திமுக ஆளும்கட்சியாக அரியணையில் அமர்ந்து 50 நாட்கள் கடந்துவிட்ட பிறகும் தமிழ்நாடு முழுவதும் ஆளும்கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் எந்த வம்பு தும்புக்கும் போகாமல் அடங்கி வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல பிரதான எதிர்க்கட்சியான அதிமுக.வும், திமுக வலையில் தானாக போய் விழுந்து கொள்ளக் கூடாது என்ற எச்சரிக்கையுணர்வுடன் சரியான சந்தர்ப்பத்திற்காக காத்து நிற்கிறார்கள். ஆனால், இரண்டான் கெட்டானான பா.ம.க., இப்போதே ஆட்டத்தை தொடங்கிவிட்டதைக் கண்டு ஆளும்கட்சியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள், காதில் புகை பொங்கி வர சிவந்த கண்களோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு ஆளும்கட்சியான திமுக அறிவிப்பு வெளியிட்டவுடனேயே முதல் ஆளாக பொங்கியவர் பா.ம.க.நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்
. அவரைப் போலவே அவரது புதல்வரும் இளைஞரணி தலைவருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸும், கடந்த 14 ஆம் தேதி டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறப்புக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. மருத்துவர் அன்புமணி ராமதாஸும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்தகொண்டு திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று முழக்கம் எழுப்பினார்.
அவரைப் போலவே சேலத்தில் பாமக எம்.எல்.ஏ.வும் அக்கட்சியின் துணைச் செயலாருமான அருணும், மதுபானக் கடைகளை மூடக் கோரி, ஆர்ப்பாட்டத்தில் வீரமாக பொங்கினார். ஆனால், பத்து நாட்கள் கூட ஆகவில்லை. முதல் ஆளாக, அவரது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையொட்டியுள்ள பகுதிகளில் பார் நடத்தும் பொறுப்பை தனது விசுவாசிகளுக்கு வழங்க வேண்டும் என்று சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் மிரட்டும் தொணியில் கூறியிருக்கிறார்
.அதுபோலவே, ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளில் இருந்தும் மாமூல் வசூலிப்பதற்கு தனது தொண்டர் படையை களமிறக்கி விட்டுள்ளார். அவரது சிஷ்ய கோஷ்டியினர் ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளாக ஏறி இறங்கி இனிமேல், தினசரி கப்பத்தை அண்ணன் பாமக எம்.எல்.ஏ. அருளுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும் மிரட்டத் தொடங்கி விட்டார்கள். மேலும், தாகம் எடுக்கும்போதெல்லாம் கடைக்கு வரும். விலை உயர்ந்த மதுபான பாட்டில்களை தங்களுக்கு இலவசமாக தந்துவிட வேண்டும் என்று உத்தரவும் போட்டுவிட்டு செல்கிறார்கள். பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் பெயரைச் சொல்லி, 50க்கும் மேற்பட்ட வாலிபர்கள் ஒவ்வொரு டாஸ்மாக் கடையாக ஏறி இறங்கி வருவதைப் பார்த்து அந்தந்த பகுதி திமுக நிர்வாகிகள் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுள்ளார்கள்.
ஆளும்கட்சியான நாங்களே, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கு கட்டுப்பட்டும், திமுக.வுக்கு அவப்பெயரை தேடித் தந்துவிடக் கூடாது என்று அமைதியாக இருந்து வருகிறோம். ஆனால், எதிர்க்கட்சியாக கூட இல்லாத பாமக. நிர்வாகிகளும், எம்.எல்.ஏ அருளும், டாஸ்மாக் கடைகளை ஒட்டுமொத்த குத்தகை எடுத்ததைப் போல, மாமூல் வசூல் வேட்டையில் ஈடுபடுவதையும், பார் உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக பார் நடத்த முயற்சிப்பதும் எந்த வகையில் நியாயம் என்று பொங்குகிறார்கள். அதுவும் கடந்த பத்து வருஷமாக ஆட்சியில் இல்லாததால், ஐந்து பைசா வருமானம் இன்றி ஓட்டாண்டியாக இருந்து கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில், ஆளும்கட்சியினரை மீறி, பாமக எம்.எல்.ஏ அருள், அராஜகம் செய்வதை எப்படி பொறுத்துக் கொண்டிருக்க முடியும் என்று ஆவேசமாக, மாவட்ட நிர்வாகிகளிடமும், திமுக எம்.எல்.ஏ., ஆ.ராஜேந்திரனிடமும் குமறியுள்ளனர்.
சட்டப்பேரவை கூட்டத்தை முடித்துக் கொண்டு அமைச்சர் செந்தில்பாலாஜி இந்த வார இறுதியில் சேலம் வருவார். அவரிடம் பாமக எம்.எல்.ஏ., அருளின் அராஜகத்தை கூறி, அவரது கொட்டத்தை அடக்குவோம் என்று கூறி சமாதானப்படுத்தி வைத்திருக்கிறார்கள்..
ஆக்சிஜன் தட்டுப்பாடு என்று கூறி பிளாஸ்டிக் பையை தலையில் சுற்றிக் கொண்டு தற்கொலை நாடகம் ஆடிய பா.ம.க. எம்.எல்.ஏ. அருளின் மக்கள் சேவை இப்படிதான் இருக்குமா என்று கேள்வி கேட்கிறார்கள் சேலம் மாநகர திமுக நிர்வாகிகள்.
சேலம் மாநகரில் பாமக எம்.எல்.ஏ. அருள் டாஸ்மாக் கடைகள் மூலம் மாமூல் வசூலித்து கள்ள கட்ட தீயாக வேலைப் பார்த்துக் கொண்டிருக்க, மாவட்டத்தின் எல்லைப்பகுதியான கொளத்தூரில் திமுக ஒன்றியச் செயலாளர் மிதுன் சக்கரவர்த்தி, ஊரடங்கு நீட்டிப்பை வைத்து ஒரு கோடி ரூபாய் அளவுக்கு கள்ள மதுபானம் விற்று சம்பாதித்துவிட தீர்மானம் போட்டு, பம்பரமாக சுற்றிக் கொண்டிருக்கிறாராம். இந்த மிதுன் சக்கரவர்த்தியைப் பற்றி நல்லரசு வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமாகியிருப்பவர்தான். சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளரான டி.எம்.செல்வகணபதியின் உறவினரான கொளத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் மிதுன் சக்கரவர்த்தி, கர்நாடக மாநிலத்தில் இருந்து பரிசல் மூலம் காவிரி ஆற்றை கடந்து மதுபானங்களை மேட்டூருக்கு கடத்தி வந்து கொள்ளை விலைக்கு விற்பனை செய்த பல லட்சம் ரூபாய் சுருட்டிக் கொண்டிருக்கிறார் என்ற அதிர்ச்சிக்குரிய தகவலை நல்லரசு பதிவு செய்திருக்கிறது.
நல்லரசுவில் வெளியான செய்தி மூலம் தனது பெயருக்கு அவமானம் வந்துவிட்டதாக கருதியாக டி.எம்.செல்வகணபதி மேட்டூருக்கே சென்று மிதுன் சக்கரவர்த்தியை அழைத்து, தன்னுடைய பெயருக்கு அவமானத்தை தேடி தரும் வகையில் கள்ள மதுபானங்களை விற்று வருகிறாயே..திமுக தலைமைக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தகவல் சென்றால், தனது பதவிக்கே ஆபத்து வந்துவிடும். அதனால், கர்நாடகாவில் இருந்து மதுபானங்களை கடத்தி வரும் தொழிலை உடனடியாக நிறுத்தி விடு என்று அன்பாக எச்சரித்துள்ளார்.
ஆனாலும், அவரின் எச்சரிகையை பொருட்படுத்தாத மிதுன் சக்கரவர்த்தி, ஊரடங்குகள் முழுமையாக திரும்ப பெறுவதற்குள் ஒரு கோடி ரூபாய் பணத்தை சம்பாதித்துவிட வேண்டும் என்று இலக்கு வைத்து தீயாக மதுபானக் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார். சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூலை 5 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டிருப்பதால், பத்து நாட்களுக்குள் ஒருநாளைக்கு பத்து லட்சம் என்ற கணக்கில் ஒரு கோடி ரூபாய் சம்பாதிக்க, 50க்கும் மேற்பட்ட சிறுவர்களை சட்டவிரோத செயல்களில் இறக்கி விட்டுள்ளாராம். இந்த தொகையில் 5 லட்சம் ருபாய் மாமூலமாக கொளத்துவுர் காவல் நிலையத்திற்கு தரப்படும் என்று ஒப்பந்தம் போட்டு இருப்பதாலும், மிதுன் சக்கரவர்த்தியின் சட்டவிரோத செயல்களை காவல்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லையாம்.
இப்படி ஆளும்கட்சி நிர்வாகிகளை விட அதிகளவு பணத்தை சட்டவிரோமாக சம்பாதிக்க ஆர்வமாக இருக்கும் காவல்துறை அதிகாரிகளை கடந்த 24 ஆம் தேதியன்றுதான் உளவுப்பிரிவின் கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ்.ஸும், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஐபிஎஸ்.ஸும் காணொளி வாயிலாக எச்சரித்து உள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிக நெருக்கமாக இருக்கும் இரண்டு காவல்துறை உயரதிகாரிகளின் எச்சரிக்கைகளைப் பற்றி துளியும் கவலைப்படாமல், கடத்தல் கும்பலுக்கு ஆதரவாகதான் செயல்பட்டுக் கொள்டிருக்கிறார்கள் கொளத்தூர் காவல்துறை அலுவலர்கள். அவர்களின் கண்களுக்கு முன்பு நிற்பது கரன்ஸி நோட்டுகள் தானே தவிர, காவல்துறைக்கு உரிய கண்ணியம் தெரியவில்லை என்கிறார்கள் சேலத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள்.