Sun. Nov 24th, 2024

கொங்கு மண்டலம் உள்பட தமிழகம் முழுவதும் திமுக.வில் அதிரடி மாற்றங்களை செய்ய, அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் முடிவெடுத்துவிட்டதாகவும், குறிப்பாக கோவை மாவட்டத்தில் நிர்வாகிகள் கூண்டோடு காலியாக உள்ளதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் திமுக.வின் வெற்றிக்கு கடுமையாக உழைக்காமல் அலட்சியமாக இருந்த மாவட்டச் செயலாளர்களை, பொறுப்பாளர்களை நீககிவிட்டு இளம் ரத்தம் பாய்ச்சவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தயாராகிவிட்டார். புதிய பொறுப்பாளர்களுக்கான பட்டியலும் தயாரிக்கப்பட்டுவிட்டதாகவும் திமுக தலைமைக்கு நெருக்கமான தலைமைக் கழக நிர்வாகிகள் தகவல் தெரிவிக்கின்றனர். அதன் எதிரொலியாகதான், நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், மாவட்டச் செயலாளர்கள் பலர் மீது புகார்கள் வந்துள்ளது.அவர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என சூசகமாக தெரிவித்து விட்டதையும் அந்த முன்னணி நிர்வாகி சுட்டிக்காட்டுகிறார்.

கோவை மாவட்டத்தை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் திமுக.வுக்கு கடும் சரிவு ஏற்பட்டதற்கு திமுக செயலாளர்கள், பொறுப்பாளர்களிடையே நிலவும் கோஷ்டிப் பூசல்தான் முக்கிய காரணம் என்பதை, அந்தந்த மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் கண்டறிந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கூறியிருக்கிறார்கள். அவர்கள் கூறிய தகவல்களை கேட்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

பத்தாண்டு கால அதிமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதி திமுக.தான் மீண்டும் ஆட்சிக்கு வரும், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் ஆட்சியை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலிதான் அமைக்கப்போகிறார். ஆட்சியின் அரியணையை மு.க.ஸ்டாலின்தான் அலங்கரிக்கப் போகிறார் என்று உறுதியாக தெரிந்த பிறகும் கூட கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த திமுக பொறுப்பாளர்கள் பலர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி உள்ளிட்டோரிடம் விலை போய் விட்டார்கள் என்று தற்போதைய திமுக அமைச்சர்கள் வாசித்த புகார் பட்டியலைக் கேட்டுதான் கொந்தளித்து இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.


கொங்கு மண்டலம் உள்பட திமுக.வுக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு பறிபோன மாவட்டங்களில் தலைமைப் பொறுப்பில் இருக்கிற நிர்வாகிகளை மாற்றம் செய்யும் முடிவுக்கு வந்துவிட்டார் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸடாலின் என்று கூறும் கொஙகு மண்டல திமுக முன்னணி நிர்வாகிகள், கோவை மாவட்டத்தில் தலைமைப் பொறுப்பில் உள்ள அனைத்து பொறுப்பாளர்களும் நீக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்கிறார்கள்.
இதேபோல, சேலம் மாவட்டத்திலும் திமுக.வுக்கு படுதோல்வியைத் தேடி தந்த திமுக மாவட்ட பொறுப்பாளர்களில் 3 பேரை அதிரடியாக நீக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானித்துவிட்டார் என்றும் அதில் ஒருவர் டி.எம்.செல்வகணபதி என்பதும்தான் அதிர்ச்சிக்குரிய தகவல் என்கிறார்கள் அந்த மாவட்டத்தில் உள்ள மூத்த திமுக நிர்வாகிகள்.

டி.எம்.செல்வகணபதி மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்ததாகவும், ஆளால் அதற்கு ஏற்ப டி.எம்.செல்வகணபதி நடந்து கொள்ளவில்லை என்பதையும் தேர்தல் முடிவுகள் வெளிச்சம் போட்டு காட்டி விட்டதாக கூறும் அதே மூத்த நிர்வாகி, சேலம் மாவட்டத்திற்கு கொரோனோ தடுப்புப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும், டி.எம்.எஸ்..ஸுக்கு எதிராக அதிருப்தியோடு இருப்பதும் முக்கிய காரணம் என்கிறார்.


அரசியலிலும், ஆட்சி அதிகாரத்திலும் தன்னை விட சீனியரான டி.எம்.செல்வகணபதியிடம் கட்சிப் பணியை வேகப்படுத்துவது தொடர்பாக ஆலோசிப்பதே தர்மசங்கடமாக இருப்பதாகவும், வயதான மூத்த நிர்வாகிகளை தவிர்த்துவிட்டு இளைஞர்களை மாவட்ட அளவிலான பொறுப்பில் நியமித்து, கட்சிப் பணிகளை துரிதப்படுத்தினால் மட்டுமே சேலம் மாவட்டத்தில் திமுக இழந்த செல்வாக்கை மீண்டும் திரும்ப பெற முடியும் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் வெளிப்படையாகவே அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துவிட்டதாக அதே மூத்த நிர்வாகி உறுதிபட கூறுகிறார். மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து டி.எம்.செல்வகணபதி நீக்கப்படுவது உறுதியாகிவிட்ட நிலையில், மற்றொரு பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கமா அல்லது எம்.எல்.ஏ. ராஜேந்திரனா என்பது உறுதியாக தெரியவில்லை என்கிறார்.


கடந்த 2016 மற்றும் 2021 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் வெற்றிப் பெற்று எம்.எல்.ஏ.வாக இருக்கும் சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஆ.ராஜேந்திரனுக்கு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் ஆசிர்வாதமும் ஆதரவும் முழுமையாக உள்ளதால், அவர் எப்படியும் தனது பதவியை தக்க வைத்துக் கொள்வார் என்றும், மேற்கு மாவட்டத்தைப் போலவே, சேலம் கிழக்கு மாவட்டத்திலும் அனைத்து தொகுதிகளிலும் தோல்வி ஏற்பட்டதையடுத்து, அந்த மாவட்ட பொறுப்பாளரான எஸ்.ஆர்.சிவலிங்கத்தை, கட்சிப் பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கு அதிகமான வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறார்கள் அந்த மாவட்ட மூத்த நிர்வாகிகள்.


கோவை, சேலம் வரிசையில் தருமபுரியிலும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு கல்தா வழங்க,திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனையில் இருப்பதாகவும், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் தகவல்களை கசிய விடுகின்றனர்.
இதேபோல, வடக்கு, டெல்டா, தென் மாவட்டங்களிலும் ஒன்றிரண்டு மாவட்ட திமுக பொறுப்பாளர்களை நீக்கிவிட்டு, அந்த பதவிகளுக்கு எல்லாம் இளைஞர் அணியில் அர்ப்பணிப்போடு ஈடுபட்டு வரும் துடிப்பும், விசுவாசமும் அதிகமுள்ள நிர்வாகிகளை நியமிக்க முடிவெடுத்துவிட்டார் மு.க.ஸ்டாலின் என்றும் அதற்கான அறிவிப்பு விரைவாக வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்கள் அண்ணா அறிவாலயத்தோடு நெருக்கமாக உள்ள திமுக முன்னணி நிர்வாகி ஒருவர்.

50 நாட்களில் ஆட்சியில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக.வில் உள்ள களைகளை பிடுங்கி எறிந்துவிட்டு இயக்கத்திற்கு இளம் ரத்தம் பாய்ச்ச தயாராகிவிட்டார் போல…. பலே..பலே…