.எம்.செல்வகணபதியின் மற்றொரு முகத்தையும் போட்டு உடைத்தார்கள் சேலம் திமுக நிர்வாகிகள்.
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கு தண்டனையில் இருந்து தப்பிக்க, பாஜக.வில் சேரும் முடிவுக்கு வந்துவிட்டார் டி.எம்.செல்வகணபதி என்று மற்றொரு அதிர்ச்சித் தகவலை போட்டு உடைக்கிறார்கள்.

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக.வுக்கு விசுவாசமாக நடந்து கொண்ட போதும் இ.பி.எஸ்., தனக்கு உதவ மறுத்துவிட்டதால், திருநெல்வேலிக்கே சென்று அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாஜக சட்டமன்றக் குழுத் தலைவருமான நயினார் நாகேந்திரனை பார்த்து, பாஜக.வுக்கு தாவும் விருப்பத்தை தெரிவித்துள்ளார். அவருக்காக பாஜக மேலிடத்தில் பேசியிருக்கிறார் நயினார் நாகேந்திரன். சாதகமான பதில் வந்த அதேநேரத்தில், டெல்லியில் இருந்து சொன்ன மற்றொரு தகவலை கேட்டுதான் அதிர்ச்சியாகியிருக்கிறார் டி.எம்.செல்வகணபதி.

3 இலக்க எண்ணிக்கையில் கோடிகள் வேண்டும் என்ற டெல்லி தகவலை கேட்டு அதிர்ச்சியாகிதான், யார் காலில் விழுந்தாவது திமுக.விலேயே நீடிக்கப் பார்ப்போம் என்று அலைந்து கொண்டிருக்கிறார் டி.எம்.செல்வகணபதி.

ஆனால், அவரை எப்படியும் பாஜக.வுக்கு இழுத்துவிட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்ட நயினார் நாகேந்திரன், 1991 ஆம் ஆண்டில் அமைச்சராக இருந்த போது டி.எம்.செல்வகணபதி, சென்னையில் உள்ள தனது ஹோட்டலில் ஒரு பிரச்னை ஏற்பட்டபோது அதில் இருந்து தப்பிக்க உதவி செய்ததற்கு நன்றிக்கடனாக டி.எம்.செல்வகணபதிக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியில் இருந்து எப்படியாவது காப்பாற்றி காவித்துண்டை டி.எம்.செல்வகணபதியின் கழுத்தில் போட்டுவிட வேண்டும் என்று காய் நகர்த்தி வருகிறார். அப்படிபட்ட சுபமுகூர்த்த நாள் என்றைக்கு என்பதுதான் மர்மாக இருக்கிறது,அபபடிபட்ட ஒரு மகிழ்சசிக்குரிய நிகழ்வு உண்மையிலேயே நடந்தால், சேலம் மாவட்ட திமுக.வை பீடித்திருக்கும் சனி விலகிவிட்டது என்று பட்டாசு கொளுத்துவோம் என்கிறார்கள் டி.எம்.எஸ்.ஸுக்கு நெருக்கமான நலம் விரும்பிகள்..

வினை விதைத்தவன் வினை அறுப்பான்.. தினை வினைத்தவன் தினை அறுப்பான்.. கேவலப்படுவதைத் தவிர வேறு வழியில்லை டி.எம்.செல்வகணபதிக்கு இப்போதைக்கு….