Mon. May 20th, 2024

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசுமுறைப் பயணமாக நாளை சேலம் செல்கிறார். காவிரி டெல்டா பகுதியில் குறுவை சம்பா சாகுபடி பணிகளுக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் வரலாற்று நிகழ்வில் முதல்முறையாக முதல்வர் பங்கேற்கிறார். அவரின் வருகையையொட்டி, சேலம் மாவட்டமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. காவல்துறையில் உள்ள உயர் அதிகாரிகளான ஐ.ஜி, டி.ஐ.ஜி., சேலம் எஸ்.பி என பெரும் பட்டாளமே மேட்டூரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வுச் செய்து கொண்டிருக்கின்றது. இந்த நேரத்தில், மேட்டூரில் இருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொளத்தூர் காவல் நிலையத்தில், கர்நாடகாவில் இருந்து மதுபான பாட்டில்களை கடத்தி வந்தவர்களை கைது செய்யலாமா? காதும் காதும் வைத்தமாதிரி விடுதலை செய்துவிடலாமா? என்ற பஞ்சாயத்தில் அங்குள்ள காவல் அலுவலர்கள் மண்டையை பியத்துக் கொண்டிருக்கிறார்கள்.

முதல்வர் வருகையொட்டி, காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகமாக இருக்குமே என்ற கவலையில்லாமல், கர்நாடகாவில் இருந்து சட்டவிரோதமாக மதுபானப் பாட்டில்களை கடத்தி வரும் துணிச்சல் யாருக்கு வரும்? மண்டையை பியத்துக் கொள்கிறீர்களா.?.. வழக்கமாக எல்லோரும் சந்தேகப்படும் பதில்தான். ஆளும்கட்சியைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர் மிதுன் சக்கரவர்த்தி என்பரை நோக்கிதான் கொளத்தூர் மக்கள் கையை நீட்டுகிறார்கள்.

மிதுன் சக்கரவர்த்தி…

அதிமுக.முன்னாள் அமைச்சரும், தற்போதைய சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான டி.எம்.செல்வகணபதியின் உறவினரான மிதுன் சக்கரவர்த்தி, இளைஞர் என்பதால், அவரைச் சுற்றி எப்போதுமே இளம் பட்டாளம் ஒன்று சுற்றிக் கொண்டிருக்கிறது. அந்த இளைஞர்களில் ஒருசிலர்தான், ஊரடங்கு காலம் அறிவிக்கப்பட்ட நாள் முதலாக கர்நாடகாவில் இருந்து மதுபானங்களை வாங்கி, காவிரி ஆற்றில் பரிசல் மூலம் கொளத்தூர் பகுதிக்கு கடத்தி வருவதை வழக்கமாக கொண்டு வருகிறார்கள்.

நாள்தோறும் இந்த கடத்தல் நடைபெற்று வந்தாலும் கூட, மிதுன் சக்கரவர்த்தியின் ஆட்கள், அதுவும் ஆளும்கட்சியான திமுக.வைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுக்கு எதிராக கொளத்தூர் காவல்துறை நடவடிக்கை எடுக்க தயங்கி வருகிறது. ஆனால், மேட்டூரில் உள்ள சமூக ஆர்வலர்கள், காவல்துறை உயரதிகாரிகளுக்கு புகார் அனுப்பியதையடுத்து, பெயரளவுக்கு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதுவரை இரண்டு முறை கடத்தல் கும்பல்களை வளைத்துப் பிடித்து மதுபானங்களை கொளத்தூர் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.

ஆனால், கடத்தலின் மூனையாக இருக்கும் ஆளும்கட்சி நிர்வாகிகளை கைது செய்வதற்கு பயப்படும் காவல்துறையினர், கைப்பற்றும் மதுபானப் பாட்டில்களை திரும்ப கடத்தல் கும்பலிடமே திரும்ப ஒப்படைத்து விடுவதாகவும் பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.

மதுபானக் கடத்தலில் திமுக.வைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதை டி.எம்.செல்வகணபதியின் கவனத்திற்கும் காவல்துறை கொண்டு சென்றதாகவும், ஆனால், மதுபானக் கடத்ததில் ஈடுபடுவோரை கண்டு கொள்ள வேண்டாம் என்று டி.எம்.எஸ் ஸே கூறிவிட்டதாகவும் சேலம் மாவட்ட திமுக.வில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் அதிர்ச்சியுடன் கூறுகிறார்கள்.

கொளத்தூர், மேட்டூர் என உள்ளூரிலேயே கடத்தல் மதுபானங்களை விற்றுக் கொண்டிருந்தவர்கள், அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு, 50 மைல்கள் கடந்து சேலம் நகரத்திற்கும், ஈரோடு மாவட்டத்திற்கும் கொண்டு செல்ல துணிந்துவிட்டனர். மதுபானக் கடத்தல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் அளவிற்கு விரிவடைந்தவுடன், உயர்மட்ட அளவிலான காவல்துறை அதிகாரிகள், கொளத்தூர் காவல் நிலைய அதிகாரிகளை கடுமையாக கண்டித்திருக்கிறார்கள்.

மேல் அதிகாரிகளின் கண்டிப்பால் ஆடிப்போன கொளத்தூர் காவல்துறை அதிகாரிகள், கடந்த 10 நாள்களில் இரண்டு முறை மதுபானக் கடத்தலில் ஈடுபட்டவர்களை மடக்கி பிடித்து கைது செய்திருக்கிறார்கள். இளம் வயதுடைய அந்த நபர்களும், கொளத்தூர் திமுக ஒன்றியச் செயலாளரான மிதுன் சக்கரவர்த்தியின் சொந்த ஊரான செட்டிப்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் ஊர்ஜிதமாகியிருக்கிறது. செட்டிபட்டி கிராமம், காவிரி ஆற்றையொட்டி இருப்பதால், அங்கிருந்து பரிசல் மூலம் காவிரி ஆற்றில் பயணித்து கர்நாடகா சென்று மதுபானப் பாட்டில்களை வாங்கி வருவதும் காவல்துறையினரின் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


நாள்தோறும் லட்சக்கணக்கில் மதுபானங்களை வாங்கி வருவதற்கு இளைஞர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று விசாரித்தபோதுதான், திமுக ஒன்றியச் செயலாளர் மிதுன் சக்கரவர்த்தியை கடத்தல்காரர்கள் கைகாட்டி இருக்கிறார்கள். அதைக்கேட்டு காவல்துறையினர் அதிர்ந்து போய்விட்டனர். டி.எம்.செல்வகணபதியின் தூரத்து உறவினராக கூறப்படுவதுடன், சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக டி.எம்.செல்வகணபதி நியமிக்கப்பட்ட பிறகுதான், மிதுன் சக்கரவர்த்திக்கு ஒன்றியச் செயலாளராக பதவி வழங்கப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்திருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் நாளை மேட்டூர் வருவதால், ஒட்டுமொத்த காவல்துறையும் மேடூரில் குவிந்துவிடும் என்று முன்கூட்டியே யூகித்து, இன்றைய தினம் குறைந்தது 50 லட்சம் ரூபாய் அளவுக்கு கர்நாடக மதுபானங்களை ஈரோடு, திருப்பூர், நாமக்கல் ஆகிய அண்டை மாவட்டங்களுக்கு கடத்த திட்டம் போட்டு பெரும் கூட்டமே இறக்கிவிடப்பட்டுள்ளது.

ஆனால், காவல்துறையினரின் முனைப்பான நடவடிக்கையால், இன்று காலையிலேயே கடத்தல்காரர்களை குறி வைத்து மடக்கப்பட்டிருக்கிறார்கள். கடத்தலில் தொடர்புடைய மூன்று பேரிடம் கொளத்தூர் காவல்துறையினர் தற்போது (இன்றைய பகல் 1.47 மணியளவில்) விசாரணை நடத்தி வருகிறார்கள். எத்தனை பேரை கைது காட்டுவார்கள்? எவ்வளவு கடத்தல் மதுபானப் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது? என்று உண்மையான கணக்கு காட்டுவார்களா? சட்டவிரோத மதுபானக் கடத்தலுக்கு துணைபுரிந்து கொண்டிருக்கும் திமுக ஒன்றியச் செயலாளர் மிதுன் சக்கரவர்த்தியை கைது செய்வார்களா? என்பதெல்லாம் காவல்துறைக்கே வெளிச்சம் என்று ஆதங்கத்தோடு குரல் கொடுக்கிறார்கள் மேட்டூரில் உள்ள சமூக ஆர்வலர்கள்…

மதுபானக் கடத்தலில் திமுக ஒன்றியச் செயலாளர் மிதுன் சக்கரவர்த்திக்கு உள்ள தொடர்பு குறித்து கொளத்தூரில் உள்ள திமுக கூட்டணியில் உள்ள அரசியல்கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினரே ஆவேசமாக பேசி வரும் இந்த நேரத்தில்கூட, காவல்துறையையே மிரட்டும் வகையில், கொளத்தூரில் தனது விசுவாசிகள் யார் யார் சந்து கடை வைத்து மதுபானங்களை விற்பனை செய்து வருகிறார்கள் என்று அவர்களது பெயரை துண்டுச் சீட்டில் எழுதி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று கூறி திமுக பிரமுகர் ஒருவரை கொளத்தூர் காவல்நிலையத்திற்கே அனுப்பி வைத்திருக்கிறாராம் மிதுன் சக்கரவர்த்தி…

ஆளும்கட்சின்னா சும்மாவா… மிதுன் சக்கரவர்த்தி தில்லு யாருக்கு வரும்… எல்லாம் டி.எம்.எஸ். செல்வகணபதி பார்த்துக் கொள்வார் என்ற தைரியத்தை விட வேறு என்னவாக இருக்கும்….

One thought on “மதுபானம் கடத்தலில் திமுக ஒன்றியச் செயலாளர்? டி.எம்.செல்வகணபதி உறவினருக்குச் சிக்கல்… முழிபிதுங்கும் கொளத்தூர் காவல்துறை”

Comments are closed.